ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - அமெரிக்க அதிபர் மாளிகை கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ரஃபாவின், ஷபூரா முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - அமெரிக்க அதிபர் மாளிகை கூறியது என்ன?

ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து பல்வேறு உலக நாடுகள் கண்டித்துவரும் நிலையில், இஸ்ரேல் தெற்கு ரஃபாவில் முழு அளவிலான படையெடுப்பை துவக்கியதாக அமெரிக்கா நம்பவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மையப்பகுதியை அடைந்து, எகிப்து எல்லைக்கு அருகே உள்ள ஒரு முக்கிய மலையை கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியான சில மணிநேரங்களுக்கு பிறகு ஜான் கிர்பி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஃபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய மனித பேரழிவு ஏற்படும் என அஞ்சப்பட்டு வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் இனப்படுகொலை வழக்கு குறித்த விசாரணையின்போது ஒரு அவசர கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் தெற்கு ரஃபாவில் ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே, ரஃபா நகரின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்அவிவ் மீது ஹமாஸ் குழு ஏவுகணை தாக்குதலை தொடுத்தது. இதன் பின்னர் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஹமாஸின் மூத்த படைத்தளபதிகள் இருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அந்த இருவரும் கொல்லப்பட்டார்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஐநா பாதுகாப்பு கிடங்கு அருகே இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வீடியோக்களும் வெளியாயின.

பிபிசிக்கு கிடைத்த காணொளிகளில், ரஃபா மருத்துவமனை நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது. அதேவேளை, இந்த தாக்குதல் ஹமாஸ் படைத்தளபதிகளை குறிவைத்தே நடதப்பட்டதாகவும், ஹமாஸ் வெடிபொருள் கிடங்கு அருகில் இருந்ததால் தீ ஏற்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு பிறகும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கடும் குண்டு சத்தத்தை கேட்டதாக, ரஃபாவில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இஸ்ரேல், பயங்கரவாத இலக்குகளை மட்டுமே குறிவைத்து தனது நடவடிக்கையை தொடர்வதாக கூறுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஹமாஸுக்கு எதிரான போரில் ரஃபாவை கைப்பற்றாமல் வெற்றியை அடைய முடியாது என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) முதன்முதலில் ஹமாஸ் போராளிகள் மற்றும் உள்கட்டமைப்பிற்கு எதிரான "இலக்கு வைக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை மே 6 அன்று ரஃபாவின் கிழக்கில் தொடங்கியது.

அப்போதிருந்து, டாங்கிகள் மற்றும் துருப்புக்கள் படிப்படியாக கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு நுழைந்து, எகிப்துடனான எல்லை நோக்கி வடக்கிலும் நகர்ந்தது.

ரஃபா விவகாரத்தில் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தது.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் தஞ்சம் அடைந்துள்ளதாக நம்பப்படும் ரஃபாவின் முகாம்களுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் அந்நாட்டுக்கான ஆயுத விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியிடம் இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும், அதில், பெண்கள், குழந்தைகள் பலியானது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தாக்குதலுக்கு பிந்தைய புகைப்படங்கள் இதயத்தை நொறுக்குவதாகவும் பயங்கரமாக இருப்பதாகவும் விவரித்தார்.

இந்த மோதலின் காரணமாக அப்பாவிகள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்றும் தனது பதிலில் அவர் குறிப்பிட்டார்.

ஜோ பைடனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை இந்த தாக்குதல் மீறியுள்ளதாக என வெள்ளை மாளிகை செய்தியாளரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘கொள்கை மாற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை. ரஃபாவில் எந்தவொரு பெரிய அளவிலான தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வதையும் அமெரிக்கா ஆதரிக்காது.

இஸ்ரேல் அப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தால், ஆதரவளிப்பதில் நாங்கள் வேறு விதமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என அதிபர் சொல்லியிருக்கிறார்.

இப்போதைக்கு நாங்கள் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் பார்க்கவில்லை. ரஃபாவில் இஸ்ரேல் பெரிய அளவில் படைகளுடன் செல்வதையோ, படைகள் ஒருங்கிணைந்த தரைவழி தாக்குதல் நடத்துவதையோ நாங்கள் பார்க்கவில்லை என்றார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. தாக்குதலைக் கண்டித்து ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாலத்தீன ஆதரவாளர்கள் பேரணி மேற்கொண்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதலில் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு வரும் எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மற்றும் ஜோர்டான், குவைத், சௌதி அரேபியா, துருக்கி ஆகிய பிராந்திய நாடுகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காஸாவை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றும் திட்டமிட்ட கொள்கையின் ஒருபகுதிதான் இந்த தாக்குதல் என எகிப்து கூறியுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் தற்போதைய மத்தியஸ்த நடவடிக்கைகளை இது சிக்கலாக்கும் என்றும் கத்தார் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக ஜோர்டான் குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தொடர் படுகொலைகளில் ஈடுபடுவதாக சௌதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

துருக்கி அதிபர் எர்துவான் இந்த காட்டுமிராண்டித்தன தாக்குதல் மற்றும் கொலைகளுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறச் செய்வோம் என உறுதி பூண்டுள்ளார்.

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்

பட மூலாதாரம், REUTERS

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)