கம்யூனிஸம், கத்தோலிக்கம், கருக்கலைப்பு - போலந்தில் முற்றும் மோதல்
போலந்தில் கருக்கலைப்புக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுவருகிறார்கள்.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திலேயே கடுமையான கருச்சிதைவு சட்டங்கள் போலந்தில் இருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே போலந்தில் தான் கருக்கலைப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. சில சமயங்களில் மட்டும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.
இந்த சட்டங்களை மேலும் கடுமையாக்க இதற்கு முன்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கம் மரபுரீதியான கத்தோலிக்க மதிப்பீடுகளை ஊக்குவிக்கிறது என்பதால் கருக்கலைப்பு எதிர்ப்புக் குழுக்கள் நம்பிக்கையோடு இருக்கின்றன.
மேலும் தற்போதைய அரசாங்கத்தில் கருக்கலைப்புத் தடைக்கு ஒருவகையான ஆதரவு இருக்கிறது. குறைந்தபட்சம் கருத்தடைச்சட்டம் மேலும் கடுமையாகும் என செயற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.
இவர்களின் இதே கருத்தை கத்தோலிக்க தேவாலயங்களும் கொண்டிருப்பதோடு பரவலாக பிரச்சாரமும் செய்கின்றன. போலந்தில் மத நிறுவனங்களுக்கு பெரும் செல்வாக்கிருக்கிறது.
தற்போதைய முன்னெடுப்புக்கு கத்தோலிக்க தேவாலயம் ஆதரவளித்தாலும் இது போலந்து சமூகத்தில் ஆழமான பிளவுகளைத் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாதப்பிரதிவாதங்களின் பின்னணியில் இருப்பது மதக்காரணிகள் மட்டுமல்ல. போலந்தின் சமீபகால வரலாறும் தான். இங்கே கம்யூனிசத்தின் பிரதான எதிர்தரப்பாக கத்தோலிக்க தேவாலயங்கள் செயற்படுகின்றன.
போலந்தின் கருக்கலைப்புச் சட்டங்களை முன்பு கம்யூனிஸ்ட்கள் தளர்த்தினார்கள். ஆனால் போலந்தின் அரசியலில் கம்யூனிஸம் நிராகரிக்கப்படும்போது அத்தோடு சேர்த்து நிராகரிக்கப்படும் பலவற்றில் இந்த கருக்கலைப்புத் தடையும் அடங்கும் என்பதாகவே அரசியல் விமர்சகர்கள் இதை வர்ணிக்கிறார்கள்.
கருக்கலைப்பு குறித்து இருபதாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போதைய போலந்தின் பார்வை இறுகியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஆனால் கருக்கலைப்பையே முழுமையாக தடை செய்யும் முன்னெடுப்பு போலந்த் சமூகத்தை பிளவுபடுத்தியிருப்பது மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்துடன் போலந்தை முரண்படவும் செய்திருக்கிறது.