தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் பாதிப்பு: மாநில சுகாதாரத்துறை

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் திரிபு கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து பல்வேறு திரிபுகளாக உருவெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்ட திரிபுக்கு டெல்டா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தத் திரிபு மீண்டும் மாற்றம் அடைந்தால் அது டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் திரிபு, எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.
இந்த நிலையில், இந்த டெல்டா பிளஸ் திரிபு கூடுதல் ஆபத்தானதா இல்லையா என்பது குறித்து உலகம் முழுவதும் மருத்துவ நிபுணர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தத் திரிபால் தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதில், அவர் டெல்டா பிளஸ் திரிபால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார்" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த டெல்டா திரிபால் இந்தியாவில் இதுவரை 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.




