You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு நடுவே, இந்த கூட்டத்தில், நீதித்துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்கள் உடன் அனுப்பவில்லை என திமுகவை கண்டித்து தீர்மானம் என மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தங்களுக்கு திமுக மட்டும் எதிரி அல்ல, நம்மோடு உறவாடி கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என பேசினார்.
மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும், கடந்த தேர்தல்களில் தேர்தலுக்கு 1 மாதத்துக்கு முன்புதான் கூட்டணி அமைத்தோம். அதேபோல இப்போதும், 2026 தேர்தலுக்கு முன்பு அற்புதமான கூட்டணி அமைக்கப்படும் என இபிஎஸ் தெரிவித்தார்.
தீர்மானங்களில் ஒன்றாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16 தீர்மானங்களில் ஒன்றாக திமுக அரசில் அதிகளவில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டி திமுக அரசை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், 'எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றி பேசுகிறார். ஆனால், அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கத்தான் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார்" என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் வழக்கில் சட்டப்படி எது சரி என்பது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
இந்த தீர்மானங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம், "ஒரு குறிப்பிட்ட விவகாரத்தை பற்றி எந்த தீர்மானமும் இன்றி மிகவும் பொதுப்படையாக அனைத்து தீர்மானங்களும் உள்ளதாக" தெரிவித்தார்.
மேலும், எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு நடுவே," நீதித்துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது" எனும் தீர்மானம் ஆகிய இரண்டும் எடப்பாடி பழனிசாமியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என ஜென்ராம் கூறினார்.
கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றி கேட்டபோது, "கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் ஏன் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்திக்கின்றனர்," என்றும் ஜென் ராம் கேள்வியெழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு