நேதாஜி ஆவணங்களை அரசியலாக்கக் கூடாது:கோபாலகிருஷ்ண காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல இரகசிய ஆவணங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளதை, யாரும் அரசியலாக்கக் கூடாது என காந்தி-ராஜாஜி ஆகியோரின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தான் வரவேற்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இவ்வளவு ஆண்டுகளாக அந்தத் தகவல்கள் இரகசியமாக இருந்தது சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.

ஆவணங்களின் அடிப்படையிலேயே சரித்திரம் எழுத்தப்பட வேண்டும், அப்படியான சூழலில் ஆவணங்களை பூட்டி பாதுகாப்பாக வைக்கக் கூடாது எனவும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.

மிக நீண்ட காலத்துக்கு பிறகு இந்திய மத்திய அரசு நேதாஜி தொடர்பான பல ஆவணங்களை இன்று-சனிக்கிழமை அவரது பிறந்த தினத்தையொட்டி வெளியிட்டது.

சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி, அந்த ஆவணங்களை டிஜிடல் வடிவில் தேசிய ஆவணக் காப்பகத்திடம் அளித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

எனினும் இன்னும் பல ஆவணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

அந்த ஆவணங்களும் விரைவில் வெளியிடப்படும் எனத் தான் நம்புவதாக கோபாலகிருஷ்ண காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இதை வெளியிட்டிருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.