இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று,(02) மாலை இலங்கை சென்றடைந்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்( ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றார்.
இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், எதிர்வரும் 5ம் தேதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை அவர் சந்திப்பார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகின்றது. இன்று அவர் கண்டிக்கு பயணம் சென்றுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு (பெளத்த விஹாரை) இன்று முற்பகல் சென்ற அவர், அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா, பதவியேற்றதன் பின்னர், இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.