கொரோனா: பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடக் குறையும் - ஆர்பிஐ

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட ஒரு சதவிகிதம் குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்,

    இன்று காலை முதல்தமிழகம்,இந்தியாமற்றும் உலகளவிலான பல முக்கிய செய்திகளைஇந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி

  2. பிரிட்டனில் 12-15 வயதினருக்கு ஃபைசர் தடுப்பு மருந்து

    பிரிட்டனில் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், திறன்பட செயலாற்றுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நன்மைகளைக் காட்டிலும் ஆபத்துகள் குறைவானதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதின்ம வயதினருக்கு தடுப்பூசி எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை கடுமையாக சோதித்ததாக பிரிட்டனின் மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்பு பொருட்களுக்கான ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமை தெரிவித்துள்ளது.

    குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டுமா என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என பிரிட்டனின் தடுப்பு மருந்து கமிட்டி தெரிவித்துள்ளது.

    ஃபைசர் தடுப்பு மருந்து ஏற்கனவே 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  3. கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: கர்நாடக அரசு முடிவு

    கன்னட மொழியை ”அழகற்ற மொழி” என கூகுள் தேடுபொறியில் காட்டியதற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பவுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ’அழகற்ற மொழி’ என்ற தேடலில் கூகுளில் கன்னட மொழி என்பது முதன்மையாக வந்தது.

    இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாக கூகுள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதன்பிறகு கூகுள் தேடுபொறியில் வரும் விடையையும் மாற்றியமைத்தது.

    இது தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

    ”இது சரியானது அல்ல என எங்களுக்கு தெரியும். இருப்பினும் நாங்கள் இதை திருத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கிறோம். இது குறித்து எங்களுக்கு தெரியவந்தவுடன் எங்களின் அல்காரித்தமை சரி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

  4. கொரோனா: பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறையும் - ஆர்பிஐ

    ஆர்பிஐ

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சக்திகாந்த தாஸ்

    நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட ஒரு சதவிகிதம் குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், வழக்கமான பருவமழை மூலம் பொருளாதாரம் மீட்சிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    பொருளாதார வளர்ச்சி 10.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 9.5 சதவிகிதமாக குறையும் என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

    கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே குறைவாக இருக்கும் வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

    ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

    பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரெப்போ விகிதத்தை 115 புள்ளிகள் குறைத்து ஆர்பிஐ நடவடிக்கை எடுத்திருந்தது.

  5. இந்தியாவில் புதிதாக 1.32 லட்சம் பேருக்கு கொரோனா

    தடுப்பூசி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்தியாவில் புதிதாக 1,32,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் நாட்டில் இதுவரை 2,85,74,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,65,97,655 பேர் குணமடைந்துவிட்டனர்.

    இதுவரை 3.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 16,35,993 பேர் தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுவரை 22,41,09,448 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

  6. சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது ஃபேமிலிமேன் -2

    ஃபேமிலிமேன்

    பட மூலாதாரம், AMAZON PRIME VIDEO

    தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக எழுந்த சர்ச்சைகளுக்கு இடையே அமெஸானில் தி ஃபேமிலி மேன் - சீஸன் 2 தொடர் வெளியாகி இருக்கிறது.

    அமெஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்தத் தொடர், ஒரு உளவு அதிகாரியின் சாகசங்களைச் சொல்லும் தொடராக வெளியானது.

    முதல் சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகி இருக்கிறது.

    முதல் சீஸனின் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், இந்த சீஸனில் கதையின் ஒரு பகுதி சென்னையில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

    இந்த ட்ரெய்லரில் வரும் அதிகாரி ஒருவர், "நமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி ஐஎஸ்ஐக்கும் அங்குள்ள கலகக்குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் திட்டமென்ன என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று பேசுகிறார். தமிழ் போராளியைப் போலக் காட்டப்படும் சமந்தா, "நான் எல்லோரையும் சாககொல்லுவேன்" (சாகடிப்பேன் அல்லது கொல்லுவேன்?) என்று பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருந்தன.

    இதில் கலகக் குழு என்று சொல்வது, தமிழ் போராளிகளைத்தான் என பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்தனர்.

    இந்த இரண்டாம் பாகத்தில் ராஜி பெண் போராளி பாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.

  7. மெகுல் சோக்சி கைது குறித்து இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வத் தகவல்

    சோக்சி

    பட மூலாதாரம், Priyanka Parashar/Mint via Getty Images

    படக்குறிப்பு, மெகுல் சோக்சி

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்பட்டுவரும் மெகுல் சோக்சியின் கைது குறித்து குறித்து முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    டொமினிக் நாட்டு அதிகாரிகளின் பிடியில் மெகுல் சோக்சி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "சோக்சியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.

    சோக்சி தொடர்பாக மேலதிகக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த அவர், அவை அனைத்தும் உள்துறையின் கீழ் வருவதாகத் தெரிவித்தார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 13,500 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி தேடப்பட்டு வருகிறார்.