You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆஸ்ட்ரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை: நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிப்பு

ஐரோப்பா முழுவதுமேகொரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இத்துடன் இன்றைய நேரலை முடிவடைந்தது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. "தே.ஜ.கூ மீதான மாயை உடைய ஆரம்பித்திருக்கிறது": ஏ.எஸ். பன்னீர்செல்வம்

    பஞ்சாப், உத்தரப் பிரதேசத் தேர்தல் நெருக்கத்தில் இல்லையென்றால் இந்தப் போராட்டத்திற்கு அரசு செவி கொடுத்திருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த இரு மாநிலத் தேர்தல்கள்தான் இந்த நடவடிக்கைக்கு முக்கியமான காரணம். பஞ்சாபில் இந்தப் பிரச்சனை மிக முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உத்தரப்பிரதேசத்திலும் இது எதிரொலிக்கும் என்பது இப்போது தெரிந்திருக்கிறது.

    உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் ஆதரவாக இருப்பது ஜெயந்த் சவுத்ரியின் லோக் தளம்தான். இந்த லோக் தளம் கட்சியின் அடிப்படையே விவசாயிகள்தான். ஆகவே, ஜாட்கள் மற்றும் லோக் தளம் கட்சி ஆகியவற்றால் உத்தரப்பிரதேசத்திலும் இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது புரிந்திருக்கிறது. இந்த இரண்டு பெரிய மாநிலங்களில் பின்னடைவைச் சந்திக்க தயாராக இல்லை என்பதால் இந்தச் சட்டத்தை அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள்.

    அடிப்படையில் இந்தச் சட்டங்களே அரசியல் சாஸனத்திற்கு எதிரானவை. மக்கள் போராடித்தான் இவற்றை நீக்க வேண்டுமென்பதில்லை. இவற்றை நீதிமன்றங்களே நீக்கியிருக்க வேண்டும். மாநில அரசின் கீழ் உள்ள இந்த விவகாரங்களில் மத்திய அரசு சட்டத்தை இயற்றியது. இதுவே அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது. ஆனால், நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், போராடிய மக்கள் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். "எங்கள் உரிமைகள் குறித்து நீங்கள் முடிவெடுக்காதீர்கள்" என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. அதற்காகத்தான் அதற்கென ஒரு துறையை உருவாக்கி, சட்டமுன் வரைவுகளையெல்லாம் உருவாக்க ஆரம்பித்தார்கள். அதுவும் மாநில அரசின் துறைதான். இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, மத்திய அரசின் தலையீட்டை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தும். இந்த ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரம் மத்தியில் குவிவதற்கு எதிராக நடந்த முதல் நடவடிக்கை இதுதான்.

    எப்போதுமே இரண்டாவது ஆட்சிக் காலம் என்பது சிரமமானது. முதல் ஆட்சிக் காலத்தில் உருவான பல பிம்பங்கள் இதில் உடையும். இது ஐ.மு.கூவுக்கு மட்டுமல்ல தே.ஜ.கவுக்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. தே.ஜ.கூவின் முதல் ஆட்சிக் காலத்தில், இவர்களுக்கு சாணக்கியர்கள் என்ற பிம்பம் கிடைத்தது. என்ன செய்தாவது ஆட்சியை அமைத்துவிடுவார்கள் என தோற்றம் இருந்தது. ஆனால், அது உண்மையில்லை என்பதை மகாராஷ்டிரம் காண்பித்தது. அங்கு பா.ஜ.கவை ஒதுக்கிவிட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தார்கள்.

    இப்போது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை திரும்பப்பெற வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டத்திற்கு பா.ஜ.க. வந்திருக்கிறது. இவர்கள் கொண்டுவந்த எந்தச் சட்டத்தையும் இவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிஏஏவைச் செயல்படுத்த முடியவில்லை. என்.ஆர்.சியைச் செயல்படுத்த முடியவில்லை. இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் விலக்கிக்கொள்கிறார்கள்.இவர்களால் செயல்படுத்த முடிந்த விஷயங்களும் சிக்கலானதாகத்தான் முடிந்தன. முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. அது ஒரு தோல்விகரமான நடவடிக்கை. ஜிஎஸ்டி அமலாக்கம் - அதுவும் தோல்வி. அதாவது, இவர்கள் எதையாவது செயல்படுத்தினால் அது தோல்வியில் முடிகிறது. செயல்படுத்தாவிட்டால் நன்மையாக இருக்கிறது. ஆகவே முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் உருவான மாயை இப்போது விலகிக்கொண்டிருப்பதைத்தான் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.

