இந்திய சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து ஹர்ஷ் வர்தனை விலகச் செய்து அவரை பலிகடா ஆக்கியிருக்கிறார் பிரதமர் மோதி என்று தெரிவித்துள்ளார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.
விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கைகளில் பதாகைகளை ஏந்தி கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "பெட்ரோலிய பொருட்கள் மீது செயற்கையான விலை ஏற்றத்துக்கு பிரதமர் மோதி ஏற்பாடு செய்திருக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்றது. அப்போது ரூ.70-க்கு இந்தியாவில் பெட்ரோல் விற்கப்பட்டது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை 50 டாலருக்குக் குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் ரூ.35க்கு பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மோதி அரசில் லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. கலால் வரியை அதிகமாக விதித்திருப்பதே இதற்கு காரணம்," என்றார்.
"கலால் வரி அதிகமாக உயர்ந்த காரணத்தால்தான் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது. அவற்றை அடிப்படையாக வைத்து இந்தியாவின் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை மக்கள் மிக சிரமப்படுகிறார்கள்," என்று அழகிரி கூறினார்.
"கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே கேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. அது காவிரி நதியாக இருந்தாலும் சரி, வேறு எந்த நதியாக இருந்தாலும் பாய்ந்தோடும் நதி என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு மாநிலத்தில் நதி உருவாகிறது என்றால் அவர்களுக்கு அதில் பங்கு உண்டே தவிர அதற்கு அந்த மாநிலம் முழுமையான சொந்தம் கொண்டாட முடியாது என்று அழகிரி தெரிவித்தார்.
ஆனால், பெங்களூரு நகரின் குடிநீருக்காக அணை கட்டுகிறோம் என்ற கர்நாடகா அரசின் வாதத்தை ஏற்க முடியாது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரை சந்தித்து குறைகளைத் தெரிவித்திருக்கிறார். மேகேதாட்டு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அங்கு அணைக் கட்டக்கூடாது என்பதுதான்," என்றார் அழகிரி.
கொரோனா தொற்றை சரியாக கையாளாத சர்ச்சையில் சுகாதார துறை அமைச்சர் பதவி வகித்த ஹர்ஷவர்தன் பதவி விலகியிருக்கிறார். அவர் இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். உண்மையில் கொரோனா வைரஸ் தடுப்பு விவகாரத்தை சரியாக கையாளததற்கான பொறுப்பை மோதியே ஏற்றிருக்க வேண்டும். மனசாட்சி இருந்தால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்," என்று அழகிரி தெரிவித்தார்.