You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சோமாலியாவில் 20 லட்சம் பேருக்கு போதிய உணவு, குடிநீர் இல்லை - ஐநா

சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழை பொழிவு இல்லை. எனவே நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. "சென்னை அணியின் தலைவராக தோனியே தொடர வேண்டும்": மு.க. ஸ்டாலின்

    எத்தனை சீஸன்கள் வந்தாலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகத் தொடர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது கடைசி ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்குமென சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருக்கிறார்.

    2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல்லின் தலைவரான பிரிஜேஷ் பட்டேல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  3. ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க ஒப்புக்கொண்ட தாலிபன்கள்

    ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சம்பள பாக்கி வழங்கப்படும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    சென்ற ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம் , இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்படும் என ஆப்கானிஸ்தான் நிதியமைச்சகம் கூறியுள்ளது என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிகுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமியவாத அமைப்பான தாலிபன் ஆட்சிக்கு வந்தபின்பு, ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் சம்பள பாக்கியை வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

  4. மதுரை பெரியார் பேருந்து நிலையப் பணிகள் 95 சதவீதம் நிறைவு

    மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் 1,200கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார்பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் 57 பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து மேலவாசல் பகுதியில் கட்டப்படும் முல்லைப்பெரியாறு குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நகர பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, மதுரை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. கால்நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி பெரியார் பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன. பேருந்து நிலைய பணிகளில் எந்த மாற்றம் இல்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

    மதுரை மாநகர் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மதுரையில் 328 சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  5. அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்

    மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது.

    திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன.

    இந்நிலையில் இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  6. 12 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் நாகை மீனவர்கள்

    கடந்த 12 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைத்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

    கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத்துறை மூலம் இன்று கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

    இதனையடுத்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ்கட்டி, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவைகளை சேகரித்துக் கொண்டு மீனவர்கள் 12 நாள்களுக்குப் பிறகு நம்பிக்கையோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள்.

  7. சோமாலியாவில் 20 லட்சம் பேருக்கு போதிய உணவு, குடிநீர் இல்லை - ஐநா

    சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழை பொழிவு இல்லை. எனவே நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது. சோமாலியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக போர்கள் நடந்து வருகின்றன. அது போக கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும் .