ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா புதிய கட்சி தொடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் ஒய் எஸ் ஆரின் நல்லாட்சியைக் கொண்டு வருவது தான் தங்கள் கட்சியின் நோக்கம் என கூறியுள்ளார் ஒய்.எஸ்.ஆரின் மகள் ஷர்மிளா.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவு பெற்றது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா புதிய கட்சி தொடக்கம்

    ஷர்மிளா

    பட மூலாதாரம், @realyssharmila, Twitter

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் மற்றும் இந்நாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா ஒரு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

    இன்று ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷர்மிளா தன் ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சியைத் தொடங்கியுள்ளார்.

    தெலங்கானா மாநிலத்தில் ஒய் எஸ் ஆரின் நல்லாட்சியைக் கொண்டு வருவது தான் தங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

    இந்நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள ஜே ஆர் சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கட்சி மற்றும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் ஷர்மிளாவின் தாயார் விஜயம்மாவும் உடன் இருந்தார்.

  3. தமிழக பாஜகவின் புதிய தலைவரானார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

    கே அண்ணாமலை

    பட மூலாதாரம், @annamalai_k, Twitter

    தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பதவியில் இருந்து 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட எல்.முருகன் சமீபத்தில் மத்திய அமைச்சரானார்.

    அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது.

    இதற்கு அதிகம் தாமதிக்காமல், கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற கே அண்ணாமலை தற்போது தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    கட்சியில் பல்வேறு மூத்த உறுப்பினர்கள் இருக்கின்ற போதும், அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு கொடுத்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

  4. ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கிய பிரதமர் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

    காங்கிரஸ்
    படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

    இந்திய சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து ஹர்ஷ் வர்தனை விலகச் செய்து அவரை பலிகடா ஆக்கியிருக்கிறார் பிரதமர் மோதி என்று தெரிவித்துள்ளார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கைகளில் பதாகைகளை ஏந்தி கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "பெட்ரோலிய பொருட்கள் மீது செயற்கையான விலை ஏற்றத்துக்கு பிரதமர் மோதி ஏற்பாடு செய்திருக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்றது. அப்போது ரூ.70-க்கு இந்தியாவில் பெட்ரோல் விற்கப்பட்டது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை 50 டாலருக்குக் குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் ரூ.35க்கு பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மோதி அரசில் லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. கலால் வரியை அதிகமாக விதித்திருப்பதே இதற்கு காரணம்," என்றார்.

    "கலால் வரி அதிகமாக உயர்ந்த காரணத்தால்தான் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது. அவற்றை அடிப்படையாக வைத்து இந்தியாவின் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை மக்கள் மிக சிரமப்படுகிறார்கள்," என்று அழகிரி கூறினார்.

    "கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே கேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. அது காவிரி நதியாக இருந்தாலும் சரி, வேறு எந்த நதியாக இருந்தாலும் பாய்ந்தோடும் நதி என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு மாநிலத்தில் நதி உருவாகிறது என்றால் அவர்களுக்கு அதில் பங்கு உண்டே தவிர அதற்கு அந்த மாநிலம் முழுமையான சொந்தம் கொண்டாட முடியாது என்று அழகிரி தெரிவித்தார்.

    ஆனால், பெங்களூரு நகரின் குடிநீருக்காக அணை கட்டுகிறோம் என்ற கர்நாடகா அரசின் வாதத்தை ஏற்க முடியாது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரை சந்தித்து குறைகளைத் தெரிவித்திருக்கிறார். மேகேதாட்டு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அங்கு அணைக் கட்டக்கூடாது என்பதுதான்," என்றார் அழகிரி.

    கொரோனா தொற்றை சரியாக கையாளாத சர்ச்சையில் சுகாதார துறை அமைச்சர் பதவி வகித்த ஹர்ஷவர்தன் பதவி விலகியிருக்கிறார். அவர் இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். உண்மையில் கொரோனா வைரஸ் தடுப்பு விவகாரத்தை சரியாக கையாளததற்கான பொறுப்பை மோதியே ஏற்றிருக்க வேண்டும். மனசாட்சி இருந்தால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்," என்று அழகிரி தெரிவித்தார்.

