நெல்சன் மண்டேலா வாழ்க்கை- படங்களில்

தென்னாப்பிரிக்க தந்தை என்றழைக்கப்படும் காலஞ்சென்ற நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் பற்றிய படங்கள்

நெல்சன் மண்டேலா-- அவரது சட்ட அலுவலகத்தில்
படக்குறிப்பு, சிறுபான்மை வெள்ளையினத்தினரின் ஆட்சிக்கு எதிராக நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின்னர் , தென் ஆப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, இறந்துவிட்டார்.
மண்டேலா
படக்குறிப்பு, கிழக்கு கேப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியினத் தலைவரின் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, வீட்டை விட்டு ஜோஹனெஸ்பர்க் நகருக்கு ஓடி, அங்கு வழக்கறிஞராகி, நிறவெறிக்கொள்கைக்கு எதிராக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டத்தில் சேர்ந்தார்.
குத்துச் சண்டை போடும் மண்டேலா
படக்குறிப்பு, இளம்பருவத்தில், நெல்சன் மண்டேலாவுக்கு குத்துச் சண்டையில் ஆர்வமிருந்தது. " குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துசண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை", என்று அவர் தனது சுய சரிதையான " சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடைபயணம்" ( லாங் வாக் டு ப்ரீடம்) என்ற புத்தகத்தில் எழுதினார்.
1956 தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மண்டேலா
படக்குறிப்பு, 1956ல், அவர் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் ஈடுபட்டதால், தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, அவர் , வின்னி மடிக்கிஸெலா என்ற சமூக சேவகியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது முதல் மனைவி, ஈவ்லின் மேஸை விவாகரத்து செய்தார்.
திருமண நாளன்று மண்டேலாவும் வின்னியும்
படக்குறிப்பு, வின்னியும் அவரும் 1958ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் மாறி மாறி சிறைவாசத்தில் இருந்ததால் அவர்களால் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை பெரிதாக அனுபவிக்க முடியவில்லை.
தென் ஆப்ரிக்காவின் ராப்பென் தீவு சிறை
படக்குறிப்பு, இரண்டாவது தேசத்துரோக விசாரணைக்குப் பின்னர், நெல்சன் மண்டேலா நாசவேலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 1964ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இசை ரசிகர்கள் , நிறவெறிக்கொள்கைக்கெதிராக கைகளை உயர்த்துகின்றனர்
படக்குறிப்பு, நிறவெறிக்கொள்கைக்கு எதிராக சர்வதேச பிரச்சார இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. கடுமையான பொருளாதாரத் தடைகள் எதுவும்விதிக்கப்படவில்லை என்றாலும், பிரபலமானவர்களும், சாதாரண மக்களும், உலகெங்கிலிருந்தும் அழுத்தத்தைத் தொடர்ந்து செலுத்தி வந்தனர்.
ஆங்கில நகைச்சுவை நடிகர் லென்னி ஹென்றி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்.
படக்குறிப்பு, உலகளாவிய ஒரு பிரச்சார இயக்கத்தின் முகமாக நெல்சன் மண்டேலா மாறினார்.
மண்டேலாவும், அவரது மனைவி வின்னி மண்டேலாவும் , கைகோர்த்தபடி நடந்து வரும் காட்சி
படக்குறிப்பு, 1990ல் , சுமார் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், ஒரு வழியாக , நெல்சன் மண்டேலா விடுதலையானார்.
விடுதலை ஆன பின்னர் லண்டனில் மண்டேலா ( பிபிசி)
படக்குறிப்பு, விடுதலை ஆன பிறகு, மண்டேலா பல நாடுகளுக்குச் சென்று, உலகத் தலைவர்கள் பலரை சந்தித்தார். நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடவும் தயாரானார். லண்டனில் நிறவெறிக்கொளைக்கெதிராக பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்த தென் ஆப்ரிக்கா இல்லத்தில் அவர் நிற்கும் காட்சி
மண்டேலாவும் டி க்ளார்க்கும்
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கர்கள் அனைவருக்கும் , ஒரு நபர் ஒரு வாக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் , நாட்டில் தேர்தல்களை நடத்துவது என்று, தென் ஆப்ரிக்க அதிபர் எப்.டபுள்யூ, டி க்ளார்க் உடன்படுவதற்கு முன்னர், கடுமையான பேச்சுவார்த்தைகள் நடந்தன. டி க்ளார்க்குக்கும், மண்டேலாவுக்கும் , அவர்கள் நிறவெறிக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆற்றிய பங்குக்காக, 1993ல் நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.
வாக்களிக்க நின்ற கறுப்பின மக்கள்
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக பூர்வமான தேர்தல்கள் 1994 ஏப்ரல் 27ல் நடந்தன. கறுப்பின தென் ஆப்ரிக்கர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் நின்றார்கள். ஏ.என்.சி கட்சி பெரும் வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின அதிபரானார்.
