You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தேர்தல்: 'தாங்களே வெற்றி' என்று கூறும் இம்ரான், நவாஸ் தரப்புகள் - உண்மை என்ன?
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்களைத் தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
266 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 71 இடங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரியின்(Bilawal Bhutto Zardari) பாகிஸ்தான் மக்கள் கட்சி 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். பிற வேட்பாளர்கள் 35 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
பிப்ரவரி 10ஆம் தேதி மதியம் நிலவரப்படி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கு மத்தியில் இம்ரான் கான் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் இம்ரான் கானின் குரலில் வெளியிடப்பட்ட அந்த ஆடியோவில், “வாக்களித்ததன் மூலம், உண்மையான சுதந்திரத்திற்கு நீங்கள் அடித்தளமிட்டுள்ளீர்கள். எங்களைத் தேர்தலில் வெற்றிபெற வைத்ததற்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் வாக்கு மூலம் ‘லண்டன் திட்டம்’ தோல்வி அடைந்திருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் ஊழல் வழக்கில் தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் இதுவரை பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஒருபக்கம் இம்ரான் கானும் மறுபக்கம் நவாஸ் ஷெரிஃபும் தாங்கள் கட்சிகள் வெற்றி பெற்றதாகக் கூறி பிற கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பை விடுத்துள்ளனர்.
நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சிக்கும் பிற கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தேர்தலில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள், எதிர்பார்க்காத அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ராணுவத்தின் ஆதரவால் நவாஸ் ஷெரீஃப் தனிப்பெரும்பான்மை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிடிஐயின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர்.
தற்போது, பிடிஐ ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 90 இடங்களை வென்றுள்ளனர். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இதுவரை 71 இடங்களை வென்ற நவாஸ் ஷெரீஃப்பின் PML-N அதிகாரப்பூர்வமாக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய நவாஸ் ஷெரிஃப், "மற்றவர்களின் ஆதரவின்றி அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை, பாகிஸ்தானை அதன் பிரச்னைகளில் இருந்து மீட்டெடுக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, கூட்டணியில் சேருமாறு பிற கட்சிகளை நாங்கள் அழைக்கிறோம், சண்டையிடும் மனநிலையில் இருப்பவர்களுடன் நான் சண்டையிட விரும்பவில்லை. அனைத்து விஷயங்களுக்கும் நாம் ஒன்றாக அமர்ந்து தீர்வு காண்போம்,” என்று தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதாகக் கூறி பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனிர் நாட்டு மக்களுக்கு நன்றி கூறியுள்ளார். அராஜகம் மற்றும் பிரிவினை அரசியலில் இருந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நிலையான அரசாங்கம் தேவை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் என்பது வெற்றி தோல்வியைப் பொறுத்த விஷயம் அல்ல என்றும், அது மக்களின் விருப்பத்தைத் தீர்மானிப்பதற்கான செயல் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானின் தேர்தல் முடிவுகள் குறித்து பிற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தேர்தலில் தங்கள் தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளன.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், அனைத்து கட்சிகளும் முறையாகத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேர்தலின்போது கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் விமர்சித்துள்ளார்.தேர்தலின் போது ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது , இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தேர்தல் நியாயமாக நடைபெற்றுள்ளதா என்பது பற்றியும் அமெரிக்கா கேள்விகளை எழுப்பியுள்ளது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)