காணொளி: விவசாயி வடிவமைத்த தானியங்கி டிராக்டர் - ஓட்டுநரே இல்லாமல் இயங்குவது எப்படி?

காணொளி: விவசாயி வடிவமைத்த தானியங்கி டிராக்டர் - ஓட்டுநரே இல்லாமல் இயங்குவது எப்படி?

ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் இந்த டிராக்டரை குஜராத் மாநிலம், ராஜ்கோட்டை சேர்ந்த விவசாயி ஜக்தீஷ் திலாலா என்பவர் வடிவமைத்துள்ளார். இவர் 10ம் வகுப்பு வரையே படித்திருக்கிறார். தொழில்நுட்பம் குறித்த அனுபவ அறிவைக் கொண்டே ஜக்தீஷ் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வகையில் இந்த டிராக்டரை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் விவசாயம் சார்ந்த பல வேலைகளை செய்யும் என்கிறார் ஜக்தீஷ்.

விவசாயி ஜக்தீஷ் திலாலா கூறுகையில், "தானியங்கி ஜிபிஎஸ் வசதி இந்த டிராக்டரில் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ்ஸில் புரோகிராமை நிறுவி, டிராக்டரில் பொறுத்தப்பட்டுள்ள டிஸ்பிளேயில் தேவையான செட்டிங்ஸை செய்ய வேண்டும். புரோகிராமை நிறுவியவுடன் இந்த டிராக்டர் நிலத்தில் தானாக இயங்கும். இதற்கு பே ஸ்டேஷன் (Bay Station) எனும் சாதனம் தேவை. பே ஸ்டேஷன் உதவியுடன் டிராக்டரை ஜிபிஎஸ் சாதனத்துடன் நேரடியாக இணைக்க முடியும். உழவு செய்ய வேண்டிய நிலம் எது என்பதை ஜிபிஎஸ் சாதனத்தில் குறிக்க வேண்டும். அதன்பின், டிராக்டரை நிலத்தில் நிறுத்தினால் அது தானாகவே இயங்கும். டிராக்டரில் தானாக இயங்கும் யு-டர்ன் மற்றும் ஸ்மார்ட் யு-டர்ன் வசதிகள் உள்ளன, ஏனெனில் இந்திய டிராக்டர்களில் ஆட்டோமேட்டிக் கியர் வசதி இல்லை என்பதால் யு-டர்ன்களில் அதை நாமே இயக்க வேண்டியிருக்கும்." என தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் சமீப நாட்களாக வழக்கமான ஒன்றாகி வருகின்றன.

தொகுப்பு: ரிபுல் மக்வானா

வீடியோ: பிபின் தங்காரியா

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு