நேரலை, ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் - பாஜக பதில் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பாகிஸ்தான் முழுவதும் உணரப்பட்ட நிலநடுக்கம்

    பாகிஸ்தான் முழுவதும் உணரப்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

    பட மூலாதாரம், CSEM-EMSC

    பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

    பிபிசி உருது சேவையின் கூற்றுப்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத், சுவத், பெஷாவர் மற்றும் அபோதாபாத் உள்ளிட்ட கைபர் பக்துன்க்வாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ஆரம்ப செய்திகளின்படி, நிலநடுக்கத்தால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

  2. காஸா அமைதி திட்டம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

    ரந்தீர் ஜெய்ஸ்வால்

    பட மூலாதாரம், MEA India

    படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

    காஸா அமைதி வாரியக் கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'காஸா அமைதித் திட்டத்தை' ஆதரித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

    அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் நடந்த, “அமைதி வாரியக் கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராகப் பங்கேற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்முயற்சியான காஸா அமைதித் திட்டத்தை இந்தியா ஆதரித்துள்ளது” என அவர் கூறினார்

    இந்தியா-பாகிஸ்தான் மோதலைக் கருத்தில் கொண்டு டிரம்பின் கூற்று குறித்து கேட்டபோது, ​​இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே இதை தெளிவுபடுத்தியுள்ளது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

    “இது செயல்பாட்டுத் தகவல் என்பதால், இது தொடர்பாக நீங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

  3. 'சமரசம் செய்யத் தயார், ஆனால்…’- யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியது என்ன?

    'சமரசம் செய்யத் தயார், ஆனால்…’- யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியது என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

    ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது யுக்ரேனின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை விட்டுக்கொடுப்பதில் அமையக்கூடாது என்றும் அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ‘கியோடோ நியூஸ்’ முகமையிடம் பேசிய ஸெலன்ஸ்கி, "ஒரு தீர்வை எட்ட அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் ரஷ்யா தொடர்ந்து விடுக்கும் இறுதி எச்சரிக்கையை ஏற்க தயாராக இல்லை. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். இதை அனைவரும் அங்கீகரித்துள்ளனர். இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே மத்தியஸ்தம் செய்யும் அல்லது மத்தியஸ்தம் செய்ய முயலும் பல நாடுகள், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர் என்பதை அங்கீகரிக்கின்றன," என்று கூறினார்.

    "ரஷ்யா எங்களது நிலப்பரப்பில் சுமார் 20% ஆக்கிரமித்துள்ளது. இருந்தபோதிலும், 'நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அங்கேயே இருப்போம்' என்ற அடிப்படையில் இந்த நேரத்தில் அமைதி பற்றிப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுவே ஒரு பெரிய சமரசம்." என்று அவர் கூறினார்.

    "சமரசம் செய்த பிறகும் ரஷ்யா எங்களுக்கு என்ன தருகிறது? உங்களின் பிற பகுதிகளை நாங்கள் ஆக்கிரமிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது பயங்கரவாதம். இத்தகைய பேச்சும் பயங்கரவாதமே," என்று ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

    "’நான் உன்னைக் கொல்லத் தயாராக இல்லை, அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடு.' இதன் பொருள் என்ன? இது சமரசம் அல்ல. இது ஒரு இறுதி எச்சரிக்கை. அதனால்தான் நான் சொன்னேன், யுக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, எங்களது ராணுவம், எங்களது மக்கள் மற்றும் எங்களது குழந்தைகளை மதிக்கும் ஒரு சமரசத்திற்கு நாங்கள் தயார். ஆனால் நாங்கள் இறுதி எச்சரிக்கைக்குத் தயாராக இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

  4. ‘திமுக- காங்கிரஸ் கூட்டணி, மாற்றத்திற்கு வாய்ப்பில்லை’- கனிமொழி எம்.பி

    ‘திமுக- காங்கிரஸ் கூட்டணி, மாற்றத்திற்கு வாய்ப்பில்லை’- கனிமொழி எம்.பி

    “திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

    திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக தொடர்ந்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாஜக கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளை பற்றி கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை” என்று எம்.பி கனிமொழி கூறினார்.

  5. ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் - பாஜக பதில் என்ன?

    ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் - பாஜக பதில் என்ன?

    பட மூலாதாரம், x/IYC

    டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டிற்கு வந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

    காங்கிரஸ் இந்தப் போராட்டத்தைத் தனது கடமை என்று அழைத்தது, அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நாட்டின் நற்பெயருக்குக் காங்கிரஸ் கலங்கம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டியது.

