உசேன் போல்ட்டை விட வேகமாக மனிதரால் ஓட முடியுமா? அறிவியல் கூறுவது என்ன?
மனிதர்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியும்?
ஜமைக்காவைச் சேர்ந்த நட்சத்திர தடகள வீரர் உசேன் போல்ட், 100 மீட்டர் தொலைவை 9.58 நொடிகளில் ஓடி சாதனை படைத்தார்.
அவர் தன் அதிகபட்ச வேகத்தில் ஒரு மணிநேரத்திற்கு 44.72 கிலோமீட்டர் தொலைவை ஓடிக் கடந்தார்.
அதைவிட வேகமாக நம்மால் ஓட முடியுமா?
நாம் எவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்பதை, நம் மரபியல், உணவு முறை, மற்றும் உடற்பயிற்சி செய்யும் விதம் ஆகியவை தீர்மானிக்கின்றன.
நாம் தரையின் மீது எவ்வளவு பலத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மனிதர்களின் வேகம் அமையும் என, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் வேயண்ட் நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
அதன்படி, ஒரு மணிநேரத்தில் 50 முதல் 65 கிலோமீட்டர் வரையிலான தொலைவை கடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
இதற்கு, 9 நொடிகளில் 100 மீட்டர் தொலைவை அடைய வேண்டும். இது, குதிரைகள், நாய்கள், மற்றும் கங்காருக்கள் ஆகியவை ஓடுவதற்கு இணையான வேகமாகும்.
ஆனால், நம் கை, கால்களின் நீளம் போன்ற உடலியல் கட்டுப்பாடுகளைப் பொறுத்து, ஒரு மணிநேரத்திற்கு 50 கிலோமீட்டர் தொலைவு ஓடுவதென்பது சாத்தியமற்றது என அதே ஆய்வு கூறுகிறது.
மனிதர்களின் மரபணுக்களை மாற்றி இந்தத் தொலைவை அடையலாம் என்பது தர்க்க ரீதியாக சாத்தியமாக இருக்கலாம், ஆனால் அது விளையாட்டுத் துறையில் சட்டவிரோதமானது.
உசேன் போல்ட்டின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா? முடியும் என்றாலும் இப்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு.