    இப்போது பா.ஜ.கவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறதா என்று கேட்கக்கூடாது. A இல்லையென்றால் Bதான் ஒரே வாய்ப்பு என்று அர்த்தமல்ல. மக்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். Cஐ மக்கள் தேர்வுசெய்யலாம். Dஐத் தேர்வுசெய்யலாம்.

    மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்கள் தந்த செய்திகளின்படி பார்த்தால் மம்தாவுக்கு அருகில் பா.ஜ.க. இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மம்தாவுக்கும் பா.ஜ.கவும் இடையிலான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி என்பதைப் புரியவைத்துவிட்டது. பஞ்சாபைப் பொறுத்தவரை, இது காங்கிரசிற்குப் பயன்படும். உத்தரப்பிரதேசத்தில் ஜெயந்த் சவுத்ரியும் அகிலேஷும் இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

    மக்கள் விரும்பவில்லையென உணர்ந்து பா.ஜ.க. அரசு இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டதாகவும் இது பா.ஜ.கவுக்கு சாதகமானதாகவும் இருக்குமென அக்கட்சியின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், இவர்களுடைய அரசியல் என்பது தங்களைத் தைரியசாலிகள் என மார்தட்டிக்கொள்ளும் அரசியல். நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று சொல்லும் அரசியல். அப்படியிருக்கும்போது நிதர்சனத்தை உணர்ந்து இதைச் செய்தோம் என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

    சமீபத்தில் இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வியையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதும் இப்போது இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதும் மிக முக்கியமான அரசியல் செய்தியைச் சொல்கிறது. அதாவது, தே.ஜ.கூவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆதரவு தொடர்ந்து சரிந்துவருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. 2016க்குப் பிறகு நடந்த பல விஷயங்களுக்கு மக்கள் இப்போதுதான் பதிலளிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

    இப்போதுதான் பண மதிப்பழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை சரியில்லை என்பது மக்களுக்குப் புரிகிறது. வளர்ச்சி என்பது நடக்கவில்லையென்பது புரிகிறது. இதை மக்கள் உணர்ந்து வெளிப்படுத்த இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.

  3. நரேந்திர மோதி பேசியது என்ன?

    விவசாய சட்டங்கள் ரத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசினார்?

  4. ஆஸ்ட்ரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை: நாடு முழுவதும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள்

    ஆஸ்ட்ரியாவில்கொரோனாதொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்ககட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேற்கு ஐரோப்பாவில் மிகுந்த குறைந்த எண்ணிக்கையில்ஆஸ்ட்ரியாவில்தான்தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

    ஐரோப்பா முழுவதுமேகொரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மேலும்செக்குடியரசு,ஸ்லோவாக்கியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஜெர்மனியில் தடுப்பு மருந்துஎடுத்துக்கொள்ளாதவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கொரோனாதொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின்சான்சலர்ஏங்கலாமெர்கல்நேற்று தெரிவித்திருந்தார்.

    ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக52ஆயிரத்து826பேருக்குகொரோனாதொற்று ஏற்பட்டது.

    பெல்ஜியத்தில் 12வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமேமுகக்கவசம்அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது10வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும்முகக்கவசம்அணிய வேண்டும் என்றுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ஃபிரான்ஸில் கொரோனாதொற்றின் ஐந்தாம் அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்திலிருந்து தொடங்கி நேற்று அதிக எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆனால் அங்கு தற்போது நடைமுறையில் இருக்கும்கோவிட்பாஸ்போட்களைதாண்டி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. விவசாயிகளின் போராட்ட களத்தில் இருந்து நேரலை

    வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி சிங்கு எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டக் களத்தில் இருந்து பிபிசி தமிழின் நேரலை.

  6. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள கொட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டாறின் அருகே வசித்து வந்த 18 பேர், பாதுகாப்பு காரணத்திற்காக அருகே உள்ள அஜீசியா தெருவில் வசித்து வரும் ஹபீப் என்பவரது மாடி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர்.

    தொடர் மழையால் பலவீனமாக இருந்த அந்த வீடு இன்று காலை 6.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உள்பட 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த 9 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையிலும், வேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

    கைத்தரி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற அறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இது குறித்து பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடிந்து விழுந்த வீடு கட்டப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆன காரணத்தால் எளிதில் இடிந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சமும், காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்யப்படுமென தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

  7. தமிழக விவசாயிகள் கொண்டாட்டம்

    வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற நரேந்திர மோதியின் அறிவிப்பை பட்டாசு, இனிப்புகளுடன் கொண்டாடும் தமிழ்நாடு விவசாயிகள்.