    இந்திய இளைஞர் காங்கிரஸ் எக்ஸ் தளத்தில், "ஏ.ஐ மாநாட்டின் மின்னும் மேடைக்கு பின்னால் உண்மையை மறைக்க முடியாது. தேசிய நலன்களுக்கு மேலாக கார்ப்பரேட் நலன்கள் பார்க்கப்படும்போதும் வெளியுறவுக் கொள்கையில் மென்மையான போக்கு தெளிவாகத் தெரியும்போதும் போராட்டம் ஒரு கடமையாகிறது." என கூறியுள்ளது.

    "இந்தியா ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய மாநாட்டை நடத்தி வரும் வேளையில், நாடு தனது தொழில்நுட்பம் மற்றும் தலைமையைக் காட்சிப்படுத்தும் நிலையில் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதை விட இடையூறு செய்வதையே காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது," என்று பாஜக தனது எக்ஸ் கணக்கில் எழுதியுள்ளது.

  6. 'பாபர் மசூதி' கட்டுமானத்திற்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

    உச்ச நீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    நாடு முழுவதும் 'பாபர் அல்லது பாபர் மசூதி' என்ற பெயரில் எந்தவொரு மதக் கட்டமைப்பையும் கட்டுவதையோ அல்லது பெயரிடுவதையோ தடை செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    சட்ட விவகாரங்கள் செய்தி நிறுவனமான லைவ் லா மற்றும் செய்தி முகமை பிடிஐ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன.

    லைவ் லாவின் கூற்றுப்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. 'பாபரின் பெயரில் மசூதி' கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக மனுதாரரின் வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார், அதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பரில், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர், மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் 'பாபர் மசூதி' என்ற பெயரில் ஒரு மசூதிக்கு அடிக்கல் நாட்டினார்.

    ஹுமாயூன் கபீர் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பரத்பூர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.

  7. இரானை ஒட்டிய பகுதியில் அமெரிக்க ராணுவ இருப்பு அதிகரிப்பு

    அமெரிக்கா - இரான்
    படக்குறிப்பு, யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.ஃபோர்டு மத்திய கிழக்கு நோக்கிச் சென்றது

    பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்திய தகவலின்படி, மேலும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதன்கிழமை உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலாக கருதப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.ஃபோர்ட், மொராக்கோவின் அட்லான்டிக் கடற்கரை அருகே சிறிது நேரம் காணப்பட்டதாக பிபிசி வெரிஃபை கூறுகிறது. அதன் இருப்பிடம் பொதுவெளியில் தெரிந்திருந்த 48 நிமிடங்களில், அந்தப் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் நோக்கி நகர்வதாகத் தோன்றியது. இருப்பினும், அது இன்னும் ஜிப்ரால்டர் நீரிணையைக் கடந்து மத்திய தரைக்கடலுக்குள் நுழைந்ததாகக் காணப்படவில்லை.

    யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.ஃபோர்ட் கப்பலில் இருந்து இயக்கப்பட்ட ஒரு விமானம், வியாழக்கிழமை அட்லான்டிக் பெருங்கடல் நோக்கி மீண்டும் சென்றதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், மற்றொரு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்-ஐ அடையாளம் கண்டதாக திங்கட்கிழமை பிபிசி வெரிஃபை தெரிவித்தது. அந்தப் போர்க்கப்பல், ஒமன் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும், இரான் நாட்டிலிருந்து சுமார் 430 மைல் தொலைவிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாக, மத்திய கிழக்கு பகுதியில் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் (destroyers), போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை பிபிசி வெரிஃபை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

    ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய இரு கப்பல்களும் பல வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்களைக் கொண்ட போர்க்கப்பல் குழுக்களை வழிநடத்துகின்றன. இவற்றின் செயல்பாடுகளில் 5,600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். டஜன் கணக்கான விமானங்களை இவை ஏந்திச் செல்கின்றன.

    செவ்வாய்க்கிழமை, அமெரிக்க மற்றும் இரான் அதிகாரிகளுக்கிடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், “அமெரிக்கா இரானுடன் உடன்படிக்கையை எட்டுமா, அல்லது ராணுவ நடவடிக்கையை எடுக்குமா என்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் உலகம் அறிந்து கொள்ளும்" என்று டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கூறினார்.

  8. “பெரிய பேரழிவிலிருந்து காப்பாற்றினார்”: டிரம்பை பாராட்ட இந்தியாவை குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர்

    டிரம்ப் - பாகிஸ்தான் - அமைதி வாரியம்

    பட மூலாதாரம், Getty Images

    அமைதி வாரியம் (Board of Peace) கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாராட்டினார். அதிபர் டிரம்பின் “வெற்றிகரமான தூதரக முயற்சிகள் உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய உதவியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

    “நீங்கள் (டிரம்ப்) சரியான நேரத்தில் மிகச் செயல்திறனுடன் தலையிட்டு, பாகிஸ்தான் - இந்தியா இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்தினீர்கள். இதனால் கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன” என்று கூறிய ஷபாஸ் ஷரீப், “நீங்கள் உண்மையிலேயே உங்களை ஒரு அமைதித் தூதராக நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் தென் ஆசியாவின் உண்மையான காப்பாளி என்று நான் சொல்ல விரும்புகிறேன்” என்றும் கூறினார்.

    வியாழக்கிழமை, டிரம்ப் நிறுவிய காசாவிற்கான ‘அமைதி வாரியம்’ அமைப்பின் முதல் கூட்டம் வாஷிங்டன் டி.சி-யில் நடைபெற்றது. பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  9. இரான் மீது ராணுவ நடவடிக்கையா? - "10 நாட்களில் தெரியும்" என டிரம்ப் கருத்து

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    இரானுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை எட்டுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை "அடுத்த, அநேகமாக, 10 நாட்களில்" உலகம் கண்டுபிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    வாஷிங்டன் டி.சி.யில் அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசுகையில், இரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் கூறினார்: "நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

    சமீபத்திய நாட்களில், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் மற்றும் சில குடியரசுக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இரானில் எந்தவொரு சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

  10. இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே: சூப்பர் 8 சுற்றில் கடினமான பிரிவு

    ஜிம்பாப்வே - டி20 உலகக் கோப்பை

    பட மூலாதாரம், Getty Images

    டி20 உலகக் கோப்பையில் நேற்று (பிப்ரவரி 19) நடந்த லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறது ஜிம்பாப்வே.

    கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய பதும் நிசங்கா இந்தப் போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் பேட்டரான பவன் ரத்னாயகே 44 ரன்கள் எடுத்தார்.

    இவர்கள் இருவர் தர்வித்து மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

    இந்த இலக்கை சேஸ் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே சீராக ரன் சேர்த்தது. பிரயன் பென்னட் கடைசி வரை களத்தில் இருந்து 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் சிகந்தர் ராஸா 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெறுவதை உறுதி செய்தார். சிகந்தர் ராஸா ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

    ஏற்கெனவே ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளை வீழ்த்தியிருந்த ஜிம்பாப்வே 7 புள்ளிகளோடு பி பிரிவில் முதலிடம் பிடித்தது. அயர்லாந்துக்கு எதிரான அந்த அணியின் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது.

    குரூப் சுற்றில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி, சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய அணிகள் அந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன.

  11. குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பிரதமர் மோதி முன்னிலையில் பேசிய பிரான்ஸ் அதிபர்

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் ஏஐ உச்சி மாநாட்டில் 'குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வது' குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், "பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு சமூக ஊடக வலைத்தளங்களை தடை செய்யும் செயல்முறையைத் தொடங்குகிறோம்" என்றார்.

    "கிரீஸ், ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் இந்தப் பயணத்தில் எங்களுடன் உள்ளன," என்று மக்ரோங் கூறினார்.

    இதற்குப் பிறகு, பிரதமர் மோதியைப் பார்த்து, "நீங்களும் இந்தக் குழுவில் சேருவீர்கள் என்பது எனக்குத் தெரியும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாப்புக்காக இதுபோன்ற ஒரு முயற்சியில் இந்தியாவும் ஒரு பகுதியாக இருக்கும் என்பது மிகவும் நல்ல செய்தி." என்றார்.

    "எங்கள் ஜி7 கூட்டமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்று, ஏஐ மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதாகும்," என்று மக்ரோங் மேடையில் இருந்து கூறினார்.

    "இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பான இடமாக மாற்ற தளங்கள், அரசாங்கங்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்..

  12. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரஷ்யா - இரான் கூட்டு கடற்படை பயிற்சி

    ரஷ்யாவும் இரானும் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்துகின்றன.

    பட மூலாதாரம், Iranian Army/Handout/Anadolu via Getty Images

    படக்குறிப்பு, ரஷ்யாவும் இரானும் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்துகின்றன.

    ரஷ்யாவும் இரானும் வியாழக்கிழமை ஓமன் கடல் மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தின. பாதுகாப்பை மேம்படுத்துவதும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று கூட்டுப் பயிற்சிகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஹசன் மக்சௌட்லூ கூறினார்.

    இரான் அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. அமெரிக்கா இரானுக்கு அருகில் போர்க்கப்பல்களையும் நிறுத்தியுள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே "மறைமுக" பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

    அமெரிக்கா மத்திய கிழக்கில் ராணுவ வளங்களை நிலைநிறுத்தியதால், இரானைச் சுற்றியுள்ள பதற்றங்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதாக ரஷ்யா வியாழக்கிழமை கூறியது. இரான் மற்றும் பிற தரப்பினரிடம் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைபிடிக்குமாறு ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது.

    ரஷ்யா இரானுடன் ஒரு உத்திசார் கூட்டு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அது பரஸ்பர பாதுகாப்பை வழங்கவில்லை.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த வாரம் ஒரு ரஷ்ய கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் இரானிய கடற்படையுடன் பயிற்சிகளை நடத்தியது.

  13. ஏஐ உச்சி மாநாட்டில் ஓபன்ஏஐ சிஇஓ எதிர்கொண்ட 'சங்கடமான' தருணம்

    ஏஐ உச்சி மாநாடு

    பட மூலாதாரம், Ludovic MARIN/AFP via Getty Images

    டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் ஓபன்ஏஐ (OpenAI) தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஒரு 'சங்கடமான' தருணத்தை அனுபவித்தார்.

    போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டிருந்தார். திடீரென்று, பிரதமர் நரேந்திர மோதி அங்கு இருந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் கைகளை கோர்த்து உயர்த்தினார், அப்போதுஆல்ட்மேன் டாரியோவுடன் கையை உயர்த்துவதில் சங்கடமாகத் தோன்றினார்.

    "நான் கொஞ்சம் குழப்பமடைந்தேன், என்ன செய்வது என்று தெரியவில்லை," என்று ஆல்ட்மேன் பிடிஐ செய்தி முகமையிடம் பின்னர் தெரிவித்தார்.

    "பிரதமர் மோதி என் கையைப் பிடித்து உயர்த்தியபோது, என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை." என அவர் தெரிவித்தார்.

    ஆல்ட்மேனும் அமோடியும் கைகுலுக்கலாமா அல்லது அசையாமல் நிற்கலாமா என்று தெரியாமல் சிறிது நேரம் குழப்பமடைந்தனர். மற்றவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தியபோது, ​​அவர்களும் அதையே செய்தார்கள். ஆனால் அவர்களின் கைகள் தொடவில்லை.

    டாரியோவும் அவரது சகோதரி டேனிலாவும் முன்பு ஓபன்ஏஐ-யில் இருந்தனர், ஆனால் ஆல்ட்மேன் மற்றும் நிர்வாகக் குழுவுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020ம் ஆண்டில் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினர். பின்னர் இருவரும் ஆந்த்ரோபிக் எனும் நிறுவனத்தை நிறுவினர், அந்நிறுவனம் அப்போதிலிருந்து ஓபன்ஏஐ நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.

  14. 'தி கேரளா ஸ்டோரி' இரண்டாம் பாகம் குறித்து கவலை தெரிவித்த பினராயி விஜயன்

    தி கேரளா ஸ்டோரி

    பட மூலாதாரம், The Kerala Story

    படக்குறிப்பு, "இந்த முயற்சிகளை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்" என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

    சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படம் "தி கேரளா ஸ்டோரி". இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தூண்டியது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் தொடர்பாக, ​கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில், "வெறுப்பு பிரசார திரைப்படமான 'தி கேரளா ஸ்டோரி'யின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

    "முதல் பாகத்திலேயே வகுப்புவாத நோக்கங்களும் பொய்களும் தெளிவாகத் தெரிந்தன. நமது மதச்சார்பற்ற அடையாளத்தை அவமதிக்கும் இந்த முயற்சியை கேரளா மீண்டும் நிராகரிக்கும்."

    மேலும், "சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட பொய்யான கதைகள் எளிதில் அங்கீகரிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலையின் உண்மையான மற்றும் விமர்சன வெளிப்பாடு அடக்கப்படுகிறது."

    "நமது அமைதி மற்றும் நல்லிணக்க நிலத்தை பயங்கரவாத இடமாக சித்தரிக்கும் இந்த முயற்சிகளை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்."

