ஷோலே திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள்

1975ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளியான ஷோலே, தற்போதுவரை இந்தியாவின் முக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், சஞ்சீவ் குமார், ஹேமமாலினி என ஹிந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த ஷோலே, வெளியானவுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து ரசிகர்கள் திரையரங்குகளில் குவிய ஆரம்பித்தனர்.

60 திரையரங்குகளில் பொன்விழா கண்ட இந்தத் திரைப்படம், 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கண்டது.

ஆர்டி பர்மன் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும் இந்தியா முழுவதும் கேட்டு ரசிக்கப்பட்டன.

இந்தப் படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைப்பவை என்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானின் நடிப்பும் பலரையும் கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடயவை அல்ல என்கிறார் அசோகமித்திரன்.

ஆனால், இந்தப் படம் வர்த்தகரீதியாக பெரும் வெற்றிபெற்ற படம் என்பதைத் தவிர, வேறுவகையில் குறிப்பிடத்தக்க படம் அல்ல என்கிறார் திரைப்பட விமர்சகரான தியடோர் பாஸ்கரன்.

இருந்தபோதும், 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க ஒரு திரைப்படமாகவே ஷோலே இருந்துவருகிறது.