டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

  • கவுஹாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

    இந்திய அணி வெறும் 10 ஓவர்களில் வெற்றி பெற்றது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இந்திய அணி வெறும் 10 ஓவர்களில் வெற்றி பெற்றது.

    கவுஹாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

    154 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து, அதை அடைந்தது.

    அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இரு பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

  2. டி20 போட்டி: இந்திய அணிக்கு 154 ரன் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து அணி

    இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டியின் போது டிம் சீஃபர்ட் ஒரு ஷாட் அடிக்கிறார்.

    பட மூலாதாரம், Biju BORO/AFP via Getty Images

    படக்குறிப்பு, இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டியின் போது டிம் சீஃபர்ட் ஒரு ஷாட் அடிக்கிறார்.

    கவுஹாத்தியில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 154 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 48 ரன்கள் எடுத்தார்.

    மறுபுறம், இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

  3. குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியது என்ன?

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    பட மூலாதாரம், ANI

    இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

    குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், "ஜனவரி 26, 1950 முதல், நமது குடியரசை அரசியலமைப்பு லட்சியங்களை நோக்கி முன்னோக்கி எடுத்துச் சென்று வருகிறோம். அன்று, நமது அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்தினோம்... நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் லட்சியங்கள் நமது குடியரசை வரையறுக்கின்றன" என்றார்.

    நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, "வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் சுறுசுறுப்பான மற்றும் அதிகாரம் பெற்ற பங்கேற்பு மிகவும் முக்கியமானது" என்றார்.

    "'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' (Beti Bachao, Beti Padhao) பிரசாரம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் இதுவரை 57 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவிகிதம் பெண்களின் வங்கிக் கணக்குகள்."

    "விளையாட்டுத் துறையில் நமது மகள்கள் உலக அளவில் புதிய மைல்கற்களை நிர்ணயித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், இந்திய மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்றோர் பெண்கள் டி20 உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம் வரலாற்றைப் படைத்தனர்."

    "கடந்த ஆண்டு தான், சதுரங்க உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவின் இரண்டு மகள்களுக்கு இடையே நடைபெற்றது. விளையாட்டு உலகில் நமது மகள்களின் ஆதிக்கத்திற்கு இந்த உதாரணம் ஒரு சான்றாகும்."

    நாட்டின் பொருளாதாரம் குறித்து குடியரசு தலைவர் கூறுகையில், "இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம். உலக அரங்கில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியா தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வருகிறது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான எங்கள் இலக்கை அடைவதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

  4. பத்ம விருதுகள் அறிவிப்பு - தமிழ்நாட்டிலிருந்து யாரெல்லாம் விருது பெறுகின்றனர்?

    கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி

    பட மூலாதாரம், padmaawards

    படக்குறிப்பு, கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி

    நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டிலிருந்து கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி (மருத்துவம்), எஸ்கேஎம் மயிலானந்தம் (சமூக சேவை) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (கலை), ஹெச் வி ஹண்டே (மருத்துவம்), கே ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்) கே விஜய் குமார் (குடிமைப் பணிகள்), மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), ஆர் கிருஷ்ணன் (கலைப்பிரிவு, இறப்புக்குப் பின்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கலை), திருவாரூர் பக்தவத்சலம் (கலை) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன்

    பட மூலாதாரம், padmaawards

    படக்குறிப்பு, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன்

    அதேபோன்று, பிரபல நடிகர் மாதவனுக்கு (மகாராஷ்டிரா) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த திரைப்பட நடிகர் தர்மேந்திராவுக்கு மறைவுக்குப் பின் வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருடன், மேலும் நான்கு பேருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறை, 13 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தர்மேந்திரா, கே.டி. தாமஸ், என். ராஜன், பி. நாராயணன் மற்றும் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தர்மேந்திராவுடன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், வயலின் கலைஞர் என். ராஜம், இலக்கியம் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த பி. நாராயணன் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல பாடகி அல்கா யாக்னிக், உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் பகத் சிங் கோஷ்யாரி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மறைந்த ஜே.எம்.எம் தலைவர் ஷிபு சோரன், மறைந்த பாஜக தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

    பத்ம விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

    பத்ம விருதுகள் 1954 இல் நிறுவப்பட்டன. 1978, 1979 மற்றும் 1993 முதல் 1997 வரையிலான ஆண்டுகளைத் தவிர, இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன.

    இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. விதிவிலக்கான மற்றும் சிறப்பான சேவைக்காக பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.

    உயரிய சேவைக்காக பத்ம பூஷண் வழங்கப்படுகிறது மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக பத்மஸ்ரீ வழங்கப்படுகிறது.

    இந்திய அரசின் கூற்றுப்படி, இந்த விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமை சேவை மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கம் கொண்டவை.

    அரசாங்கத்தின் கூற்றுப்படி, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபரின் சாதனைகள் பொது சேவையின் ஒரு அங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

    பத்ம விருதுகள் குழு ஆண்டுதோறும் பிரதமரால் அமைக்கப்படுகிறது. பத்ம விருதுகளுக்கான குழுவின் பரிந்துரைகள் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகின்றன.

    விருது வழங்கும் விழா பெயர் அறிவிக்கப்பட்ட இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும்.

    இந்த விருது குடியரசு தலைவரின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் பதக்கத்தைக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு விருது வென்றவர் பற்றிய சுருக்கமான விவரங்கள் அடங்கிய ஒரு நினைவுப் பரிசும் விழா நாளில் வெளியிடப்படும்.

    விருது பெறுபவருக்கு பதக்கத்தின் பிரதியும் வழங்கப்படுகிறது, அதை அவர்கள் விரும்பும் எந்த நிகழ்விலும் அணியலாம்.

    விருது பெறுபவர்களுக்கு எந்த பண உதவித்தொகையும் கிடைக்காது, அவர்களுக்கு ரயில் அல்லது விமானப் பயணத்தில் சலுகையும் இல்லை.

  5. இன்று மூன்றாவது டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா?

    இந்தியா - நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் மூன்றாவது போட்டி கௌஹாத்தில் இன்று நடைபெறுகிறது. முதலிரு போட்டிகளையும் வென்றிருக்கும் இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும்.

    இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி ஓரளவு எளிதாகவே நியூசிலாந்தை வீழ்த்தியது. முதல் போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே அசத்தி 48 ரன்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் தொடக்கத்தில் சற்று தடுமாறியிருந்தாலும், அதன்பிறகு நல்ல கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது.

    இரண்டு போட்டிகளிலும் பேட்டர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக இஷான் கிஷன், சூர்யகுமார் இருவரும் நன்றாக ஆடியிருப்பது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும். அதேசமயம் சஞ்சு சாம்சனின் செயல்பாடு மீது நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. கடைசி 7 இன்னிங்ஸ்களில் அவர் அரைசதம் அடிக்கவில்லை. அதேசமயம், இப்போது இஷான் கிஷன் நன்றாக ஆடிக்கொண்டிருப்பதால் அவர் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    பந்துவீச்சில் இந்திய அணி இந்த இரண்டு போட்டிகளிலுமே சில மாற்றங்களை செய்தது. பும்ராவுக்கு கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அவர் இந்தப் போட்டிக்கு மீண்டும் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடாத அக்‌ஷர் பட்டேலும் மீண்டும் அணிக்குத் திரும்பலாம்.

    அதேசமயம் நியூசிலாந்து அணியிலும் ஜேம்ஸ் நீஷம் இந்தப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி நடக்கும் கவுஹாத்தியில் அதிக ரன்கள் எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இங்கு நடந்த கடைசி 2 சர்வதேச டி20 போட்டிகளின் 4 இன்னிங்ஸ்களிலுமே 220+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டன.

    இந்தப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

  6. சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா மீது 100% சுங்க வரி - டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால், கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    “கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவுக்குள் வரும் அனைத்து கனடிய பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும்” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறினார்.

    டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் எந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரம், கனடாவின் பிரதமர் கார்னி சீனாவுடன் ஒரு "மூலோபாய கூட்டாண்மையை" அறிவித்தார், மேலும் வரிகளைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டார்.

    அந்த நேரத்தில், டிரம்ப் இந்த நடவடிக்கையை “நல்ல விஷயம்” என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், டாவோஸில் ஆற்றிய உரையில் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாக கார்னி கூறியதையடுத்து, சமீப நாட்களில் அமெரிக்கா - கனடா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

    மேலும், “பெரும் சக்திகள்” மேற்கொள்ளும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராக, பிற “நடுத்தர சக்திகள்” ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கார்னி வலியுறுத்தினார். ஆனால், அவர் தனது உரையில் டிரம்ப் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

    அடுத்த நாளே, இந்த கருத்துகளுக்கு டிரம்ப் தனது உரையில் பதிலளித்தார். அதில் அவர், “அமெரிக்காவால்தான் கனடா வாழ்கிறது” என்று கூறினார். தனது புதிய அமைதி வாரியத்தில் கனடாவை சேர விடுத்திருந்த அழைப்பையும் டிரம்ப் திரும்பப் பெற்றார்.

