தென்காசி தனியார் பேருந்து விபத்தில் நடந்தது என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

தென்காசி தனியார் பேருந்து விபத்தில் நடந்தது என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகில் கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற தனியார் பேருந்தும், சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்குச் சென்ற தனியார் பேருந்தும் இடைக்கால் என்ற ஊருக்கு முன்பாக உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயங்களுடன் உயிர்தப்பினர். எலத்துார் காவல் நிலையத்தில் பதிவான வழக்கின்படி, விபத்தில் 96 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் பிபிசி தமிழ் களஆய்வு செய்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், உயிர் தப்பியவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் பலரையும் நேரில் சந்தித்துப் பேசியது.

இறந்துபோன 7 பேரில் புளியங்குடி ரோட்டரி கிளப் வீதியைச் சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். உறவினர் ஒருவரின் மரண நிகழ்வுக்கு சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மல்லிகாவின் கணவர் முத்துராமன், 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மல்லிகாதான் தன்னுடைய ஒரு மகன் மற்றும் இரு மகள்களை படிக்க வைத்துள்ளார். இவர்களில் மூன்றாவது மகள் கீர்த்திகா (வயது 33) பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

கீர்த்திகாவின் நிலை குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கீர்த்திகாவிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணி நியமன ஆணை வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கீர்த்திகாவின் இல்லத்திற்கு வந்து இதற்கான ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

பிபிசி தமிழிடம் பேசிய கீர்த்திகா, ''என் 5 வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் எனக்கு எல்லாமே அம்மாதான். அவர்தான் பீடி சுற்றி என்னை எம்.ஏ. பி.எட் படிக்க வைத்தார். விபத்து நடந்த அன்று காலையில் சீக்கிரமே வந்துவிடுவதாக சொல்லிவிட்டுத்தான் சென்றார். பேருந்து மெதுவாகச் சென்றிருந்தால் என் அம்மாவுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.'' என்றார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு