
மதநிந்தனை குற்றச்சாட்டில் கைதான சிறுமி
பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மூன்று வாரங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ சிறுமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமான மதநிந்தனையில் ஈடுபட்டார் என்கிற குற்றச்சாட்டில் ரிம்ஷா என்ற பெண் கைதுசெய்யப்பட்டமை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை எரித்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்திய ஒரு கும்பல் அவரை தண்டிக்கவேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ள நேரும் நபருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் மத தீவிரவாத குழுக்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் மிகத் தீவிரமானவை என்பதால் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் முக்கிய கவனத்தை பிடித்தன.
ரிம்ஷாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிஉயர் பாதுகாப்புள்ள சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
பொய்க் குற்றச்சாட்டு?
அதேசமயம், இவர் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் தவறாக புனையப்பட்டவை என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களும் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.
இவர் மனநல வளர்ச்சிக்குன்றியவர் என்று தெரிவித்த இந்த செயற்பாட்டாளர்கள், இவர் குர்ஆனை எரிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
குறித்த பெண்ணின் பையில் எரிக்கப்பட்ட குர்ஆன் பக்கங்களை திணித்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீதான வழக்கை தொடுத்த இமாம் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
ரிஷ்மாவுக்கு எதிரான வழக்கை வலுப்படுத்தும் நோக்கத்தில் எரிக்கப்பட்ட குர்ஆனின் பக்கங்களை ரிஷ்மாவின் பையில் இந்த இமாம் யாருக்கும் தெரியாமல் திணித்ததை தாங்கள் பார்த்ததாக சிலர் சாட்சியமளித்திருக்கிறார்கள்.

மதநிந்தனை சட்டத்தை மாற்றுமாறு போராட்டம்
இந்த பின்னணியில் ரிஷ்மாவுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பிணையில் நீதிபதி மொஹம்மட் ஆசாம் கான் இன்று ஜாமீன் வழங்கினார்.
மத நிந்தனை குற்றச்சாட்டுக்களை சந்திக்கும் ஒருவருக்கு பாதிஸ்தானின் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது இதுவே முதல்முறை என்று பாகிஸ்தானில் இருக்கும் பிபிசி செய்தியாளர் இலியாஸ் கான் சுட்டிக்காட்டுகிறார்.
மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு பாகிஸ்தானில் ஜாமீன் கிடையாது. ஆனால், அந்தப் பெண் 14 வயது சிறுமி என்று அவரது வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழுவும் அவர் 14 வயது சிறுமி என்றும் அவருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
கடந்த காலங்களில் மத நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனை குற்ற சட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்த அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டிருகிறார்கள்.
ரிம்ஷாவுக்கு ஜாமீன் கிடைத்திருந்தாலும் அவர் இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். பாகிஸ்தானின் மத நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமிருக்கிறது.
ரிம்ஷா மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டவுடன் அவர் வசித்த பகுதியில் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இன்றுவரை அவர்களின் இருப்பிடம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ரிஷ்மாவுக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் பின்னணியில் சிறைக்கு வெளியே அவரது பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளன.







