You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் மழை: நிரம்பி வழியும் நதிகள், சாலை எங்கும் மழைநீர் - இதுவரை 7 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த சில தினங்களுக்கு கடும் மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 9 ஆயிரம் பேர் இதுவரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில், ஆறுகள் நிரம்பி வழிவதையும், சாலைகளில் பெரும் நீர் சூழந்துள்ளதையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.
பல்வேறு அணைகளும் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான மழை பெய்து வருகிறது. இதில் சில பகுதிகளில் இந்த மாதம் வரை போதுமான மழை பொழியாமல் இருந்தது என சுற்றுச் சூழல் சார்ந்து பணியாற்றும் 'டவுன் டு யெர்த்' என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முக்கிய நதிகள் பெரும் பகுதியான சமதளத்தில் பாய்வதால் பல பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளது என அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
"ஆற்றுப் படுகையின் கீழ் உள்ள இந்த சமதளங்களில் அதிக வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் பல்வேறு பகுதிகள் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவிலும் கடும் மழை
மகாராஷ்டிரா மாநிலத்திலும் பல இடங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மும்பையில் அடுத்த மூன்று நாட்களுக்கும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மும்பை நகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்