அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி

காணொளிக் குறிப்பு, அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் டெல்லி தம்பதி
அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி

பீட்டர் சிங் மற்றும் நீனோ கெளர் டெல்லியில் வசிக்கின்றனர். அவர்கள் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தங்கள் வீட்டில் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக மீன்களை வளர்க்கின்றனர். பிறகு மீன்களின் கழிவுகள் மூலமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கின்றனர்.

இது குறித்து விளக்கிய பீட்டர் சிங், "மீன்களை தொட்டியில் வைத்திருக்கிறோம். மீன்களுக்கு அதில் உணவளிக்கிறோம். தொட்டியில் ஒரு பம்ப் உள்ளது. அது தண்ணீரை வட்டமாக சுற்றவைக்கும். மீன்கள் உணவை சாப்பிட்டபிறகு வெளியேற்றும் கழிவுகள் தொட்டியின் மையத்தில் சேரும்.

அங்கு செங்குத்தாக ஒரு பைப் வைக்கப்பட்டிருக்கும். அந்த பைப் மற்றொரு பைப்புடன் நேர்கோட்டில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தண்ணீர் வெளியேறும்." என்றார்.

இந்த நுட்பம் என்னவென்றால் இதில் தொட்டியில் மீன்கள் வளர்க்கப்படும். இந்த தண்ணீர் மூலமாக மண் இல்லாமல் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் வேகமாக வளர்க்கப்படுகிறது.

"மீன்களின் கழிவுகளில் முக்கியமாக அமோனியா இருக்கும். இது ஒரு பயோ ஃபில்டருக்கு அனுப்பப்படும். அங்கு நேச்சுரல் பேக்டீரியா இருக்கும். ஏரியேஷன் இருக்கும். இது அமோனியாவை நைட்ரேட் மற்றும் நைட்ரைட்டாக மாற்றும். இந்த சத்து நிரம்பிய தண்ணீர் பம்ப் மூலமாக செடிகளிடம் கொண்டுசெல்லப்படுகிறது.

அங்கு மண் இல்லாமல் அதாவது ஹைட்ரோஃபோனிகலாக செடி வளர்க்கப்படுகிறது. செடிவைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்கு கீழே தண்ணீர் பாயும். செடிகள் இதில் இருக்கும் சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. இது செடிகளுக்கு உரம் போல செயல்படுகிறது." என்கிறார் பீட்டர் சிங்.

பீட்டர் மற்றும் நீனோ மீன்களின் கழிவுகள் மூலமாக வெர்டிக்கல் ஃபார்மிங் முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த தொழில்நுட்பம் மூலமாக குறைவான இடத்தில் அதிக செடிகளை வளர்க்க முடியும். இதில் சுமார் ஆயிரம் லிட்டர் தண்ணீர் மூலமாக பதினைந்தாயிரம் செடிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும்.

அக்வாபோனிக்ஸ் அதிக செலவு பிடிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இதை அமைக்க ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் செலவாகும். ஆயினும் இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனை மூலமாக இரண்டு ஆண்டுகளுக்காக முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்று பீட்டர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு