You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் அமெரிக்க ஆயுதங்களை தவறாக பயன்படுத்தியதா இஸ்ரேல்? அறிக்கை கூறுவது என்ன?
காசா போரில் சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இஸ்ரேல் உள்ளிட்ட போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அமெரிக்க ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தின என்பது குறித்து மதிப்பாய்வு செய்ய வெள்ளை மாளிகை உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை சமர்பிக்கப்பட்டது.
அமெரிக்காவிடம் வாங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் அளித்த உத்தரவாதத்திற்கு மாறான வழிகளில் பயன்படுத்தியது குறித்து மதிப்பீடு செய்வது அவசியம் என அந்த அறிக்கை கூறுகிறது.
அது குறித்து அமெரிக்காவிடம் முழுமையான தகவல்கள் இல்லை என்றும், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை தொடரலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை காசாவில் சில இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்குரிய தெளிவான கண்டனமாக இருந்தாலும், இஸ்ரேல் ராணுவம் சர்வதேச சட்டத்தை மீறியதாக உறுதியாக கூறவில்லை.
காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு அசாதாரண ராணுவ சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக கூறும் அந்த அறிக்கை, அமெரிக்க ஆயுதங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவது தொடர்பாக இஸ்ரேலிடம் பெற்ற உத்தரவாதங்கள் நம்பகமானவை என்றும் கூறுகிறது.
ஹமாஸ் பொதுக்கட்டடங்களை ராணுவ நோக்கங்களுக்காகவும், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்துவதால், போர்க்களத்தில் சரியான இலக்குகளைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதை தடுப்பதற்கான அறிவு, அனுபவம் மற்றும் கருவிகளைக் கொண்டுள்ளது" என அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் காஸாவில் ஏற்பட்டுள்ள அதிக அளவிலான பொதுமக்கள் உயிரிழப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் அவற்றை திறம்பட இஸ்ரேல் பயன்படுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான பாதிப்பை தடுக்க இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளை சீரற்றவை, பயனற்றவை மற்றும் போதுமானதாக இல்லை என ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் குறிப்பிட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
போர் தொடங்கிய தொடக்க மாதங்களில் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை அதிகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், இந்த நிலை தற்போது மாறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தயாரித்தவர்களில் ஒருவரான, துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் சாட்டர்ஃபீல்ட் பிபிசியிடம் கூறுகையில், இந்த வகையில் வரக்கூடிய முதல் அறிக்கை இது என்றும், இஸ்ரேல் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் என்றும் கூறினார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உலகம் கண்டிராத ஒரு மோதல் என்று குறிப்பிட்ட அவர், மிகவும் வெளிப்படையான, நம்பகமான அறிக்கையை உருவாக்குவதில் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சித்ததாக கூறினார்.
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு வழங்கும் சில குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
ரஃபா மீது படையெடுக்க கூடாது என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு, தேவைப்பட்டால் இஸ்ரேல் தனித்து நிற்கும் என்று கூறியிருந்தார்.
திங்கட்கிழமைக்குப் பிறகு 80,000க்கும் மேற்பட்ட மக்கள் ரஃபாவிலிருந்து வெளியேறி விட்டதாக ஐ.நா கூறுகிறது, ராஃபாவில் தொடரும் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் டாங்கிகளையும் இஸ்ரேல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய படைகள் தங்கள் நடவடிக்கையின் தொடக்கமாக எகிப்துடனான ரஃபா எல்லையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து மூடியுள்ளன.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 252 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காஸாவில் குறைந்தது 34,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)