You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வானில் மிதக்கும் நீளமான ‘பறக்கும் நதிகள்’ இந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்துமா?
இந்தியாவில் சில வாரங்களுக்கு முன் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான்.
ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பெருமளவு பாதிப்புகளை உண்டாக்குகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது.
தற்போது விஞ்ஞானிகள் 'வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
'பறக்கும் நதிகள்' என அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலில் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.
இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது.
இந்த 'வானத்தில் உள்ள நதிகள்' பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)