  8. ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வுப் பெறுவதாக அறிவிப்பு

    அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வுப் பெறுவதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

  9. மோதியின் பின்வாங்கும் அறிவிப்பு ராஜதந்திரி போன்றதொரு முடிவு - அமித் ஷா

    “இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வேளாண் மசோதாக்கள் தொடர்பான அறிவிப்பு வரவேற்கத்தக்கது மற்றும் ராஜதந்திரி போன்ற அறிவிப்பு.

    பிரதமர் குறிப்பிட்டது போல, இந்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவை செய்யும், எப்போது அவர்களின் உழைப்பில் அவர்களுக்கு உதவும்” என இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

  10. வேளாண் சட்டங்கள்: கூட்டத்தொடர் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுங்கள் - மு.க. ஸ்டாலின்

    "நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பராக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை அறிவித்திருப்பதை மனபூர்வமாக வரவேற்கிறேன். இது கடந்த ஓராண்டுகாலமாக இம்மூன்று சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய வேளாண் பெருங்குடி மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை இந்தியா முழுக்க நடந்துவந்த இடைவிடாத போராட்டமே மனமாற்றம் செய்து இறங்கி வர வைத்தது என்று கூறியுள்ளார்.

    இந்த மூன்று சட்டங்களும் கொண்டுவரப்பட்டபோது தொடக்க நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தோம். மக்கள் மன்றத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழவர் சங்கங்கள் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டோம். சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தோம். மூன்று சட்டங்களுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் போடச் சொன்னோம். ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சி அதைச் செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இன்னும் சொன்னால் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பரப்புரையில் ஈடுபட்டது. அந்தச் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களை வாதத்திற்கு அழைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. பா.ஜ.க.வைவிட அதிகமாக அவர்தான் ஆதரித்தார். இவரை அழைத்துச் சென்று டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு விளக்கம் சொல்ல வைக்கலாமே என்று நான் அப்போது சொன்னேன். அந்தளவுக்கு அ.தி.மு.க. அந்தச் சட்டங்களை ஆதரிப்பதில் தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியது. உழவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலை. அது குறைந்தபட்சம் சொல்லாகக் கூட இல்லை. அதனை வேளாண் சட்டம் என்று சொல்வது கூட தவறானது. அது உழவர்களை நிலங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம் ஆகும் என்று மிகத் தெளிவாக முடிவெடுத்த தி.மு.கழகம் இச்சட்டங்களை எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் என்று சொன்னோம். அதன்படி கழக ஆட்சி அமைந்ததும் 28.08.2021 அன்று நானே முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஓராண்டுகாலமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னதே சரியானது என்பதை இப்போது பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானது தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலம் இடைவிடாது போராடி வரும் உழவர் பெருங்குடி மக்களின் தியாகம்தான். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் டெல்லிக்கு வந்து நேரடியான போராட்டத்தை உழவர்கள் தொடங்கினார்கள். ஓராண்டு காலத்தை எட்டுவதற்கு இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ளன. நவம்பர் 26-ஆம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உழவர் சங்கங்கள் தயாராகி வந்தன.

    வெயிலையும் மழையையும் நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், உணவைப் பற்றிக் கவலைப்படாமல், உடல்நலனைப் பற்றி கவலைப்படாமல் உழவர்கள் போராடினார்கள். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். ஆனாலும் தங்களது போராட்டக் குணத்தை விடாமல் கடைப்பிடித்தார்கள் உழவர்கள். உழவர்கள் போராட்டம் நவம்பர் 26-க்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கும் என்பது தெரிந்தோ, அல்லது நடக்க இருக்கும் சில மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தோ இத்தகைய முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இவ்வளவுப் போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகுதான் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், திரும்பப் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.

    நாடாளுமன்றத்தில் முறையாக இம்மூன்று சட்டங்களும் திரும்பப் பெறக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய உழவர்களை அழைத்து ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி அளித்து, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக உழவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இந்திய வேளாண்மை செழிக்க வேண்டுமானால் அது உழவர்களின் மூலமாகத்தான் செழிக்க வேண்டும். அதற்கு அடித்தளமான ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை இனியாவது ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் எனவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் வெள்ள சேதங்களை பார்வையிடும் மத்திய குழு விவரம் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான ஏழு பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த குழுவில் ஆர்.பி.கவுல் (நிதி), விஜய் ராஜ்மோகன் (வேளாண்), ஆர். தங்கமணி (நீர்வளம்), பாவ்யா பாண்டே (மின்துறை), ரனஞ்செய் சிங் (சாலை போக்குவரத்து), எம்.வி.என்.வரபிரசாத் (கிராமப்புற வளர்ச்சி) ஆகியோர் இடம்பெறுவர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த குழுவினர் தமிழகத்துக்கு விரைவில் செல்வதற்கு முன்பாக தங்களுக்குள் கூடி மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்வது, எத்தனை குழுவாக பிரிந்து செல்வது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்கள் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  12. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது - நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்

    “விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது.

    போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து,ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல. களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும்.” என தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

  13. விவசாய மசோதா வாபஸ் பெறப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடும் விவசாயிகள்

    மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை இன்று பிரதமர் நரேந்திர மோதி திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இது ஒராண்டு காலமாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன் கூறினார்.

    மேலும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் திருத்த திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  14. விவசாய மசோதாக்களை ரத்த செய்தமைக்காக பிரதமருக்கு நன்றி - அய்யாக்கண்ணு

    பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் எனும் அரிவிபு, எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, அதை இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் முழு மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறோம், நன்றி கூறி பாராட்டுகிறோம்.

    எங்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இன்றோடு முடித்துக் கொள்கிறொம் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

  15. போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - மமதா பானர்ஜி

    மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, விவசாயிகள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும், இறந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

    “பாஜகவின் கொடூரமான செயல்களுக்குப் பிறகும், விடாபிடியாக போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இது உங்கள் வெற்றி. இப்போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என மமதா பானர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

  16. வென்றது விவசயிகள் போராட்டம், வீழ்ந்தது வேளாண் சட்டங்கள் - தயாநிதி மாறன்

    விவசாய சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டத்தைப் பாராட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்

    “வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்!

    வீழ்ந்தது- மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 #வேளாண் சட்டங்கள்!

    தெரிவது- வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம்!

    அடுத்தது? இதேபோல் இந்திய #குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப் பெறப்படுமா?”

  17. விவசாய சட்டங்கள் உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது - அசோக் கெலாட்

    மூன்று விவசாய சட்ட மசோதாக்கள் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

    “விவசாயிகளின் போராட்டம் பலன் கொடுத்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சூழலை வைத்துப் பார்க்கும் போது, மூன்று வேளாண் சட்டங்களை பின்வாங்க பிரதமர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இன்று எடுக்கப்பட்டுள்ள முடிவு உத்தரப் பிரதேச தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் பாஜக எதையாவது செய்து தேர்தலை வெல்ல முயல்கிறது. மேற்கு வங்கத்தைப் போல பாஜக அதிர்ச்சிகளைக் கூட எதிர்கொள்ளலாம்” என அசோக் கெலாட் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  18. விவசாய உற்பத்திக்கான லாபகர விலை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை - சம்யுக்த் கிஷான் ஏக்தா மோர்ச்சா

    “இந்திய அரசின் இந்த முடிவை சக்யுக்த் கிஷான் ஏக்தா மோர்ச்சா அமைப்பு வரவேற்கிறது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் செயல்படுத்தப்படுவதற்காக எஸ்.கே.எம் காத்திருக்கும். இது நடந்தால் ஓராண்டு கால இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இருக்கும்.

    இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட 700 விவசாயிகள் தங்கள் உயிரைத் துறந்துள்ளனர். இந்திய அரசின் பிடிவாதம்தான், லகிம்பூர் சம்பவம் உட்பட, இந்த தவிர்த்திருக்கக் கூடிய மரணங்களுக்குக் காரணம்.

    விவசாயிகளின் இந்த போராட்டம் வெறுமனே மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்படுவதற்கு மட்டுமல்ல, அனைத்து விவசாய உற்பத்திக்கும் லாபகரமான விலையை உருதி செய்வதற்கும்தான் என்பதை பிரதமருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். அக்கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என சக்யுக்த் கிஷான் ஏக்தா மோர்ச்சா அமைப்பு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படும் வரை போராடுவோம் - ராகேஷ் திகைத்

    மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகும், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவிருப்பதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    “இந்திய நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் திரும்பப் பெறப்படும் வரை விவசாயிகள் தொடர்ந்து போராடுவர். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்ட வரைவு உருவாக்கப்பட வேண்டும். இது விவசாயிகளின் வெற்றி. இந்த வெற்றி போராட்டத்தில் உயிர் நீத்த 750க்கும் மேற்பட்ட விவசாயிகள், போராட்டத்தில் பங்கெடுத்த மலைவாழ் மக்கள், தொழிலாளர்கள், பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்” என அவர் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, வேளாண் சட்டங்கள்: பிரதமரின் அறிவிப்பு உழவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: மு.க. ஸ்டாலின்

    வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட அறிவிப்பு, முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.