ஆப்கானிஸ்தான்: காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

கடந்த மாதம் பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், புதிய தாலிபன் உறுப்பினர்களுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்னும் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர் தாலிபன்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஐரோப்பிய ஒன்றியம் தாலிபனை அங்கீகரிக்காது

    ஐரோப்பிய ஒன்றியம் தாலிபனை ஆப்கானிஸ்தானின் புதிய அரசாக அங்கீகரிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

    அதேபோன்று அமெரிக்காவும் தாலிபனை அங்கீகரிக்கப்போவதில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்ததது. அதேபோன்று பிரிட்டனும் தாலிபனை அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா மற்றும் சீனா சற்று தாராளவாத போக்கை கடைபிடிக்கும் என தெரிகிறது.

    ஓரிரு நாட்களில் தாலிபன்கள் புதிய அரசு குறித்தும் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதேபோன்று தாலிபன்களுடனான எந்த தொடர்பும் கடுமையான நிபந்தனைகளின் பெயரில்தான் இருக்கும் என்றும், அது ஆப்கன் மக்களுக்கு உதவுவதாகதான் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வெளியுறவு விவகார தலைவர் ஜோசெப் போர்வெல் தெரிவித்துள்ளார்.

  3. `தாலிபனுடன் ரஷ்யா தொடர்பில் உள்ளது`

    putin

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது ஒரு `பேரழிவு` என்றும் மனிதநேய பேரழிவு அது என்றும், இதற்கு முன் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பில் எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அது காட்டுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகத்தை திணிக்க முயலும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் காபூலுக்கான ரஷ்ய தூதர், RIA செய்தி முகமையிடம் தாலிபனின் புதிய அரசாங்கத்தின் முக்கிய நபர்களுடன் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதேபோன்று புதிய அரசுக்கு ஆயுதங்களை வழங்கும் எந்த திட்டமும் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு நாகரிக குடும்பத்துக்குள் நுழைய வேண்டும் என தாலிபன்களுக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார்.

  4. தாலிபன்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

    பெண்கள் போராட்டம்

    பட மூலாதாரம், Reuters

    women's protest

    பட மூலாதாரம், Reuters

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தாலிபன்களின் கடுமையான இஸ்லாமியவாத விதிகளுளின் கீழ் பெண்களின் உரிமைகள் குறித்த பல செய்திகளை வெளியிட்டுள்ளோம்.

    காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு முன் பெண்கள் பலர் போராடுவது போன்ற புகைப்படங்களை நம்மால் பார்க்கப்படுகிறது.

    தாலிபன்களின் ஆட்சிகளின் கீழ் பெண்களின் நிலை குறித்து ஐநாவும் கவலை தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த முறை தாலிபன்கள் ஆட்சி செய்யும்போது, பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என்று கூறினர். 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பள்ளிக்கு செல்வதை தாலிபன்கள் தடை செய்தனர்.

    தற்போது ஷரிய சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்யப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் அது குறித்து அவர்கள் எதுவும் விளக்கவில்லை.

    கடந்த மாதம் பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், புதிய தாலிபன் உறுப்பினர்களுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்னும் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

  5. கடலூரில் மூன்று ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று

    பள்ளிகள் திறந்து மூன்று நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியைகளுக்குகொரோனா தொற்று.

    தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, மற்றும் 12 ஆகிய வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அரசு‌ மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மூன்று ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதது.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து ஆசிரியை பயன்படுத்திய அறையை மூடியதோடு சக ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து இன்று கடலூர் மாவட்டம் ‌நெய்வேலி என்.எல்.சி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மற்றொருவர் உடற்பயிற்சி ஆசிரியர். இவர்கள் இருவரும் தற்போது நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளியில் பிற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  6. பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது அவர் பயின்ற பள்ளியின் வகுப்பறைகள்மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்பறைகள் திறந்து பாடங்கள் நடைபெற்றுவந்தது இந்த சூழலில் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் பயிலும்மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இதில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று அந்த மாணவி இருந்த வகுப்பறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது

    இதைத்தொடர்ந்து சுமார் 250 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் மருத்துவர்கள் முபீன் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோர் மாணவ மாணவிகள் இடையே கொரோனா குறித்து உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .

  7. இரவில் புதுவைக்கு தனியாக வரும் பெண்களுக்கு பிரத்யேக நான்கு சக்கர வாகனம்

    நமசிவாயம்.
    படக்குறிப்பு, நமசிவாயம்.

    புதுச்சேரிக்கு இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து தனியாக வரும் பெண்களுக்கு பிரத்தியேக நான்கு சக்கர வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரியில் 15வது சட்டபேரவைக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று மானிய கோரிக்கையில் நடைபெற்ற விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்: இரவில் பெண்கள் பயணிக்க இலவச கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.இதன் மூலம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்குத் தனியாக வரும் பெண்களுக்கு பிரத்யேக நான்கு சக்கர வாகனம் இயக்கப்படும்.

    இந்த உதவி தேவைப்படும் பெண்கள் 112 என்ற எண்ணை அழைத்தால் பெண் காவலர் ஒருவர் உதவியுடன் நான்கு சக்கர வாகனத்தில் அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விடப்படுவார்கள்.அனைத்து காவல் நிலையங்களையும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி மற்றும் போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் நமசிவாயம்.

  8. நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ?

    சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

    "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங்.

    குழந்தையாக இருக்கும்போதே தமது கைகளை இழந்த ஜெங், டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி பதங்கங்கள் வென்றார். இவை அனைத்துமே உலக சாதனை அல்லது பாராலிம்பிக் போட்டி அளவிலான சாதனைகள்.

  9. "காஷ்மீர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு"

    ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. நியூசிலாந்தில் 6 பேரை குத்திய இலங்கையர் சுட்டுக் கொலை: 'தீவிரவாத தாக்குதல்'

    தீவிரவாதத் தாக்குதல் என்று நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்ட தாக்குதல் நடந்த சூப்பர் மார்க்கெட்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தீவிரவாதத் தாக்குதல் என்று நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்ட தாக்குதல் நடந்த சூப்பர் மார்க்கெட்.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கை நாட்டவர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    போலீஸ் கண்காணிப்பில் இருந்த அந்த இலங்கை நாட்டவர் செய்தது தீவிரவாத தாக்குதல் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

    அந்த நபரின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட ஆர்டென், இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதக் குழுவினால் ஊக்கம் பெற்று அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

    அந்த நபர் தாக்குதலில் ஈடுபட்ட 60 விநாடிகளில் அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

    "இன்று நிகழ்ந்தது வெறுக்கத்தக்கது. இது வெறுப்புணர்வு நிறைந்த செயல், தவறான செயல்," என்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.

    "இந்த செயல் எந்த நம்பிக்கையின் சார்பாகவும் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்டது." என்றும் அவர் குறிப்பிட்டார்.

  11. சீன மாணவர்களுக்கு கீழடி பற்றி பாடம்

    நிறைமதி

    பட மூலாதாரம், facebook

    ஃபேஸ்புக்கில் தமிழில் இயங்கும் சீனப் பெண்ணான நிறைமதி என்கிற கிக்கி ஜாங் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கிறார். தமிழ் பேசுவதற்காகவும், தமிழில் எழுதுவதற்காகவும் தமிழ் சமூக ஊடகப் பரப்பில் மிகவும் பிரபலமடைந்த இவர், கீழடி (அகழாய்வுத் தளம்) பற்றி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  12. டோக்யோ பாராலிம்பிக்ஸ் - அவனி லெகரா வெண்கலம் வென்றார்

    அவனி லெகரா

    பட மூலாதாரம், REUTERS/ISSEI KATO

    படக்குறிப்பு, அவனி லெகரா

    டோக்யோ பாராலிம்பிக்சில், R8 பெண்கள் 50 மீட்டர் ரைஃபிள் 3P SH1 போட்டியில் இந்தியாவின் அவனி லெகரா வெண்கலப் பதக்கம் வென்றார். இவர், இந்த பாராலிம்பிக்சில் ஏற்கெனவே, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

  13. பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் பிரவீன் குமார்

    பிரவீன்

    பட மூலாதாரம், Getty Images

    டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் T64 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    2.07 மீட்டர் உயரம் தாண்டி அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இது ஆசிய சாதனையாக அமைந்தது.

    இந்தப் போட்டியில் பிரிட்டனின் ஜோனாதன் எட்வர்ட்ஸ் 2.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

    பிரவீன் குமார் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்ந்து டோக்யோ பாராலிம்பிக்ஸில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 உயர்ந்திருக்கிறது. இவற்றில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்

  14. நீரில் மூழ்கிய நியூயார்க், நியூஜெர்சி: பலி எண்ணிக்கை 41-ஆக உயர்வு

    புயல்

    பட மூலாதாரம், Getty Images

    இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

    வெள்ளத்தால் இதுவரை 41 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தரைத்தளத்தில் வசிக்கும், கார்களில்சென்று கொண்டிருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

    நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டனர்.

    நியூயார்க் நகரத்தில் இரண்டு வயதுச் சிறுவன் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் தரைத் தளத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கிக் கொண்டவர்கள்.

    இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.