புதிய அதிபர் இம்பெக்கியுடன் மண்டேலா
படக்குறிப்பு, மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக பதவிக்கு வந்தார் தாபோ இம்பெக்கி
" இது எப்படி இருக்கு? " -- மண்டேலா
படக்குறிப்பு, உலகின் மிகவும் விரும்பப்பட்ட தலைவராக மட்டுமல்லாமல், அவர் ஒரு நாகரீக உடைகள் அணிவதிலும் நாட்டமுடையவராக அறியப்பட்டார். அவர் அணிந்து கொண்ட பளிச்சென்று தெரியும் நிறத்திலான சட்டைகள் பிரசித்தம். இந்தப் படத்தில் பிரசித்தி பெற்ற நாகரீக உடுப்புகளை உருவாக்கும் டிசைனர் , பியர் கார்டினுடன் மதிய உணவருந்திய பின்னர், தான் போட்டிருந்த சட்டையைக் காட்டி " இது எப்படி இருக்கு? " என்ற பாணியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் மண்டேலா !
இளவரசர் சார்லஸ் மற்றும் ஸ்பைஸ் கேர்ல்ஸ் இசைக்குழுவின் பாடகிகளுடன் மண்டே.லா
படக்குறிப்பு, மற்ற தலைவர்களிடம் இல்லாத இரு குணங்கள் அவரிடம் இருந்தன. பணிவு மற்றும் தன்னைத் தானே பார்த்து தன்னிடம் இருக்கும் குறைகளைப் பற்றி கிண்டலடித்துக்கொள்வது. இந்தப் படத்தி.ல் இளவரசர் சார்லஸ் மற்றும் ஸ்பைஸ் கேர்ல்ஸ் இசைக்குழுவின் பாடகிகளுடன் மண்டே.லா
தனது புதிய மனைவி, க்ராசா மஷேச்லுடன் நெல்சன் மண்டேலா
படக்குறிப்பு, வின்னியுடன் மிகவும் காரசாரமான சச்சரவுடன் கூடிய விவாகரத்துக்குப் பின்னர், மண்டேலா, தனது 80வது பிறந்த நாளில், மொசாம்பிக் நாட்டின் முன்னாள் தலைவர் சமோரா மஷேலின் விதவையான, க்ராசா மஷேலை மணந்தார். இருவரும் சேர்ந்து வறுமையில் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்கக் குழந்தைகளுக்கு நிதி ஒன்றை நிறுவ உதவினர்.
பாரிஸில் 2003ம் ஆண்டு ஜூலை 14ல் உரையாற்றும் மண்டேலா
படக்குறிப்பு, 1999ல் அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பின்னர், தென் ஆப்ரிக்காவின் மிகப் பிரபல்யமான தூதரானார் நெல்சன் மண்டேலா. எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2010ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்ரிக்கா நடத்தும் உரிமையையையும் அவர் பெற்றுத்தந்தார்.
2004ல் பிரிட்டன் வந்த நெல்சன் மண்டேலா
படக்குறிப்பு, 2004ம் ஆண்டும் தனது 85வது வயதில், மண்டேலா பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கவும், அமைதியாக சிந்திக்கவும் இந்த ஓய்வு அவருக்கு தேவைப்பட்டது.
க்ரசா மஷேலுடன் நெல்சன் மண்டேலா
படக்குறிப்பு, 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளின் நிறைவு விழாக் கொண்டாட்டங்களின்போது அபூர்வமாகத் தோன்றினார் மண்டேலா. அப்போதே அவருக்கு உடல் நிலை பலவீனமாகத்தான் இருந்தது. மேலும் போட்டியின் தொடக்கத்தின் போது அவரது கொள்ளுப்பேத்தி இறந்த துக்கத்திலும் அவர் மூழ்கியிருந்தார்.
94வது பிறந்த நாளின்போது நெல்சன் மண்டேலா
படக்குறிப்பு, 2012ல் நெல்சன் மண்டேலா தனது 94வது பிறந்த நாளைக்கொண்டாடினார். 2009ல்தான், ஐ.நா மன்றம், அவரது பிறந்த நாளை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஜூலை 18ம் தேதியும், உலக மக்கள் அனைவரும், மண்டேலா அரசியல் வாழ்க்கையில் கழித்த 67 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம், 67 நிமிடங்கள் சமூக சேவைக்காக ஒதுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்சன் மண்டேலாவுக்காகப் பிரார்த்தனைகளில் தென் ஆப்ரிக்கர்கள்
படக்குறிப்பு, சொவெட்டோ நகரில் இருக்கும் ரெஜினா முண்டி கத்தோலிக்க தேவாலயம் நிறவெறிக்கொள்கைக்கெதிரான போராட்டத்தில் ஒரு மையமான கூடுமிடமாக இருந்தது. 2012 டிசம்பரிலிருந்து மூன்றாவது முறையாக நெல்சன் மண்டேலா மருத்துவமனையில், சுவாசப்பை பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டதை அடுத்து, இந்த தேவாலயத்தில் அவருக்காகப் பிரார்த்தனைகள் நடந்தன.
மண்டேலாவின் சிலை ( கெட்டி இமேஜெஸ்)
படக்குறிப்பு, 2013 ஏப்ரலில் குளிர்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மண்டேலா மிகவும் பலவீனமாகவும், குழப்பமுற்ற நிலையிலும் காணப்பட்டதை இந்த வீடியோ காட்சி காட்டியது, சர்ச்சையை தூண்டியது. அவர் மீண்டும் ஜூன் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.