பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இடிக்கப்பட்ட வீடுகள் - பிபிசி கள ஆய்வு

காணொளிக் குறிப்பு,
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இடிக்கப்பட்ட வீடுகள் - பிபிசி கள ஆய்வு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் வீடுகள் இடிப்பு நடவடிக்கையில் தங்கள் வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்கள் இவை. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளை காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.

இதுவரை குறைந்தது 10 வீடுகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய இரண்டு குடும்பங்களுடன் பிபிசி ஹிந்தி உரையாடியது. இந்தக் குடும்பங்களில் ஒன்று ஆதில் உசேன் டோக்கரின் குடும்பம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அனந்த்நாக் காவல்துறையால் வெளியிடப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் படங்களில் ஆதிலுடையதும் ஒன்று.

ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ராணுவமும் காவல்துறையினரும் தங்கள் வீட்டிற்கு வந்து வீட்டை காலி செய்யும்படி கூறியதாக ஆதிலின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆதில் 2018ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதன் பிறகு திரும்பி வரவில்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

விசாரணைக்காக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து டிஜி உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

வீடு இடிப்பு நடவடிக்கைகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முஃப்தி, இது குறித்து கேள்வி எழுப்பினார்.

"பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பயங்கரவாதிகளுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இடையில் வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களை அரசு தனிமைப்படுத்தக்கூடாது.

ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளின் வீடுகளுடன் சாதாரண காஷ்மீரிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.