  7. ரஷ்யா - யுக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

    உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸால் நடத்தப்படுகிறது

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸால் நடத்தப்படுகிறது

    ரஷ்யா, யுக்ரேன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை அபு தாபியில் நடைபெற்றது. அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

    அடுத்த வாரமே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். அதேசமயம், பிப்ரவரி 1ஆம் தேதி புதிய சுற்று பேச்சுகள் தொடங்கும் என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.

    இரண்டு நாட்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நேரத்தில், ரஷ்யா மேற்கொண்ட தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் யுக்ரேனில் ஏற்கனவே கடுமையாக சேதமடைந்துள்ள மின்சார உள்கட்டமைப்பை குறிவைத்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் நிலப்பகுதியில், ஒரு ஆம்புலன்ஸை யுக்ரேன் தாக்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அந்த தாக்குதலில் மூன்று மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது. பின்னர், பெல்கொராட் பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து யுக்ரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் அது கூறியது.

    இந்த தகவல்களை சுயாதீனமாக பிபிசி-யால் உறுதிப்படுத்த முடியவில்லை.

    2022-ஆம் ஆண்டு தனது அண்டை நாட்டுக்கு எதிராக முழுமையான படையெடுப்பை கிரெம்ளின் தொடங்கியதற்குப் பிறகு, அபுதாபியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளே ரஷ்யா, யுக்ரேன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான முதல் முத்தரப்பு சந்திப்பாகும்.

  8. ராயல் சேலஞ்சர்ஸுக்கு முதல் தோல்வி - டெல்லியிடம் வீழ்ந்தது

    டெல்லி கேபிடல்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ் (கோப்பு படம்)

    2026 டபிள்யூபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்திருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த அந்த அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி தொடக்க ஜோடி நிதானமாக ஆடியது. இருந்தாலும் பவர்பிளேவுக்குள்ளேயே கிரேஸ் ஹேரிஸ் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் நந்தனி ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மின்னு மணி, சினெல் ஹென்றி, மரிசான் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க ஜோடியை விரைவாக இழந்தாலும், லாரா வோல்ஃபார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மரிசான் காப் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால், 15.4 ஓவர்களிலேயே அந்த அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. லாரா வோல்ஃபார்ட் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்.

    டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் மரிசான் காப் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார். அவர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கிலும் அவர் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 6 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

  9. அமெரிக்கா: குடியேற்ற அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - வன்முறை

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

    பட மூலாதாரம், Michael Pretti/AP

    படக்குறிப்பு, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அலெக்ஸ் பிரெட்டி

    அமெரிக்காவின் மினியாபோலிஸில் பெடரல் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து நகரில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

    மினியாபோலிசைச் சேர்ந்த 37 வயதான செவிலியர் மற்றும் அமெரிக்க குடிமகனான அலெக்ஸ் பிரெட்டி என்பவரே உயிரிழந்தவர் என்று மினியாபோலிஸ் செனட்டர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

    அமெரிக்க குடிமகன் ரெனீ குட் அதே நகரத்தில் குடியேற்ற முகவரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று வாரங்களுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அலெக்ஸ் பிரெட்டி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால் அதிகாரிகள் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறினார்.

    மினியாபோலிஸ் மேயர் மற்றும் மினியாபோலிஸ் ஆளுநர் டிம் வால்ஸ் 'கிளர்ச்சியைத் தூண்டுவதாக' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    மினியாபோலிஸில் பெடரல் முகவர்களை மாகாணாத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக ஆளுநர் வால்ஸ் கூறினார்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மினியாபோலிஸில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  10. மதுரை: 2 பேருந்துகள் மோதியதில் 3 பேர் பலி - 15 பேர் காயம்

    மதுரை, 2 பேருந்துகள் மோதல்

    மதுரை மேலூர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் மற்றொரு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி புறநகர்ப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் பேருந்தில் கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் ( 23), மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பெண் பயணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் உதவினர். அத்துடன், விபத்து குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

  11. 'நீதிபதிகள் இடமாற்றத்தில் மத்திய அரசு தலையீடு' - உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு

    உச்ச நீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசு தலையிடுவது நீதித்துறையை பலவீனப்படுத்துகிறது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு சட்டக் கல்லூரியில் உரையாற்றிய போது, ​​"நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் நியமனம் ஆகியவை முழுவதுமாக நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இதில் மத்திய அரசின் தலையீடு இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.

