கொரோனா முடிந்த பிறகும் 90% ஊழியர்கள் அலுவலகம் வர விலக்கு: ஃபேஸ்புக்

உலகம், தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 10.5 மெட்ரிக் ஆக்சிஜன்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்இருந்துபுதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்சிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு,மேற்படி ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    புதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதில்,6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி,மருத்துவமனைக்கும்,4.00 மெட்ரிக் டன் பெராக்கா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ReplyForward

  2. கொரோனா முடிந்த பிறகும் 90% ஊழியர்கள் அலுவலகம் வர விலக்கு: பேஸ்புக்

    பேஸ்புக்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மார்க் ஸக்கர்பெர்க்

    கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்த பிறகும் தனது ஊழியர்கள் அலுவலகம் வராமல் தொலைதூரத்தில் இருந்தபடி பணியாற்ற ஃபேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

    தொலைதூரத்தில் இருந்து பணியாற்ற இயலக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய வேலையில் அப்படியே தொடரலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் ஆகியவை வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்த தங்களுடைய ஊழியர்களிடம் அலுவலகம் திரும்பி வருமாறு கூறியிருந்தன.

    இந்த நிலையில், தமது ஊழியர்களிடம் 2022ஆம் ஆண்டின் பாதிவரை தொலைதூரத்தில் இருந்தபடியே பணியாற்ற தாம் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    முன்னதாக, தமது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களான 60 ஆயிரம் பேரில் பாதி பேர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் நிலை பத்தாண்டுக்குள்ளாக வரும் என்று ஃபேஸ்ப் புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறியிருந்தார்.

    ஃபேஸ்புக் அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் முழு ஊழியர் பலத்துடன் பணியாற்றும் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதியில்லாதவர்கள் பாதி நேரமாகவது அலுவலகம் வந்து பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  3. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 358 கொரோனா உயிரிழப்புகள் பதிவு

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இன்று புதிதாக 16 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி, வீட்டுத்தனிமையில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் உள்பட ஆக்டிவ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,88,664 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 44 கொரோனா உயிரிழப்புகள்

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 44 கொரோனா உயிரிழப்புகள் பதிவானதாக நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இருப்பினும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை நோக்கி இருக்கிறது. அங்கு 305 புதிய பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளன.

    நகர மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 24,126 படுக்கை வசதிகளில் 21 ஆயிரத்து 806 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

    இதேபோல, கோவிட் பராமரிப்பு நிலைய படுக்கை வசதிகளில் மொத்தம் உள்ள 6,332 படுக்கை வசதிகளில் 122 படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 48,022 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 58 லட்சத்து 29 ஆயிரத்து 167 பேர் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  5. சூச்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

    aung sang su ki

    பட மூலாதாரம், Reuters

    ஆங்சாங்சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டை மியான்மர் ராணுவ அதிகாரிகள் சுமத்தியுள்ளனர். இதுவரை சூச்சி மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும்.

    சூச்சி பணம் மற்றும் தங்கத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

    மேலும் சட்ட விரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது உட்பட சூச்சியின் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    மியான்மரில் பிப்ரவரி 1ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்தது. அப்போதிலிருந்து சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  6. உத்தராகண்ட் கொரோனா இரண்டாவது அலை: இறப்புக்கணக்கெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    கொரோனா

    பட மூலாதாரம், TWITTER

    உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின்போது இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் தொலைதூர மலை பகுதிகளில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பதையும் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றை மாநில அரசு கையாளும் விதம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி ஆர்.எஸ். செளஹான், நீதிபதி அலோக் வர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது, சமூக நலத்துறை உதவியுடன் மாவட்ட அளவிலான பணிக்குழுவை நியமிக்கும் வாய்ப்பை பரிசீலிக்குமாறு நீதிபதிகள் அரசை கேட்டுக் கொண்டனர்.

    அடையாள அட்டை இல்லாத காரணத்தால் எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, தொலைதூர மழைவாழ் பகுதிகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இந்த பணிக் குழுவில் ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், ஊர்காவல் படையினர் போன்றோரை ஈடுபடுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இத்துடன் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு வென்டிலேட்டர்கள், ஐசியு படுக்கை வசதிகள் உள்ளன மற்றும் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற கணக்கெடுப்பையும் நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகள் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயாளிகளின் சிகிச்கைக்கு வசூலிப்பதாக வெளிவரும் தகவல்களை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அந்த மருத்துவமனைகளுக்கு அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    உத்தாரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 6,849 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

  7. தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு: முதல்வர் உத்தரவு

    STALIN

    பட மூலாதாரம், TWITTER

    தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறை, சமுதாயத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய மாற்றாக கடைப்பிடிக்க வேண்டிய முறை குறித்தும் ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    இந்த குழுவில் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துதறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர், மருத்துவ கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, மாநிலத்தில் உள்ள மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான பரிந்துரைகளை ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்றும் அதன் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. இந்தியாவில் ஒரே நாளில் 6,148 கோவிட் மரணங்கள் பதிவு ஏன்?

    இந்தியாவில் கோவிட்-19 நோயின் இரண்டாவது அலை தணிந்து வருவதாகத் தோன்றுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாகக் கண்டறியப்பட்ட நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவானது. 24 மணி நேரத்தில் 94,052 தொற்றுகள் பதிவானதாக இந்திய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. தொற்று எண்ணிக்கை வீழ்ந்து வருவதற்கு மாறாக ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 6,148 பேர் கோவிட் தொற்றுக்குப் பலியானதாகவும் சுகாதார அமைச்சகம் கூறுவதாகத் தெரிவிக்கிறது பிடிஐ. தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் திடீரென மரணங்கள் மட்டும் அதிகரித்திருப்பது ஏன்?பிகார் மாநிலத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவாகாத 3,951 மரணங்களை நேற்று அறிவித்தது பிகார். இது நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த மரணங்கள் அல்ல. கடந்த காலத்தில் நிகழ்ந்து அறிவிக்கப்படாமல் இருந்த மரணங்கள் ஆகும். ஆனால், அவை நேற்று பதிவு செய்யப்பட்டதால், இந்தியாவில் நேற்று கண்டறிந்த மரணங்களின் எண்ணிக்கையில் சேர்ந்துகொண்டன. இதனால்தான் மரணங்களின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் திடீர்ப் பாய்ச்சல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. மும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் பலி

    மும்பை கட்டடம் இடிந்து 11 பேர் பலி

    பட மூலாதாரம், ANI

    மும்பையின் நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு வீடு இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்ததைத் தொடர்ந்து அருகில் வலுவற்றுக் காணப்படும் பிற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கட்டடம் இடிந்தபோது குழந்தைகள் உள்பட ஏராளமானோர் உள்ளே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை கன மழை பெய்ததால், ஏற்கெனவே பலவீனமாக இருந்த கட்டடம் இடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.