காணொளி: 'அச்சுறுத்தலை அமெரிக்கா கைவிட வேண்டும்' - இரான் வெளியுறவு அமைச்சர்
இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், "அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சட்டவிரோத தடைகள், ராணுவ மிரட்டல்கள், படைபலத்தை எச்சரிக்கையாக காட்டுவது மற்றும் அமெரிக்கா படை பயன்படுத்தும் சாத்தியம் குறித்து வெளிப்படையான எச்சரிக்கைகள் விடுப்பதை தொடர்ந்து செய்கின்றன. அந்த பிராந்தியத்தில் பெரிய அளவில் ராணுவத்தை நிலைநிறுத்துவதும் இதில் அடங்கும்.
இத்தகைய செயல்கள், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 2, பத்தி 4ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘படை மிரட்டல் அல்லது பயன்படுத்தல் தடை’ விதியை தொடர்ந்து மீறுவதாகும். இது உடனடியாகவும் எந்த நிபந்தனையுமின்றி நிறுத்தப்பட வேண்டும்.
மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, இரான் எப்போதும் அர்த்தமுள்ள மற்றும் முடிவுகள் தரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளது.
பிராந்திய நட்பு நாடுகளின் உதவியால் - இன்று ஜெனீவாவில் அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த ஒரு புதிய வாய்ப்பு உருவானது.
இந்த பேச்சுவார்த்தைகள், தொடர்புடைய அனைத்து தரப்புகளுக்கும் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் பயன் தரும் நிலையான தீர்வை உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அதே நேரத்தில், ஜூன் 13, 2025 அன்று நடந்த தாக்குதலின்போது நிரூபிக்கப்பட்டதுபோல், எந்தவொரு மிரட்டல் அல்லது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிராக இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது.
இரானுக்கு எதிரான எந்த தாக்குதலின் விளைவுகளும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே முடங்கிபோகாது." என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



