You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாலியல் வன்கொடுமை செய்தால் பிறப்புறுப்பு வெட்டப்படும்'
சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால், அவர்களை பாலியல் வல்லுறவு செய்தால் பிறப்புறுப்பு வெட்டப்படும்.
எங்கு இது என்று கேட்கிறீர்களா?
பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தி டெலிகிராஃப் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இது தொடர்பாக பெண்கள் உரிமைகள் குழு நடத்தியை போராட்டத்தை தொடர்ந்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிலர் இந்த சட்டத்தை புகழ்ந்தாலும், விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.
ஆணாதிக்க கலாசாரம் என்ற வேறூன்றிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், குழந்தை திருமணங்கள் போன்ற பெண்களுக்கு எதிரான விஷயங்களை நீக்காமல் இதுபோன்ற சட்டங்களால் பயனில்லை என் பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டாளர் இவான் பென்சான் இடஹோசா தெரிவிக்கிறார்.
இந்த தண்டனை மிகவும் கடுமையானது என்றும் இதனால் பாலியல் குற்றவாளிகள் குறைய மாட்டார்கள் என்றும் சில மனித உரிமை குழுக்கள் குரல் எழுப்பியுள்ளன.
ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே அங்கு சுமார் 800 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக நைஜீரிய போலீசார் தெரிவிக்கின்றனர்.
நைஜீரியாவில் நான்கில் ஒரு பெண் குழந்தை 18 வயதிற்குள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு கூறுகிறது.
பாலியல் வல்லுறவு வழக்குகளில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைப்பது கடினம் என்பதால் அந்நாட்டின் பெண்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை குறைவு மற்றும் மனத்தடை காரணமாக பலரும் நடந்தவற்றை துணிவுடன் வெளியே சொல்வதில்லை.
2019ஆம் ஆண்டில் இருந்து 409 பாலியல் வல்லுறவு வழக்குகளில் வெறும் 34 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் பெண்கள் குறித்த தரவுகளை வெளியிடும் அமைப்பு கூறுகிறது.
உள்ளூர் தேவாலயம் ஒன்றில் 22 வயது மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டது.
கொரோனா ஊரடங்கின்போது பதிவான பல மோசமான சம்பவங்களில் இதுஒன்றுதான்.
இதனை தொடர்ந்தே, பாலியல் குற்றங்கள் தொடர்பாக அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று 11,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று நைஜீரிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் அந்நாட்டின் 36 மாகாண ஆளுநர்களும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான அவரச நிலை சட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால், கடூனா மாகாணம் அதையும்விட ஒரு படி தாண்டி கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.
நைஜீரிய நாட்டு சட்டப்படி பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதை தவிர்த்து தனியே தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளது.
கடூனாவின் புதிய சட்டப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்யும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறப்புறுப்பு வெட்டப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். பெண் குற்றவாளிகளுக்கு கருப்பை அகற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்.
14 வயதுக்கு மேற்பட்டவர்களை பாலியல் வல்லுறவு செய்யும் நபர்களுக்கு இதே தண்டனை விதிக்கப்படும். ஆனால் மரண தண்டனை மட்டும் கிடையாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: