பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது - இதுவரை தெரிந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைமுறைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் நோர்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்திற்கு காவல் துறையின் கார்கள் வந்தடைந்த படங்கள் நேற்று (பிப்ரவரி 19) காலை வெளியாகியுள்ளன.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை முன்னாள் இளவரசர் மவுண்ட்பேட்டன் - வின்ட்சர் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரை விசாரித்து வருவதாக, தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை கூறியதைத் தொடர்ந்து இந்த கைது சம்பவம் நடந்தது.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கடுமையாக மறுத்துவருகிறார்.
ஆண்ட்ரூ தங்கியிருந்த சாண்ட்ரிங்ஹாமில் பல வாகனங்கள் காணப்பட்டன. அவை அடையாளங்கள் இல்லாத போலீஸ் வாகனங்கள் என்று நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Bav Media
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு
பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்து அவர் ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இருப்பினும், ஆண்ட்ரூ எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சமீபத்தில் அவரது இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிபிசி நியூஸ் புரிந்துகொள்கிறது.

பட மூலாதாரம், Bav Media
காவல்துறை கூறியது என்ன?
ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டது தொடர்பாக தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "விசாரணையின் ஒரு பகுதியாக இன்று நோர்ஃபோக்கில் ஒருவரை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நோர்ஃபோக்கில் உள்ள முகவரிகளிலும் சோதனைகளை நடத்தியுள்ளோம். தற்போது அந்நபர் போலீஸ் காவலில் உள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயரை தேசிய வழிகாட்டுதலின்படி நாங்கள் வெளியிடவில்லை." என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக உதவி தலைமை கான்ஸ்டபிள் ஆலிவர் ரைட் கூறுகையில், "முழுமையான ஆய்வைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த வழக்கு மீதான பொது நலனின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் புரிந்துகொள்கிறோம், தகுந்த நேரத்தில் இதுகுறித்து மேலதிக தகவல்களை வழங்குவோம்." என தெரிவித்தார்.
யார் இந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்?

பட மூலாதாரம், Max Mumby/Indigo/Getty Images
பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் தான் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன், கடந்தாண்டு அவர் தன்னுடைய இளவரசர் பட்டத்தை இழந்தார், பின்னர் விண்ட்சர் கோட்டையில் உள்ள அரச இல்லத்திலிருந்து (Royal Lodge) வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக பல வாரங்கள் நிகழ்ந்த தீவிரமான விவாதத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசரின் சகோதரர் இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் - விண்ட்சர் என்று மட்டுமே [இளவரசர் அல்ல] அறியப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












