குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த பதில் - யாருக்கு சாதகம்?
இந்தியாவில் சட்டம் இயற்றும் மன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குடியரசுத் தலைவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த பதில்கள் மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்கு முரணான கடந்த காலத் தீர்ப்புகள் என்ன ஆகும்?
தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, இப்படி மசோதாக்களை நிறுத்தி வைப்பது 'சட்டவிரோதம்' எனக் கூறி, சட்டப்பிரிவு 142இன் கீழ் தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. அதோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 200 மற்றும் 201இன் கீழ் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து 'ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா?' எனக் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ 'குறிப்பு' (Presidential reference) ஒன்றை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இந்திய அரசமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட இந்தக் குறிப்பில், "மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?" என்பது உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் முன்வைத்திருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்தூர்கர் அடங்கிய அமர்வு பத்து நாட்களுக்கு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 20) நீதிபதிகள் அமர்வு பதிலளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் முன்வைத்த 14 கேள்விகள் என்னென்ன என்பதையும் அதற்கு நீதிமன்றம் அளித்த பதில்கள் என்னென்ன என்பதையும் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



