டாஸ்மாக் இல்லையென்றால் தமிழக அரசு தள்ளாடுமா? தாக்குப்பிடிக்குமா?
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமென தி.மு.க. தலைவர் மு கருணாநிதி அறிவித்ததையடுத்து, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் மீண்டும் சூடுபிடித்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் வரி வருவாயில் சுமார் 30 சதவீதம் மதுவிற்பனையில் இருந்துதான் கிடைக்கிறது என்ற நிலையில், முழுமையான மதுவிலக்கு தமிழ்நாட்டில் சாத்தியமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசினார், மாநில திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் பொருளாதாரத் துறை பேராசிரியருமான ஆர். சீனிவாசன்.
தமிழ்நாடு அரசு தன்னுடைய பிற வரி வருவாயை வசூலிப்பதில் பின்தங்கியுள்ளது என்று கூறும் சீனிவாசன், தேவையில்லாத அரச செலவினங்களின் அளவும் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
எனவே மதுவிலக்கால் ஏற்படும் கணிசமான வருவாய் இழப்பை ஈடுகட்டவேண்டுமானால் தமிழக அரசு தனது பிற வரி வருவாயை வசூலிப்பதை அதிகப்படுத்தவேண்டும் என்றும், அரச செலவினங்களை குறைக்கவேண்டும் என்றும் ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார்.
மேலும் மது விற்பனை நிறுத்தப்பட்டால், இலவசங்களுக்கான தேவையும் தமிழகத்தில் குறைந்துவிடும் என்பதால் அதற்காகும் செலவையும் மிச்சம் பிடிக்க முடியும் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்.