சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் - மீட்க 100 மணி நேர போராட்டம்

காணொளிக் குறிப்பு, சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் - 104 மணிநேர முயற்சியில் உயிருடன் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்றுக்குள் விழுந்த 11 வயது சிறுவன் சுமார் 104 மணிநேர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐஞ்சீர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் பிரித் எனும் கிராமத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயன்படுத்தப்படாமல் இருக்கும் 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார்..

சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட இந்த சிறுவனை மீட்பதற்கான நடவடிக்கைகள் சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தெரியவந்த வெள்ளிக்கிழமை மாலையே தொடங்கப்பட்டது.

ராகுல் சாகுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் ஒன்றின் மூலம் ஆக்சிஜனும் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்பு படை இந்திய ராணுவம் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் வெள்ளிக்கிழமை மாலை முதல் இந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பின்னிரவில் சிறுவன் ராகுல் சாகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனை விரைவாக மருத்துவமனை கொண்டு செல்வதற்காக சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு green corridor ஒன்று அமைக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாதவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் விரைவாக செல்வதற்கு, மக்கள் மற்றும் வாகனங்கள் நடமாடாத வகையில் சாலையில் மேற்கொள்ளப்படும் தற்காலிக ஏற்பாடு green corridor என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவன் சிகிச்சை பெறுவதற்காக மாற்றப்பட்டுள்ளதாக அந்த ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

சிறுவனின் உடல்நிலை நன்றாக இருக்கிறது; அவர் விரைவில் குணமடைவார் என்று ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா கூறியுள்ளார் .

அனைவரின் பிரார்த்தனைகளுடனும் மீட்புக் குழுவினரின் இடைவிடாத மற்றும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியுடனும் ராகுல் சாகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் குணம் அடைய நான் வாழ்த்துகிறேன் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: