You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: திருப்பரங்குன்றம் தூண் வழக்கு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய் என நீதிபதிகள் கூறியதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன? இந்த சர்ச்சையின் முழு பின்னணி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பிலும் சமர்ப்பிக்க தவறிவிட்டதாக நீதிபதிகள் கூறியதாக லைவ் லா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தீபத்தூணில் தீபமேற்ற கோரி வழக்கு தொடுத்தவர்களுள் ஒருவரான அரசுபாண்டி என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்' என நீதிபதிகள் கூறியதாகவும் லைவ் லா செய்தி கூறுகிறது.
அந்த மலை பாதுகாக்கப்பட்ட தளம் என்பதால், எந்தவொரு நடவடிக்கையும் இந்திய தொல்லியல் துறை சட்டத்தின்படியே இருக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், விளக்கு ஏற்ற எத்தனை பேர் செல்லலாம் என்பது இந்திய தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கலாம் என கூறியதாகவும் லைவ் லா செய்தி கூறுகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறி இருந்தார்.
ஆனால், டிசம்பர் 3 அன்று வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி மலை உச்சியில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு