ராமநாதபுரம்: வலையில் சிக்கிய 3 டால்பின்களை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்
மீனவர் வலையில் சிக்கிய மூன்று அரிய வகை டால்பின்களை பத்திரமாக மீட்டு உயிருடன் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருவதுடன் வனத்துறை சார்பில் மீனவருக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான சித்தாமை, பெருந்தலை ஆமை, டால்பின், திமிங்கலம், கடல் பசு உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறு கடல் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அழிவின் விழும்பில் உள்ளதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடினால் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான சித்தாமை, பெருந்தலை ஆமை கடல் பசு, டால்பின் உள்ளிட்டவற்றை பத்திரமாக மீண்டும் கடலில் விடும் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை மதியம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கடற்கரை பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் சுமார் 600 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று சிக்கியது.
இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து பின் வலையில் இருந்து பத்திரமாக டால்பினை உயிருடன் மீட்டு, மீண்டும் அதனை கடலுக்குள் விட்டனர் மீனவர்கள்.
மேலும் சீலாமீன்பாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் இரண்டு டால்பின்கள் சிக்கியது. இதனை பத்திரமாக மீட்ட மீனவர்கள் மீண்டும் கடலில் உயிருடன் விட்டனர்.
ஒரே நாளில் கடலாடி கடற்கரை பகுதியில் 3 டால்பின் மீன்கள் அடுத்தடுத்து உயிருடன் கடலில் விடப்பட்டதையடுத்து மீனவர் அகமது ஜலால் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மீன்பிடிவலைகளில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் சிக்கினால் மீனவர்கள் தானாக கடலில் விடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த டால்பின் மீன்கள் கரை பகுதிக்கு ஏன் வந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