  15. கோவை குறித்து தயாநிதி மாறன் பேசியது சர்ச்சையானது ஏன்?

    தயாநிதி மாறன்

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, தயாநிதி மாறன்

    கரூரில் சில தினங்களுக்கு முன்பு திமுக எம்.பி தயாநிதி மாறன் கோவை மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் தொகுதியில் திமுகவின் கூட்டத்தில் பேசிய தயாநிதி, “கோவை மக்கள் அவர்கள் ஊரை கெடுக்க மாட்டார்கள், ஆனால் மற்ற ஊரை…” எனக்கூறி சிரித்துப் பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த செந்தில் பாலாஜியும் சிரித்தார்.

    இந்நிலையில், கோவை மக்களை அவமதிக்கும் விதமாக தயாநிதி மாறன் பேசியதாக, பாஜக, அமமுக போன்ற கட்சிகள் எதிர்வினையாற்றியுள்ளன.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டுக்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னுடைய பேச்சுக்கு தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறனின் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.” என தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி சமூக ஊடக பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் பாஜகவின் மாநிலத் தலைவராக (அண்ணாமலை) இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன? கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன? “ என கேள்வியெழுப்பியுள்ளார்.

  16. வணக்கம் நேயர்களே!

    இன்று(19-02-2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் செய்திகளை சுருக்கமாக தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.

  17. MANAV: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி அறிமுகப்படுத்திய தொலைநோக்கு திட்டம்

    பிரதமர் மோதி

    பட மூலாதாரம், ANI

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை அன்று டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சிமாநாட்டில் 'MANAV' (மனிதன்) என்ற தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    “இதிலுள்ள 'M' என்பது "ஒழுக்க மற்றும் அறநெறி அமைப்புகளை" (Moral and Ethical Systems) குறிக்கிறது. ஏஐ ஆனது அறநெறி வழிகாட்டுதலின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 'A' என்பது "பொறுப்பான நிர்வாகத்தை" (Accountable Governance) குறிக்கிறது, அதாவது வெளிப்படையான விதிகள் மற்றும் வலுவான மேற்பார்வை” என்று அவர் விளக்கமளித்தார்.

    “N- தேசிய இறையாண்மை (National Sovereignty), அதாவது தரவு (data) யாரிடம் இருக்கிறதோ, அவர்களுக்கே உரிமை உண்டு. A- அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கியது (Accessible and Inclusive). அதாவது ஏஐ ஒரு ஏகபோக அதிகாரம் கொண்டதாக மாறக்கூடாது. V- செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமானது (Valid and Legitimate) அதாவது AI சட்டபூர்வமானதாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

    "இந்தியாவின் இந்தப் பார்வை, 21-ஆம் நூற்றாண்டின் ஏஐ அடிப்படையிலான உலகில் மனிதகுலத்தின் நலனுக்கான ஒரு முக்கியமான இணைப்பாக மாறும்" என பிரதமர் கூறினார்.

    "ஏஐ, இயந்திரங்களை புத்திசாலியாக மாற்றுகிறது மற்றும் மனித திறன்களை பலமடங்கு அதிகரிக்கிறது. ஒரே வித்தியாசம் - இந்த முறை அதன் வேகம் முன்னெப்போதும் இல்லாதது மற்றும் அதன் அளவும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.”

    "முன்பெல்லாம், தொழில்நுட்பத்தின் தாக்கம் தெரிவதற்கு பல தசாப்தங்கள் ஆனது. இன்று, இயந்திர வழி கற்றலில் இருந்து கற்கும் இயந்திரங்கள் வரையிலான பயணம் வேகமாகவும், விரிவாகவும் உள்ளது." எனப் பிரதமர் மோதி தெரிவித்தார்.

    "இன்று, நம்முன் இருக்கும் கேள்வி எதிர்காலத்தில் ஏஐ என்ன செய்ய முடியும் என்பதல்ல, நிகழ்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான். இத்தகைய கேள்விகள் இதற்கு முன்பும் மனிதகுலத்தின் முன் வந்துள்ளன. இதற்கு மிகவும் சக்திவாய்ந்த உதாரணம் அணுசக்தி ஆகும். அதன் அழிவையும் அதே சமயம் அதன் பங்களிப்பையும் நாம் பார்த்திருக்கிறோம். ஏஐ-யும் ஒரு மாற்றும் சக்தியாகும்" என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

  18. இந்தியாவைப் பாராட்டிய பிரான்ஸ் அதிபர் - கூறியது என்ன?

