ராமநாதபுரம் வந்தடைந்த பாகிஸ்தான் போர் வெற்றி நினைவுச்சுடர்

பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர்களுக்கு வெற்றிச்சுடருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை குறிக்கும் வெற்றிச்சுடர் இன்று ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமுக்கு வந்தடைந்தது. இதையொட்டி சிறப்பு அணி வகுப்பு நடைபெற்றது.
1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 50 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் விதமாக வெற்றிச்சுடர் ஒன்று இந்தியா முழுவதும் போரில் பங்கேற்று உயிரிழந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு செல்லும் பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்ட இந்த வெற்றிச்சுடர், தமிழகத்தின் தூத்துக்குடி ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்துக்கு நேற்று மாலை வந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்புடன் கமெண்டர் வெங்கடேஷ்ஐய்யர் வெற்றிச்சுடரை பெற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் ராணுவ வீரர்களும் வெற்றிச்சுடருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அதன் பின்னர் டிஐஜி அலுவலகத்திலும் வெற்றிச்சுடர் கொண்டு செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இருவரின் வீடுகளுக்கு வெற்றிச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது.
நாளை வியாழக்கிழமை நண்பகலில் இந்த வெற்றிச்சுடர் தனுஷ்கோடிக்கும், அங்கிருந்து அப்துல் கலாம் தேசிய நினைவக அருங்காட்சியகம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உரிய மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், மதுரைக்கு வெற்றிச்சுடர் கொண்டு செல்லப்படுகிறது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஐ.என்.எஸ் பருந்து நிலைய கமெண்டர் வெங்கடேஷ் அய்யர் தென் தமிழகத்தில் கடற்படை செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
"1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் நினைவாக இன்று ஐஎன்எஸ் பருந்து உச்சிப்புளி கடற்படை தளத்தில் வெற்றிச்சுடருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் உயிர் நீத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் வீட்டிற்கு இந்த வெற்றிச்சுடர் அனுப்பப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடமும் விரிவாக்க பணிகளின்போது ரயில் தண்டவாளங்கள் உள்ளதால் தென்னக ரயில்வே துறையிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது."
"விரைவில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் விரிவாக்கம் செய்யப்படும். மன்னார் வளைகுடா கடற்பரப்பில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது."
இதே போல் ஐஎன்எஸ் பருந்து விமான தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன," என்று வெங்கடேஷ் அய்யர் கூறினார்.
கடந்த மே மாதம் இலங்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் அதில் இருந்து வெளியான எண்ணெய் கசிவுகள் இந்திய கடற்பரப்பிற்குள் வரக்கூடும் என இலங்கையை சேர்ந்த கடல்வாழ் உயிரின விஞ்ஞானிகள் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, "இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கடலில் எண்ணெய் கசிவு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய கடற்பகுதிக்குள் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக எதுவும் தென்படவில்லை," என்று வெங்கடேஷ் அய்யர் பதிலளித்தார்.











