கொரோனா தடுப்பூசி: இரு வேறு மருந்தை பயன்படுத்தும் தாய்லாந்து அரசு

நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது என கூறப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பிபிசி தமிழ் நேரலை நிறைவு

    வணக்கம் நேயர்களே, இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு

    இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இதற்கான விண்ணப்பப் பதிவு நாளை (ஜூலை 13) மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை (NTA) இணையதளத்தில் தொடங்க உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. யாழ்ப்பாணம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    போதைப்பொருள்

    பட மூலாதாரம், SL NAVY

    படக்குறிப்பு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள்

    யாழ்ப்பாணம் பகுதியில் சுமார் இலங்கை ரூபாய் மதிப்பில் 10 கோடிக்கும் அதிக மதிப்பிலான கஞ்சா பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சந்தேக நபர்களை இன்று அதிகாலை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    படகு மூலம் 344 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருட்களுடன் படகு மூலம் வந்தபோது கடற்படையினர் அந்த படகை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.

    இதில் மூன்று சந்தேக நபர்களுடன் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

    இந்த போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து, சந்தேக நபர்களிடம் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடற்படையினர், மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    போதைப்பொருட்கள்

    பட மூலாதாரம், SL NAVY

  4. கொரோனா தடுப்பூசி: பாதிப்பு அதிகரிப்பை தடுக்க இரு வேறு மருந்து பயன்படுத்தும் தாய்லாந்து

    CORONA

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு புழக்கத்தில் உள்ள சீனாவின் சினோவாக் மருந்துடன் அஸ்ட்ராசெனிகா மருந்தை கலந்து எதிர்ப்பாற்றலை பெருக்கும் வகையில் தமது தடுப்பூசி கொள்கையை தாய்லாந்து அரசு மாற்றியுள்ளது.

    தாய்லாந்தில் சினோவாக் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக போட்டுக் கொண்ட நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் வைரஸ் கண்டறியப்பட்டதால், இந்த முடிவை தாய்லாந்து அரசு எடுத்துள்ளது.

    புதிய கொள்கைப்படி சினாவாக் இரண்டு டோஸ்களை போடுவதற்கு பதிலாக இனி முதல் டோஸ் ஆக சினாவாக் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வார்கள்.

    ஏற்கெனவே இரண்டு டோஸ் சினோவாக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அவர்கள் மூன்றாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா மருந்தையோ எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளான ஃபைசர் அல்லது பயோஎன்டெக்கையோ போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    முதல் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட மூன்று முதல் நான்கு வார காலத்தில் மூன்றாவது எதிர்ப்புத்திறன் கூட்டும் பூஸ்டர் மருந்து போடப்படும் என்று தாய்லாந்து நோய்த்தொற்று தடுப்புக் கமிட்டி அறிவித்துள்ளது.

    தாய்லாந்தில் தற்போது கையிருப்பில் கிடைக்கும் ஒரே தடுப்பூசி மருந்தாக அஸ்ட்ராசெனிகா உள்ளது. அந்நாட்டுக்கு ஃபைசர், பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகளை தருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அந்த தடுப்பு முரந்து விரைவில் தாய்லாந்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தவணையாக சுகாதார ஊழியர்களுக்கு சீனாவின் சினாவாக் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டில் ஆறு லட்சத்து 77 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

    இதில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு செவிலியர் இறந்து விட்டார். ஒரு மருத்துவ ஊழியர் கவலைக்கிடமாக உள்ளார்.

    நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது. இறப்பு விகிதம் 86.3 சதவீதம் அளவுக்கு குறைகிறது என்று கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 9,418 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு ஒரே நாளில் 91 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

  5. நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு

    NEPAL

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கேபி. ஷர்மா ஓலி

    நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் நேபாள குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், நேபாளத்தில் நீடித்து வரும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டின் மக்களவையை இரண்டாவது முறையாக பிரதமர் ஒலி யோசனைப்படி கலைத்த குடியரசு தலைவரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவையை கலைக்கும் பிரதமரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஏழு நாட்களுக்குள் நாடாளஉமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தீர்ப்பை நேபாள எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், பிரதமர் ஓலியின் கட்சி பிபிசியிடம் பேசும்போது, "ஆட்சி முறைக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அரசி.யலமைப்பின் மாண்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மீறப்பட்டுள்ளது," என்று தெரிவித்தது.

    நேபாள நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் ஓலி கலைத்து நடவடிக்கை எடுத்தார்.

    நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.

    இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

    ந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையின்போது கட்சியின் மூத்த தலைவர்களான புஷ்ப் கமல் தஹல் மற்றும் ஜலநாத் கானல் ஆகியோர் பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதே சமயம், பிரதமர் கேபி. ஷர்மா ஒலி குடியரசுத் தலைவரிடம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரினார்.

    குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின் கட்சியில் சர்ச்சை வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் கோரினர்.

    உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவரை கோரினர். மேலும் கேபி. ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    இதற்குப் பின் பிரதமர் மீது அழுத்தம் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோரிக்கையை திரும்ப பெறுவது என்றும் அதற்கு பதிலாக பிரதமர் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இருப்பினும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் முன்வைத்த யோசனையை ஏற்று நாடாளுமன்றம் கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

  6. மேகேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    அனைத்து கட்சி கூட்டம்

    பட மூலாதாரம், TNDIPR

    கர்நாடகா மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில், திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயகுமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பரில் கே.எஸ். அழகிரி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், துரைசாமி, இடதுசாரி கட்சிகள் சார்பில் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்:

    தீர்மானம் 1: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகேதாட்டுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக்கூடாது. அதை மீறி தற்போது மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடகா அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடகா அரசின் இத்திட்டத்துக்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எந்தவித அனுமதியையும் வழங்கக்கூடாது என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    தீர்மானம் 2: இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

    தீர்மானம் 3: தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதல் கட்டமாக வழங்குவது, அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  7. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது - மக்கள் மன்றம் கலைப்பு - ரஜினிகாந்த்

    ரஜினி

    பட மூலாதாரம், Rajinikanth

    படக்குறிப்பு, ரஜினிகாந்த்

    திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    "கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால்,ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போலரஜினிகாந்த்ரசிகர்நற்பணி மன்றமாக செயல்படும்என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  8. சேலத்தில் முக கவசம் அணியாத பயணிகளுக்கு பேருந்திலேயே கொரோனா பரிசோதனை, ஏ.எம். சுதாகர், சேலம்

    Tamil Nadu
    படக்குறிப்பு, சேலத்தில் பயணிகளுக்கு பேருந்திலேயே கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்கள்

    தமிழகத்தில் கொரோனா2வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், சேலத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

    தமிழ்நாட்டில் 50 சதவீத பயணிகளுடன் பயணிகள் போக்குவரத்து சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதன்படி பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க போன்ற சில கட்டுப்பாடுகள் கடந்த ஐந்தாம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலத்தில் சமூக இடைவெளி இல்லாமலும் மாஸ்க் அணியாமலும் பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலர்கள் துணையோடு களமிறங்கிய அதிகாரிகள் ஓடும் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது இளம்பிள்ளையில் இருந்து 50 பயணிகளுடன் சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த டவுன் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் அருகருகே அமர்ந்து இருந்தனர். அத்துடன் பலர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    சில பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் அவசரமாக செல்ல வேண்டும். இதுபோல நேரம் தாமதமாவதை ஏற்க முடியாது என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அதிகாரிகள், சரி நீங்கள் கீழே இறங்கி வர வேண்டாம். பேருந்திலேயே அமர்ந்திருங்கள் நாங்கள் அங்கேயே வந்து பரிசோதனை செய்கிறோம் என்றனர் .

    பின்னர் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தற்போது தான் நோயின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது அரசுப் பேருந்தில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி விட்டு அமரவேண்டும் ஆனால் அதை பயணிகள் பின்பற்றுவதில்லை. பேருந்தில் இருக்கைகள் நிரம்பிய நிலையில் பயணிகள் செல்கின்றனர்.

    அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முக கவசம் அணியாதவர்களுக்கு பேருந்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில்150க்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செயப்பட்டது. இதேபோல ஜங்ஷன் பகுதியிலும் ஏற்காடு அடிவாரம் பகுதியிலும் இரண்டு பேருந்துகளில் நடந்த சோதனையில்100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது," என்றனர்.

    Corona
    CORONA
  9. யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

    யூரோ

    பட மூலாதாரம், Getty Images

    யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி பட்டத்தை வென்றது

    விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

    ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. பெனால்டியின்போது அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது.

    1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தாலி அணி முதல் முறையாக யூரோ சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணியும் யூரோ கோப்பையை வெல்வதற்காக கடந்த 55 ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

  10. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்!