    பிரான்ஸ் அதிபர்

    பட மூலாதாரம், Ludovic Marin / AFP via Getty

    டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற AI இம்பாக்ட் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ராங், இந்தியாவின் UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) அமைப்பைப் பாராட்டினார்.

    இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பையும் மக்ராங் பாராட்டியுள்ளார். "உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காததை இந்தியா உருவாக்கியுள்ளது. 1.4 பில்லியன் மக்களுக்கான டிஜிட்டல் அடையாளம்.

    இப்போது ஒவ்வொரு மாதமும் 20 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கையாளும் ஒரு கட்டண முறை. 500 மில்லியன் டிஜிட்டல் சுகாதார ஐடிகளை வழங்கிய ஒரு சுகாதார உள்கட்டமைப்பு" என்று அவர் கூறினார்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் ஒரு தெரு வியாபாரியால் வங்கிக் கணக்கைத் திறக்க முடியவில்லை என்றும், ஆனால் இன்று, அதே விற்பனையாளர் தங்கள் தொலைபேசியில் பணம் செலுத்துகிறார் எனவும் மக்ராங் கூறினார்.

  19. 'திமுகவுடன் தேமுதிக கூட்டணி' - ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்

    திமுக கூட்டணியில் தேமுதிக - முதலமைச்சரை சந்தித்தார் பிரேமலதா

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் முதலமைச்சரை சந்தித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என கூறியுள்ளார்.

    இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது.

  20. ‘எப்ஸ்டீன் என்னை ஏமாற்றிவிட்டார்’- அமெரிக்க கோடீஸ்வரர் லெஸ் வெக்ஸ்னர்

    ‘எப்ஸ்டீன் என்னை ஏமாற்றிவிட்டார்’- அமெரிக்க கோடீஸ்வரர் லெஸ் வெக்ஸ்னர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லெஸ் வெக்ஸ்னர்

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெரும் செல்வங்களைக் குவிக்க உதவியதில் முக்கிய பங்கு வகித்ததாகக் அமெரிக்க கோடீஸ்வரர் லெஸ் வெக்ஸ்னர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

    மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனை நம்பியதற்காக “தன்னை ஓர் அப்பாவி, முட்டாள் மற்றும் ஏமாளி" என்று அவர் விவரித்துள்ளார்.

    அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் முன் அளித்த வாக்குமூலத்தில், ‘விக்டோரியாஸ் சீக்ரெட் லாஞ்சரே’ பிராண்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான வெக்ஸ்னர், “எப்ஸ்டீன் எனது நிதி ஆலோசகராகப் பணியாற்றியபோது எனது குடும்பத்திலிருந்து பெருமளவிலான பணத்தைத் திருடியதாகக்” குற்றம் சாட்டினார்.

    எப்ஸ்டீன் வழக்கு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக ஒரு சபைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த வெக்ஸ்னர், எந்தவொரு தவறான செயலையும் மறுத்துள்ளார்.

    2019 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ ஆவணத்தில் அவர் எப்ஸ்டீனின் சாத்தியமான கூட்டாளியாக விவரிக்கப்பட்டார், ஆனால் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எப்ஸ்டீனின் குற்றங்களைப் பற்றி தெரிந்திருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியதாக வெக்ஸ்னர் மீது அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.

    எப்ஸ்டீனுடனான தனது உறவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க புதன்கிழமை (பிப்ரவரி 18) அன்று பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் முன் வெக்ஸ்னர் அழைக்கப்பட்டார்.

    "ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது நம்பிக்கை வைத்ததில் நான் அப்பாவித்தனமாகவும், முட்டாள்தனமாகவும், ஏமாளியாகவும் இருந்துவிட்டேன்," என்று அவர் கூறினார்.

    "அவர் ஒரு மோசடிப் பேர்வழி. நான் ஏமாற்றப்பட்டாலும், நான் எந்தத் தவறும் செய்யவில்லை, மறைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை."

    "சாட்சியமளிப்பதில் மகிழ்ச்சி" அடைவதாகவும், "உண்மைகளை நிலைநாட்ட" விரும்புவதாகவும் வெக்ஸ்னர் கூறினார்.

    அதேசமயம், தனது குடும்பத்துடன் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவிற்கு "சில மணிநேரங்கள்" சென்றதாகவும் வெக்ஸ்னர் கூறினார்.

    முன்னதாக, துணை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் டோட் பிளாஞ்ச் முன்பு வெக்ஸ்னரின் பெயர் ‘எப்ஸ்டீன் கோப்புகளில் ஆயிரக்கணக்கான முறை தோன்றுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.