ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலின் போது என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை. அன்றைய தினம் நடந்த சம்பவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
உடைந்த வீடுகள், வெறிச்சோடிய தெருக்கள் மற்றும் அச்சம் நிலவும் சூழல், கடந்த சில நாட்களாக பூஞ்சில் இதுதான் நிலைமை. பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடந்த ஷெல் தாக்குதல் இங்கு பல உயிர்களைக் கொன்றது, பலரைக் காயமடைய வைத்தது.
அவர்களின் குடும்பத்தினர் தற்போதும் அந்த வலியைத் தாங்கி வருகின்றனர்.
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அம்ரிக் சிங்கும் ஒருவர். அவரின் சகோதரர் மன்மோகன் சிங் அன்று நடந்ததை பிபிசியிடம் விவரித்தார்.
"இரவில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஷெல் தாக்குதல் தொடங்கியது. விடிந்ததும் காலையில் வழக்கம்போல், மக்கள் தங்கள் வேலைகளுக்காக வெளியே வந்தனர். நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் தொடங்கியது" என்றார்.
ஷெல் குண்டு விழுந்த இடத்தைக் காண்பித்து விவரித்த மன்மோகன் சிங் நகரத்தின் மூன்று பக்கங்களிலும் எல்லைகள் உள்ளன என்றார். தொடர்ந்து பேசியவர், "ஒரு ஷெல் இங்கே விழுந்தது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரு ஷெல் இங்குவந்து விழுந்தது. இந்தப்பக்கம் நமது ஒரு எல்லை இருக்கிறது, அதோ, அங்கு மற்றொரு எல்லை இருக்கிறது. மூன்றாவது எல்லை இந்தப்பக்கம் உள்ளது. இந்த இரண்டு கடைகளும் பேஸ்மெண்ட் போல ஆழமானவை. இவர்கள் தங்கள் குழந்தைகளை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விட முயற்சி செய்தார்கள். ஷெல்லிங் தொடங்கிவிட்டது. குழந்தைகளை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தபோது குண்டுகள் இங்கே விழுந்தன. குண்டுகளால் தாக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்தார்கள்" என்றார்.
அம்ரீக் சிங் கடை நடத்தி வந்தார், பூஞ்சில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களின் புனித நூல் வாசிப்பிலும் ஈடுபடுவார். மே 7 அன்று, இந்த குருத்வாராவிலும் ஷெல் தாக்குதல் நடந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லை. அம்ரீக் சிங்கின் மரணத்தை சமாளிப்பது எளிதாக இல்லை என்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.
அம்ரிக் சிங்கின் சகோதரர் ஹர்ஜித் சிங் தங்களுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது என்கிறார். மேலும் அவர் ,"எங்கள் சகோதரனை நாங்கள் ஒருபோதும் திரும்பப் பெறப் போவதில்லை. குழந்தைகளை அடித்தளத்திற்கு கூட்டிச் சென்றார். என்னையும் அப்படியே செய்யச் சொன்னார். அவர் ஷட்டரைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார். ஆனால் வெடிப்பு ஏற்பட்டு ஷெல் ஷட்டரைத் துளைத்தது" என்றார்.
அம்ரிக் சிங்கின் மகள் ஜப்னித் கௌர் தங்களுக்கு நீதி வழங்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசியவர், "இது நடக்கும் என்று எங்களுக்கு எப்படி தெரியும்? இரண்டு நிமிடங்களில் அவர்கள் என்ன மாதிரியான நீதியை வழங்குகிறார்கள்? எனக்கு எதுவும் புரியவில்லை. பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அவர்கள் ஆபரேஷன் சிந்தூர் நடத்தினார்கள். இப்போது எங்களுக்காகவும் ஏதும் உள்ளதா? தங்கள் சொந்த வீட்டிலிருந்து ஒருவரை இழந்தவருக்கு மட்டுமே இது எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
ஷெல் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் சிங்கும் கொல்லப்பட்டார். ரஞ்சித் சிங்கின் சகோதரர் பல்பீர் சிங் பேசுகையில், "என் சகோதரர் இங்கே படுத்திருந்தார். நான் அவரைத் தூக்கி அவரது உடலை நேராக வைத்தேன், அந்த நேரத்தில், சற்று சூடாக இருந்தது. அண்டை வீட்டார் உதவியுடன் அவரை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அவர் இரண்டு முறை மட்டுமே சுவாசித்தார், பின்னர் அந்த இடத்திலேயே இறந்தார். இதற்கு முன் நடந்த போர்களை நாங்கள் பார்த்ததில்லை. நேற்று இரவு நாங்கள் கண்டது போன்ற ஷெல் தாக்குதல்கள் அந்தப் போர்களில் கூட இல்லை என்று கூறுகிறார்கள்" என்றார்.
பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த 13 வயது விஹான் பார்கவும் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர், அன்று காலை பூஞ்சிலிருந்து புறப்படுவதற்காக வாகனத்தில் ஏறியபோது, திடீரென ஒரு ஷெல் வெடித்ததாக நம்மிடம் தெரிவித்தனர். இதில் விஹான் கொல்லப்பட்டார், அவரது தாயார் மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர். துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் கேமராவில் பேச முடியாத நிலையில் இருந்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



