தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக

பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு.

தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனும் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2016-2017ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு, 20,000 ரூபாய்க்கு அதிகமாக வழங்கியவர்களில் 1194 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 532.27 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 20,000 ரூபாய்க்கு அதிகமாக வழங்கியவர்களில் 599 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 41.90 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. பிற தேசிய கட்சிகளைவிட பாஜக ஒன்பது மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றுள்ளது.

குழந்தைகள் சந்திக்கும் இன்னல்கள் - கவலை தரும் அறிக்கை

'சேவ் த சில்ரன்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமை, மோதல்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி நிறுவனம் வெளியிட்டுள்ள குழந்தை பருவத்தின் முடிவு என்ற குறியீட்டில் 12 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்கூறிய அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் கடந்த ஆண்டைவிட நிலைமை மேம்பட்டு இருந்தாலும், இன்னல்களை சந்திக்கும் குழந்தைகளின் நிலைமைகளில் எதிர்பார்க்கும் அளவு முன்னேற்றம் இல்லையென அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞரை காப்பாற்றிய போலீசுக்கு கொலை மிரட்டல்

இந்து கும்பல் ஒன்றிடமிருந்து இஸ்லாமியர் ஒருவரை உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்னும் காவல்துறை அதிகாரி காப்பாற்றிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக கடந்த வாரம் பரவியது.

அந்த போலீஸ் அதிகாரி கதாநாயகனாக போற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்

தேசிய வங்கிகளின் ஊழியர்களின் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளில் நுழைகிறது.

வராக்கடன் உள்ளிட்ட காரணங்களால் உண்டான நிதிப் பற்றாக்குறையால் அவர்களுக்கு வங்கிகள் வெறும் 2% மட்டுமே ஊதிய உயர்வு அளித்துள்ளதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ரஜினியிடம் 'யார் நீங்க' என்று கேட்ட இளைஞர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று (புதன்கிழமை) நேரில் சென்றிருந்தார்.

அதில் சந்தோஷ் என்ற இளைஞரிடம் ரஜினி உடல்நலம் குறித்து விசாரிக்க ஆரம்பிக்க, அவர் ரஜினியைப் பார்த்து, "யார் நீங்க?" என்று கேட்டார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்று கூறியது சமூக வலைத்தளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

காயமடைந்த முகமது சாலா உலக கோப்பையில் விளையாடுவாரா?

காயமடைந்த லிவர்பூல் கால்பந்தாட்ட கிளப்பின் முன்னணி கால்பந்து வீரரான முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்) வரவிருக்கும் சர்வதேசக் கால்பந்து உலக கோப்பையில் (ஃபிஃபா) பிந்தைய கட்டங்களில் விளையாடுவார் என்று அவரது நாடான எகிப்து நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த போட்டி ஒன்றில் தனது தோள்பட்டையில் முகமது சாலா காயமடைந்ததால், அவர் உலக கோப்பையில் விளையாட முடியாது என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எகிப்து அணி ஜூன் 15-ஆம் தேதி உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது.