You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அற்புதம் நிகழ்த்திய 2 புதுமுக வீரர்கள் - என்ன சாதித்தனர்?
காபாவில் வெஸ்ட் இண்டீஸ், ஐதராபாத்தில் இங்கிலாந்து என வெளிநாட்டு மண்ணில் மகத்தான வெற்றியை படைத்திருக்கின்றன இரண்டு அணிகள்.
ஐதராபாத்தில் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆலி போப் பேட்டிங்கில் வலு சேர்க்க டாம் ஹார்ட்லே பந்துவீச்சில் இந்திய அணியை சுருட்டியிருக்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து போட்டி
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஐதராபாத்தில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
அடுத்து களமிறங்கிய இந்தியா 436 ரன்களை சேர்த்தது. யசஷ்வி ஹெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர்.
190 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஒருபக்கம் இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்களை மளமளவென சரிய, மறுபுறம் களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ஆலி போப். அவரைத் தவிர்த்து இங்கிலாந்து தரப்பில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. ஆனால் நிதானமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார் ஆலி போப்.
இந்திய அணியின் பவுலர் ஆலி போப்பை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது, ஆனால் கடைசி ஆளாகத்தான் அவரை ஆட்டமிழக்கச் செய்தது இந்தியா. அப்போது ஆலி போப் 196 ரன்களை விளாசியிருந்தார். வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை பும்ராவின் பந்துவீச்சில் நழுவவிட்டார்.
ஆலி போப்பின் சிறந்த பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களை சேர்த்தது.
டாம் ஹார்ட்லே அசத்தல் பந்துவீச்சு
231 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார் இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்டிலே. யஷஸ்வி ஹெய்ஷ்வால், சுப்மன் கில், ரோஹித் சர்மா, அக்சர் படேல் என டாப் ஆர்டர்களை சாய்க்கத் துவங்கினார் டாம் ஹார்ட்லே. மிடில் ஆர்டரில் வந்த வீரர்களால் நிலைத்து ஆட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் பரத்தும் அஷ்வினும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்துவிட்டார் டாம் ஹாட்லே. இந்தியாவின் இறுதி நம்பிக்கையாக அஷ்வின் மட்டுமே இருந்தார். அவரும் டாமின் பந்துவீச்சில் அடித்து ஆட மூயன்று விக்கெட்டை பறிகொடுத்தார்.
பும்ராவும் – சிராஜும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் போராடினர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் டாம் ஹார்டிலேவை பந்துவீசச் செய்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல்முறை.
இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே அறிமுக ஆட்டத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லே 131 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை அளித்தார். வெறும் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 7 இக்கெட்களையும் சாய்த்து அமர்களப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷமர் ஜோசஃப் அசத்தல்
எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர்? என்ன நடந்தது?
காணொளியில் விரிவாக பார்க்கலாம்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)