You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு தடை: சட்டத்துக்காக மக்களா, மக்களுக்காக சட்டமா? சீமான் கேள்வி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டான , ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை இன்னும் நீக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.
கடலூர் அருகே திருமாணிக்குழி என்ற இடத்தில் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த விளையாட்டை நடத்தினார்கள்.
தடையை மீறி இந்த விளையாட்டை நடத்தக் காரணம் என்ன என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் கேட்டபோது ``சட்டம் என்பது மக்களுக்காகவா, அல்லது மக்கள் சட்டத்துக்காகவா`` என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய வரலாறு தெரியாமல் உச்சநீதிமன்றத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சீமான் குறிப்பிட்டார்.
மக்கள் மது விற்பனையைத் தடை செய்ய விரும்புகிறார்கள், அதைச் செய்யாமல் , மக்கள் விரும்பும் ஜல்லிக்கட்டை தடை செய்வது தவறு என்றும் அவர் வாதிட்டார்.
யானை ஓட்டப்பந்தயம் கேரளாவில் நடக்கிறது, ராணுவத்தில் ஒட்டகப்பிரிவு, குதிரைப்பிரிவு போன்ற பிரிவுகள் வைத்து, கனரக ஆயுதங்களை அந்த விலங்குகளின் முதுகில் ஏற்றி போர் செய்வதை விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி கேட்பதில்லை, நீதிமன்றமும் அதில் தலையிடுவதில்லை, தமிழர்கள் விரும்பும் காளையை விரட்டிப் பிடிக்கும் போட்டி மீது மட்டும் குறி வைக்கிறார்கள் என்றார் சீமான்.
இந்த வாதங்களை எல்லாம் கேட்டபின்னர்தானே உச்சநீதிமன்றம் தடையை விதித்தது, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டபின் அதை மீறலாமா என்று கேட்டதற்கு, கடவுளே இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் , எனவே நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதில் தவறில்லை என்றார். கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்கள் நதி நீர்ப்பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காததை அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்