
தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுப்பிக்கப்பட்டிருக்கும் மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையோரம் 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாகிய எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முகப்பினை மாற்றியமைத்தல் மற்றும் முன்பக்கச் சுற்றுச் சுவரினைப் புதுப்பித்தல் பணிகள் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும், எழிலுட்டும் பணிகள் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆளும் அ இஅதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டைஇலையும் அங்கே இப்போது புதிதாக எழுப்பப்பட்டிருக்கிறது.
மத்தியில் அமைந்துள்ள புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமாதியினை சுற்றி அமைந்துள்ள நீர் அகழியிலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் பின்பகுதியில் அழகிய விளக்குகளுடன் கூடிய அரைவட்ட வடிவிலான செயற்கை நீர்வீழ்ச்சியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பின்படி திமுக நிறுவனர் அண்ணா நினைவிடம் 1.20 கோடி ரூபாய் செலவிலும் எம்.ஜி.ஆர் நினவிடம் 8.70கோடி ரூபாய் செலவிலும் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்றைய செய்திக் குறிப்பில் அண்ணா நினைவிடப்பணிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடத்தை தனது 1991-96 ஆட்சிக்காலத்திலேயே ஜெயலலிதா மாற்றி வடிவமைத்திருந்தார்.
தன் பங்கிற்கு திமுகவும் 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அண்ணா நினைவிடத்தில் சில மாறுதல்கள் செய்தது.
சுனாமியால் இரு நினைவிடங்களுமே ஓரளவு பாதிக்கப்பட்டன ஆனால் பின்னர் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அண்மையில் மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் பல கோடி ரூபாய்களை எம்.ஜி.ஆர் நினைவிடப் புதுப்பிப்பிற்காக வீண்செய்யலாமா எனக்கேட்கும் பொது நல வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறவும்பட்டது.







