You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலின் துபாய் போனது தமிழகத்துக்கு முதலீடு ஈர்க்கவா? குடும்பத்துக்கு தொழில் தொடங்கவா? எடப்பாடி கேள்வி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றது தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்கவா? குடும்பத்துக்கு தொழில் தொடங்கவா என்று கேள்வி கேட்டுள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 37 ஒன்றியங்கள் மற்றும் 33 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளுக்காக ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது,
"முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரங்கினை சர்வதேச கண்காட்சியில் தொடங்கி வைக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் அவர் சென்றதாக கூறப்பட்டது. முதலமைச்சருடன் துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றது சரி. ஆனால், முதலமைச்சரின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாகத்தான் பொதுமக்கள் பார்க்கின்றனர். துபாய் சென்றது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா, குடும்பத்திற்கு புதிய தொழிலை தொடங்கவா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர். குடும்பமே துபாய் பயணம் சென்றது தனிப்பட்ட காரணத்திற்காகத்தான் என மக்கள் பேசிக் கொள்கின்றனர்," என்று குறிப்பிட்டார் எடப்பாடி.
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் அரங்கு தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை ஒரு சாக்காக வைத்து துபாய் சென்றுள்ளார் முதல்வர். நான் வெளிநாடு சென்றபோது பயணிகள் விமானத்தில்தான் சென்றேன். துறை அமைச்சர்களும், செயலாளர்கள் மட்டுமே உடன் வந்தனர். லண்டனுக்கு சென்றபோது, நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம். அதிநவீன மருத்துவ கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் பார்வையிட்டோம். கிங்ஸ் மருத்துவமனையைப் போல தமிழ்நாட்டின் மருத்துவமனைகளை மாற்றுவதற்காக ஆலோசனை நடைபெற்றது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் செயலாளர் மட்டுமே இருந்தனர், என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் என்ன செய்தோம்...
அப்போது அமைச்சர்களுடன் சுற்றலா சென்றதாக அவதூறு கூறிய ஸ்டாலின் இப்போது குடும்பத்துடன் சென்றுள்ளார். ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வர வேண்டியே நாங்கள் சென்றோம். இதனடிப்படையில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசலில் கொண்டு வரப்பட்டது. வெளிநாடு பயணத்திற்கு பிறகு மின்சார வாகன கொள்கை உருவாக்கப்பட்டது. மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டினை தொடங்கின. பல வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிய தொழில்கள் கொண்டு வரப்பட்டன. நான் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்டிக்கர் ஒட்டுவதே அவரின் வேலை.
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமைக் கழகமும் இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது என்றார்.
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான். எட்டு வழிச்சாலையை எக்ஸ்பிரஸ் வே என பெயர் மாற்றி கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது. அத்திட்டம் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்