நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 8) காலை முதல் நேரலையாக, தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 8) காலை முதல் நேரலையாக, தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

பட மூலாதாரம், Getty Images
இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சந்தித்த நெருக்கடிகளை சமாளிக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
நாட்டின் விமானப் போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுக்க விமான கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணிக்குள் ரத்து செய்யப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இண்டிகோ தற்போது வரை ரூ.610 கோடி பணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்கியுள்ளது. அனைத்து பயணிகளின் பெட்டிகளையும் 48 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
சனிக்கிழமை இரவு யுக்ரேன் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்திருந்த சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஃப்ளோரிடாவில் மூன்று நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்பின் குழுவிடம் தொலைபேசியில் நடத்திய உரையாடல் "மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது" எனத் தெரிவித்தார் ஜெலென்ஸ்கி.
யுக்ரேனின் முக்கியமான தொழில்நகரான க்ரெமென்சுக்கின் மேயர் "மிகப்பெரிய அளவில்" நகரம் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த தாக்குதல்களில் யாரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவின் வெவ்வேறு பகுதிகளில் யுக்ரேனின் 77 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
இன்று (07.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.

பட மூலாதாரம், Reuters
கடந்த வாரம் மலாக்கா நீரிணையில் உருவான சென்யார் என்ற அரிதான சக்திவாய்ந்த புயல் இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை உருவாக்கியது. பலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இந்தோனேசியாவின் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் கிராமங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் விவரித்துள்ளனர்.
இன்னும் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடையும் முயற்சிகள் தொடர்கின்றன. சில இடங்களில் நிவாரணப் பொருள்களை வான்வழியாகக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தோனீசியாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் 900-ஐ கடந்ததாகவும் கிட்டத்தட்ட 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சூடானின் கலோகி நகரில் மழலையர் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
வியாழனன்று நடந்த இந்த தாக்குதலை நடத்தியதாக துணை ராணுவக் குழு (RSF) மீது சூடான் மருத்துவர்கள் நெட்வொர்க் மற்றும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளன.
ஆர்எஸ்எஃப்-ல் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
இதற்கு நேர்மாறாக, துணை ராணுவக் குழு, வெள்ளிக்கிழமையன்று டார்பூர் பகுதியில் சந்தை மற்றும் எரிபொருள் கிடங்கு மீது ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.
சூடானில் ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஆர்எஸ்எஃப் மற்றும் ராணுவத்திற்கு இடையே அதிகாரப் போட்டி நீடிக்கிறது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சன் - முஸ்கான் தம்பதியின் மூத்த மகளான சாராவுக்கு 3 வயதாகிறது. இவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் தேவாலய திருவிழாவில் பலூன் வியாபாரம் செய்து வந்தனர் நேற்று (டிசம்பர் 6) இரவு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றுள்ளனர். ரயில் நிலையத்துக்கு வெளியே அமர்ந்திருந்தபோது அங்கு வந்த ஒரு நபர், உணவு வாங்கித் தருவதாகக் கூறி 3 வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார்.
இவர்கள் நீண்ட நேரம் தேடியும் அவர் திரும்பி வராத நிலையில் அச்சமடைந்த ரஞ்சன் - முஸ்கான் தம்பதி, இது குறித்து ரயில்வே போலீசாரிடத்திலும், பின்னர் கோட்டார் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர்.
மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சாலைகளில் வாகனங்களை சோதனையிட்டனர். ரயில் நிலையத்திலிருந்து அந்த நபர் குழந்தையைத் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த நபர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
கடத்தப்பட்ட சில மணி நேரத்திற்குள் போலீசார் குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர். குழந்தைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குழந்தையைக் கடத்திய யோகேஷ் குமார் என்வரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், bbc
கோவாவில் உள்ள இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 23 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் இரவு விடுதி ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது. வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சில சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் இரவு விடுதியில் இருந்த சமையலறை ஊழியர்கள் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாக பிடிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. அதில் 3 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், "இன்று கோவாவுக்கு மிகவும் சோகமான நாள். ஆர்போராவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
"நான் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில் தீ விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படும். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித அலட்சியமும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்த யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த சதத்தின் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சர்வதேச சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜெய்ஸ்வால்.
டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் அடித்திருக்கும் ஜெய்ஸ்வால், சர்வதேச கிரிக்கெட்டில் தன் அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது நேபாளத்துக்கு எதிரான டி20 போட்டியில் அவர் சதமடித்திருந்தார். இப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ஏஎன்ஐ செய்திக் குறிப்பின்படி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்களிலும் சதம் அடிக்கும் ஆறாவது இந்திய வீரர் ஜெய்ஸ்வால். உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 32வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார். .
இன்று (07.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பிரிட்டோரியாவின் மேற்கே உள்ள சோல்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் உள்ள ஒரு இடத்தில் சனிக்கிழமை துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பதினான்கு பேர் காயமடைந்தனர், மேலும் இறந்த 11 பேரில் மூன்று வயது குழந்தையும் அடங்கும்.
"குறைந்தது மூன்று துப்பாக்கிதாரிகள் விடுதிக்குள் நுழைந்தனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் எத்லாண்டா மாத்தே கூறினார்.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், UGC
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் சங்கிலியை பறிக்க ஒருவர் முயன்ற நிலையில், அவரது பிடியில் இருந்து அந்தப் பெண் சமர்த்தியமாக கூச்சலிட்டு தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கைப்பேசியில் பேசியபடி பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிப்பதற்கு முயற்சி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்தப் பெண் கூச்சலிட்ட நிலையில் அந்த நபர் தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்வதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் பல ரத்து செய்யப்பட்டதாலும், தாமதமானதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேசமயம், இந்தப் பிரச்னையால் பிற விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களுக்கான கட்டணங்களை பல மடங்கு ஏற்றியதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்து கட்டணத்தை நிர்ணயித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“விமான நிறுவனங்களில் ஒன்றின் விமான நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகள் விமான ரத்துகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், இதனால் பல துறைகளில் கட்டணங்கள் நியாயமற்ற வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு வான்பரப்பில்,
அமைச்சகத்தின் உத்தரவின்படி, உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்த வரம்பை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்க முடியாது.
இந்த கட்டண உச்சவரம்பானது வணிக வகுப்பு (Business class) வகைகளுக்கு பொருந்தாது. ஆர்சிஎஸ் உடான் (RCS UDAAN) எனும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்திற்கும் பொருந்தாது.

பட மூலாதாரம், Getty Images
நிலுவையில் உள்ள பணத்தை பயணிகளுக்கு தாமதமின்றி திருப்பிக் கொடுக்குமா இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அனைத்து விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை டிசம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்ற எந்த கட்டணங்களையும் வசூலிக்க வேண்டாம் என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறும் செயல்பாட்டில் ஏதேனும் தாமதம் அல்லது விதிகளை பின்பற்றாதது உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான விமான ரத்துகள் மற்றும் தாமதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் இண்டிகோ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டது. அனைத்து பயணிகளுக்கும் விரைவில் பணம் திரும்பத் தரப்படும் என்று விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் 2-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரர் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை பீளமேடு போலீசார் அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது.
அவர்கள் 3 பேர் மீதும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் காவல் துறையினர் வழங்கினர்.
இன்றைய நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் தொகுத்து அளிப்பது பிரதீப் கிருஷ்ணா.
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 3) காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அவசர நிவாரண உதவித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். ''திடீர் அனர்த்த நிலைமையின் தாக்கம் குறைவடைந்ததன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமது வீடுகளை தங்கிக் கொள்ளும் விதத்தில் சுத்திகரித்துக் கொள்வதற்காக 25,000 ரூபா வழங்கப்படவுள்ளது.”
“அனர்த்தங்களை எதிர்நோக்கித் தமது வீடுகளிலுள்ள பொருட்களை இழந்தவர்களுக்கு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய, அவர்களுக்குச் சொந்தமான வீடாக இல்லாவிட்டாலும், வீடொன்றுக்கு ஒரு தடவை கொடுப்பனவாக 50,000 ரூபாவை வழங்கவுள்ளோம்.”
“வீடுகளை இழந்த ஒருவருக்கு மூன்று மாத காலத்திற்காக, வீடொன்றுக்கு செல்வதற்காக மாதமொன்றுக்கு 25000 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், “அவர்களின் வாழ்வாதாரம் இல்லாது போயுள்ளது. அதனால், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் வீடுகளை இழந்து, இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பமொன்றுக்கு எந்தவிதப் பாகுபாடுமின்றி 50,000 ரூபா கொடுப்பனவொன்றையும் வழங்குவோம். இதை மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்'' எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் தாக்கிய திட்வா புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்த அறிக்கையின்படி, 214 பேர் காணாமல் போயுள்ளனர்.கண்டி மாவட்டத்திலேயே அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் மண்சரிவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அதோடு, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 5,86,464 குடும்பங்களைச் சேர்ந்த இருபது லட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,164 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன, 67,505 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும், 1,211 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 43,715 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,537 பேர் தங்க வைக்கப்பபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அருணாச்சல பிரதேசம் தொடர்பான விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை நாங்கள் கவனித்துள்ளோம். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாகிஸ்தான் எப்போதும் ஆதரித்து வருகிறது, தொடர்ந்து ஆதரிப்போம்,” என்று கூறப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 5) செய்தியாளர் சந்திப்பில் அருணாச்சல பிரதேசம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஹுசைன் ஆண்ட்ராபி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “அருணாச்சல பிரதேசம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறித்த ஊடக கேள்விகளுக்கு, பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதில் சீனாவை ஆதரிக்கிறது என்று நாங்கள் கூற விரும்புகிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கோருகிறது. ஆனால், இந்தியா தொடர்ந்து இந்தக் கூற்றுகளை நிராகரித்து வருவதோடு, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி என்றும் கூறுகிறது.