    காங்கிரஸ்
  5. மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி - ஆளும் பிரதமருக்கு புதிய நெருக்கடி

    மொகிதின் யாசின்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் மார்ச் 2020 முதல் பதவியில் உள்ளார்

    மலேசியாவில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி (பெரிக்கத்தான் நேசனல்) அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் நீடித்த பரபரப்பின் முடிவில், அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அம்னோ (UMNO) கட்சி நேற்று நள்ளிரவு அறிவித்தது.

    இதையடுத்து பிரதமர் மொகிதின் யாசின் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்னோ கட்சித் தலைவர் சாஹித் ஹமிதி வலியுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து மலேசிய மாமன்னர், நடப்பு அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா, இடைக்கால பிரதமரை நியமிப்பாரா, அல்லது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  6. கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன?

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான்.

    அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வராதா, அவர்கள் மூலமாக நோய் பரவாதா என்ற கேள்விகள் எழுந்தன.

    இப்போதும் பலர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்ட பிறகு தமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

    இதற்கு முன்பு உலகில் வந்த பல்வேறு நோய்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளித்தன.

  7. நரேந்திர மோதியின் விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

    மோதி அமைச்சரவை

    பட மூலாதாரம், PIB INDIA

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

    விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட 43 பேருடன் சேர்த்து இப்போது மோதி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள், இரண்டு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விரிவுபடுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.

    வழக்கமாக மோதி அமைச்சரவையின் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும். இந்த கூட்டம் நேற்று உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான முன்னேற்பாடுகள் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று நடைபெறவிருக்கிறது.

  8. தடுப்பூசிகளை நிராகரித்த வடகொரியா: ரஷ்யா மீண்டும் ஆர்வம்

    கிம்

    பட மூலாதாரம், Getty Images

    வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோது, தங்களுக்குத் தேவையில்லை என வடகொரியா நிராகரித்துவிட்டது.

    அதற்குப் பதிலாக நாட்டின் எல்லைகளை அடைத்து விட்டது. அதனால் சீனாவில் இருந்து வர வேண்டிய இறக்குமதி தடைபட்டிருக்கிறது. உணவுப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

    நாட்டின் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் வடகொரியாவுக்கு தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதா ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.

    தங்களது நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் அண்மையில் ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியிருந்தது.

  9. ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் காலமானார்

    வீர்பத்ர சிங்

    ஹிமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 87.

    இன்று காலை 3.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக ஷிம்லா இந்திரா காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜனக் ராஜ் தெரிவித்தார்.

    திங்கள்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    9 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர் வீர்பத்ர சிங். ஆறு முறை ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார்

    அவருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து அவர் மீண்டிருந்தாலும் அவரது உடல் நிலையில் தொடர் பாதிப்புகள் தென்பட்டன.

  10. தோல்வியடைந்த ஃபெடரர்; எழுந்து நின்று கரவொலி எழுப்பிய ரசிகர்கள்

    ஃபெடரர்

    பட மூலாதாரம், Getty Images

    அதிக கிராண்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனை படைத்த சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    20 கிராண்ஸ்லாம் பட்டம் பெற்ற அவரை போலந்து நாட்டின் ஹியூபெர்ட் ஹர்கேக்ஸ் வீழ்த்தினார். கடைசி செட்டில் 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஃபெடரர் தோல்வியடைந்தது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது.

    இதுவரை ரோஜர் பெடரர் பங்கேற்ற விம்பிள்டன் போட்டிகளில் ஒன்றில் கூட புள்ளிகள் ஏதும் பெறாமல் செட்டை இழந்ததில்லை.

    ரோஜர் பெடரர் தோல்வியடைந்தாலும் விம்பிள்டன் மைய அரங்கில் கூடியிருந்தவர்கள் அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.

    ரோஜர் பெடரரின் அதிர்ச்சித் தோல்வி குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தனது தொலைக்காட்சிப் பெட்டியை போட்டியின் பாதிலேயே அணைத்து விட்டதாக பல ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    போட்டிக்குப் பிறகு பேசிய ஃபெடரர் தனது ஓய்வு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தார். 39 வயதான ஃபெடருக்கு அண்மையில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

  11. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் தருகிறோ். இணைந்திருங்கள்!