    "அரசுக்கு எதிராக சில சங்கடமான உத்தரவுகளைப் பிறப்பித்ததற்காக மட்டும் ஒரு நீதிபதி ஏன் ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்? இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்தை நேரடியாகப் பலவீனப்படுத்துகின்றன என்று நீதிபதி புயான் கவலை தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "இயல்பாகவே, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்களில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒரு நீதிபதியை இடமாற்றம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்று அது கூற முடியாது. இது முற்றிலும் நீதித்துறையின் தனிப்பட்ட உரிமை," என்றார்.

  12. வணக்கம் நேயர்களே!

    இன்று (25/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா

  13. ஆப்கானிஸ்தான் பனிப்பொழிவு: குறைந்தது 61 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் பனிப்பொழிவு

    பட மூலாதாரம், Shah Poor AFZALLY / AFP via Getty Images

    கடந்த மூன்று நாட்களில் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

    இந்தப் பனிப்புயல் மற்றும் பனிச்சரிவுகளால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த முகமை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அந்த முகமை கூறியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் பனிப்பொழிவு

    பட மூலாதாரம், Shah Poor AFZALLY / AFP via Getty Images

    படக்குறிப்பு, சாலைகளில் உள்ள பனியை அகற்றும் மக்கள்

    கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. காபூலை வடக்கு மாகாணங்களுடன் இணைக்கும் இந்து குஷ் மலைத்தொடர் மீதான முக்கிய நெடுஞ்சாலையும் இதில் அடங்கும்.

    பாமியான், பர்வான், பால்க் மற்றும் மைதான் வர்தாக் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்கள் இந்தப் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

  14. 'எஸ்ஐஆர் நடக்கும் இடங்களிலெல்லாம் வாக்கு திருட்டு" - ராகுல் காந்தி கூறியது என்ன?

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சனிக்கிழமை அன்று, குஜராத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையின் கீழ், காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    ராகுல் காந்தி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கெல்லாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடக்கிறது. குஜராத்தில் SIR என்ற பெயரில் செய்யப்படுவது எந்தவிதமான நிர்வாகச் செயல்முறையும் அல்ல. அது திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தந்திரமான வாக்குத் திருட்டு." என தெரிவித்துள்ளார்.

    "குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளும், காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. பாஜக எங்கு தோல்வியைச் சந்திக்கிறதோ, அங்கெல்லாம் வாக்காளர்களே இந்த அமைப்பிலிருந்து அகற்றப்படுகிறார்கள்."

    "தேர்தல் ஆணையம் இனி ஜனநாயகத்தின் பாதுகாவலராக இல்லை, மாறாக இந்த வாக்குத் திருட்டுச் சதியில் ஒரு முக்கியப் பங்கேற்பாளராக மாறிவிட்டது." எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான அவர், பாஜக யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக, 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு' என்ற அரசியலமைப்பு உரிமையை ஒழிக்கும் ஒரு ஆயுதமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

  15. ஓபிஎஸ் ஆதரவாளரான தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

    ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
    படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தர்மர் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

    2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். எனினும், 2021ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழிநடத்தினர். அச்சமயத்தில் 2022ம் ஆண்டு, ராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தர்மருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

    எனினும், அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் தனியே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதில் தன்னை இணைத்துக்கொண்ட தர்மர் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டார்.

    இந்தநிலையில் தான், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தன் ஆதரவாளர்களுடன் தர்மர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தர்மர், “நான் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர். தீயசக்தியான திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இன்னும் நூறாண்டு காலம் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க அதிமுகவில் இணைந்துள்ளோம்” என்றார்.

    தன்னுடைய முடிவு குறித்து ஓபிஎஸ்ஸிடம் கூறப்பட்டதா என்ற கேள்விக்கு, “என்னுடைய நிலைப்பாடு இது. யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் சுயமாக எடுத்த முடிவு இது.” என்றார்.

    முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

  16. "கட்சியின் நிலைப்பாட்டை மீறவில்லை" - சசி தரூர் எம்.பி

    காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சனிக்கிழமை அன்று, தான் எந்த மட்டத்திலும் கட்சியின் நிலைப்பாட்டை மீறவில்லை என்று தெரிவித்தார்.

    கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த தரூர், 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் கொள்கை ரீதியாக கட்சியுடன் தனக்கு ஒரே பொதுவான கருத்து வேறுபாடு இருந்ததாக கூறினார்.

    தரூர் கூறுகையில், "எனது எந்தவொரு பொது கருத்துகளையும் நீங்கள் பார்த்தால், நாடாளுமன்றத்தில் எந்த மட்டத்திலும் நான் கட்சியின் நிலைப்பாட்டை மீறவில்லை. கொள்கை ரீதியாக பொதுவான கருத்து வேறுபாடு ‘ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் தான் இருந்தது. அந்த விஷயத்தில் நான் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தேன்." என்றார்.

    தரூர் கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

    இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​சசி தரூர் கூறுகையில், "நான் சொல்லக்கூடியது எல்லாம், சில பிரச்னைகள் உள்ளன, அவற்றை நான் எந்தவொரு பொது மன்றத்திலும் அல்லாமல், எனது கட்சித் தலைமையுடன் விவாதிக்க வேண்டும்... நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். அப்போது கட்சித் தலைமையிடம் எனது கவலைகளைத் தெளிவுபடுத்தவும், அவர்களின் பார்வையை அறிந்துகொள்ளவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்... அப்போது ஒரு முறையான விவாதம் நடைபெறும்." என தெரிவித்தார்.

  17. ஐரோப்பிய ஒன்றியத்திலும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சிக்கல்

    இந்தியாவிற்கு வழங்கி வந்த இறக்குமதி வரி விலக்கை நிறுத்திவைத்த ஐரோப்பிய ஒன்றியம்

    பட மூலாதாரம், AFP via Getty Images

    அமெரிக்க வரிகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    'பொதுவான விருப்பத்தேர்வு முறை' (GSP)- இன் கீழ் இந்தியாவிற்கு, சில பொருட்களின் மீது வழங்கப்பட்ட இறக்குமதி வரி விலக்கை ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி 1, 2026 முதல் நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த முடிவால் பாதிக்கப்படும் பொருட்களில் கனிமங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், இரும்பு, எஃகு, ரப்பர், ஜவுளி, முத்துகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

    ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய ஏற்றுமதிகளில் தோராயமாக 87 சதவீதம் ஜிஎஸ்பி-யிலிருந்து விலக்கப்பட்டு, முழுமையாக ‘மிகவும் விரும்பப்படும் நாடு (MFN)’ என்ற வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, 1.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படும்.

    இந்த முடிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இதழில் அறிவிக்கப்பட்டது மற்றும் செப்டம்பர் 25, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஆணைய ஒழுங்குமுறையைப் இது பின்பற்றுகிறது.

    ஜிஎஸ்பி-யின் கீழ், இந்திய ஏற்றுமதியாளர்கள் எம்எஃப்என் (MFN) விகிதங்களை விட குறைந்த கட்டணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொருட்களை அனுப்ப முடிந்தது.

    எடுத்துக்காட்டாக, எம்எஃப்என் கீழ் 12 சதவீத வரிக்கு உட்படும் ஜவுளிப் பொருட்கள் ஜிஎஸ்பி-யின் கீழ் 9.6 சதவீத வரிக்கு மட்டுமே உட்பட்டன.

    இந்த ஜிஎஸ்பி இடைநிறுத்தம் ஜனவரி 1, 2026 முதல் டிசம்பர் 31, 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்தோனீசியா மற்றும் கென்யாவிலும் இதே போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஜனவரி 27 அன்று அறிவிக்கப்படலாம் என்பதால் இது இந்தியாவிற்கு ஒரு அடியாக கருதப்படுகிறது.

  18. சென்னையில் 2வது நாளாக மழை: இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இருந்து பெய்யும் மழை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னை நகரில் கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்​திக்​குறிப்பில், “கிழக்கு திசை​யில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை நிகழ்வு தற்போது நில​வு​கிறது. மேலும் தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (ஜனவரி 24) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்கால் பகு​தி​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை (ஜனவரி 25) தமிழகத்​தில் ஒரு சில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, ஜனவரி 26 உள் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​ல் ஓரிரு இடங்களி​லும் மித​மான மழை பெய்​யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. வணக்கம் நேயர்களே!

    இன்று (24/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது சிராஜ்.

  20. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!