
மறக்க முடியாத கலவரம்
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மாயா கொட்நானி மற்றும் ஹிந்து இயக்கமான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவருமான பாபு பஜ்ரங்கி ஆகியோரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நரோதா பாடியா கலவரம் என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 29 பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
ஆமதாபாத் நகரில் உள்ள நரோதா பாடியா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நடந்த கலவரத்தில், 95 பேர் கொல்லப்பட்டார்கள்.
மாயா கொட்நானி, பாபு பஜ்ரங்கி உள்பட குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க்பபட்ட அனைவரும் கொலை மற்றும் கிரிமினல் சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. 62 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
நரேந்திர மோடி அமைச்சரவையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மாயா கொட்நானி, இந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பழிவாங்கும் நடவடிக்கை
கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 ஹிந்து யாத்ரிகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அவர்களி்ல் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
ரயில் எரிப்பு சம்பவத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று புகார் கூறப்படட நிலையில், குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மூன்று நாட்கள் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
ரயில் எரிப்பு சம்பவத்துக்கு, சதித்திட்டம்தான் காரணம் என குஜராத் அரசால் நியமிக்கப்பட் விசாரணைக் கமிஷன் கடந்த 2008-ம் ஆண்டு அறிக்கை அளித்தது. ஆனால், 2005-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையில், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், இனக்கலவரத்தை தடுத்து நிறுத்த மாநில அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில், கலவரத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர் நரேந்திர மோடி பலமுறை மறுத்திருக்கிறார்.
குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.







