
ஆளில்லா விமானத் தாக்குதலில் அழிந்த ஒரு வீடு
பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் ஆயுததாரிகளை இலக்குவைத்து அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்துகிற குண்டுவீச்சில் அமபொதுமக்கள் கொல்லப்பட்டாலும் அதனை அமெரிக்க அரசு மிக அரிதாகவே ஒப்புக்கொள்கிறது என ஆளில்லா விமானங்கள் மூலம் செய்யப்படும் குண்டுத்தாக்குதல் பற்றி செய்யப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு கணிசமான தடயங்கள் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்க அரசு அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.
அடித்த இடத்தையே திரும்ப அடிக்கும் உத்தி
தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு இடம் மீண்டும் தாக்கப்படும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும்கூட கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கிறார்கள் என ஸ்டான்ஃபர்ட் மற்றும் நியுயார்க் பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தாக்கிய ஒரு இடத்தையே மீண்டும் தாக்கும் உத்தி தொடர்ந்து கையாளப்படுவதால், தாக்குதல் நடந்த ஒரு இடத்துக்கு மருத்துவ உதவிகள் வந்துசேருவதென்பது தாமதப்பட்டுள்ளது என அது தெரிவிக்கிறது.

அமெரிக்கா பயன்படுத்திவரும் ஆளில்லா குண்டுவீச்சு விமானம் ஒன்று
ஆளில்லா விமான குண்டுவீச்சில் இலக்கு வைக்கப்படுபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் கீழ்மட்ட ஆயுததாரிகள்தான் என்றும், இவர்கள் கட்டளையிடும் இடத்தில் உள்ள உயர்மட்ட ஆட்கள் அல்ல என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் ஆயுததாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைககால் பொதுவாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாகவும், பாதிப்பு மிக்கதாகவும் இருந்துவருகிறது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத் தாக்கம்
பாகிஸ்தான பழங்குடியினப் பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது.
பொதுமக்கள் கொல்லப்பட்டதும் காயம்பட்டதும் இப்பகுதியில் பாரிய பொருளாதாரப் பாதிப்புகளையும் மோசமான உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக இது கூறுகிறது.
தாக்குதல் நடக்கும் என்று அஞ்சியே ஒரு இடத்தில் கூடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதையும் நிறுத்தி விடுகின்றனர்.
ஆழ் மனதில் எந்நேரமும் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருப்பதால் மன அழுத்தம் சம்பந்தப்பட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்துக்கு தூக்கமின்மை, சுவாசப் பிரச்சினை, செரிமானப் பிரச்சினை போன்றவை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கதவை சற்று அடித்து சாத்தினாலே பிள்ளைகள் பீதியில் அலறும் நிலை கண்டு திகைத்துபோனதாக பத்திரிகையாளர் ஒருவர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







