சமையல் எரிவாயு தட்டுப்பாடு - தமிழ்நாட்டில் ஓட்டல்கள் மூடப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகலாம் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஓட்டல்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தற்போது பல ஓட்டல்களில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் படிப்படியாக ஓட்டல்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டால், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
"தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஓட்டல்கள் செயல்படுகின்றன. ஓட்டல் துறையில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓட்டல்கள் மூடப்பட்டால், பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும்" என அவர் எச்சரித்தார்.
ஓட்டல்கள் வெளியில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றும், தொழில்துறை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஓட்டல்களுக்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு மானியம் வழங்கி அனுமதி அளித்தால் அதைப் பயன்படுத்தி சமையல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் உணவகங்களின் செயல்பாட்டு நேரத்தை குறைப்பதுடன், உணவு வகைகளையும் குறைத்து அத்தியாவசிய உணவுகளை மட்டும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலை நீடித்தால் உணவகங்களை மூடுவதையே தவிர வேறு வழியில்லை என்றும், வாடிக்கையாளர்கள் இந்த சூழ்நிலையை புரிந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் வெங்கடசுப்பு கேட்டுக்கொண்டார்.

















