காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?
காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?

நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்போது ஊழலுக்கு எதிரானதாக மாறியுள்ளது. அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளுக்கு வந்தனர். இதையடுத்து நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி? இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

சமூக ஊடகத்துக்கு தடை

கடந்த வாரம், நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களை தடை செய்ய உத்தரவிட்டது. வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் அந்த தளங்கள், நேபாள தகவல் தொடர்பு அமைச்சகத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளவில்லை என நேபாள அரசு கூறுகிறது.

இந்த தடையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களும் அடங்கும்.

இளைஞர்கள் கொந்தளிப்பு ஏன்?

டேட்டா ரிப்போட்டல் சமீபத்திய தரவுகளின்படி 2025 ஜனவரியை எடுத்துக்கொண்டால் நேபாளத்தில் ஒரு கோடியே 43 லட்சம் சமூக ஊடக பயனர்கள் உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 48.1 சதவீதமாகும். தெற்கு ஆசியாவில் மக்கள் தொகை அடிப்படையில் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் பயனர்களை கொண்ட நாடாக நேபாளம் உள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அங்குள்ள இளம் தலைமுறையினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், போலி செய்திகள், வெறுப்பு பேச்சுகள், இணைய மோசடி போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த தடை அவசியம் என நேபாள அரசு கூறுகிறது. எனினும், இதை ஏற்க மறுத்து Gen Z என தங்களைக் கூறிக்கொள்ளும் இளம் தலைமுறையினர் திங்களன்று பெருந்திரளாக தலைநகர் காத்மாண்டுவில் கூடினர்.

போராட்டம், வன்முறை, துப்பாக்கிச்சூடு

சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டமாக இது தொடங்கினாலும், பின்னர் ஊழலுக்கு எதிரான, அரசுக்கு எதிரான போராட்டமாக இது மாறியது. நாட்டை ஊழலில் இருந்து மீட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறினர்.

போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்கள் போன்றவற்றுக்கு தீ வைத்தனர்.

காவலர்களுடன் மோதல், கல்லெறி தாக்குதலிலும் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் - போலீசார் இடையேயான மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காத்மாண்டுவில் ஒருசில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

போராட்டம், வன்முறை ஆகியவற்றை தொடர்ந்து சமூக ஊடக தடையை நேபாள அரசு நீக்கியது.

2வது நாளாக தொடர்ந்த போராட்டம்

சமூக ஊடகத்துக்கு எதிரான தடை நீக்கப்பட்டாலும் இரண்டாவது நாளாக இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊழல், அரசியல் தலைவர்கள் வாரிசுகளின் பகட்டான வாழ்க்கை போன்றவற்றுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

காத்மண்டுவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அதனையும் தாண்டி இளைஞர்கள் கூடினர்.

நாட்டின் பல்வேறு தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பது, அதன் மீது கல்லெறிவது போன்றவற்றில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சி அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.

அசாதாரண சூழல் காரணமாக நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள விமான நிலையம் பகுதியளவு மூடப்பட்டது.

நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், விவசாயம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ராம் நாத் அதிகாரி , நீர் வழங்கல் துறை அமைச்சர் பிரதீப் யாதவ் ஆகியோர் செவ்வாயன்று தனது பதவியை ராஜினாமா செய்தனர்.

இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வு காண வழி வகுக்கும் வகையில் தான் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்மா ஒலியின் ராஜினாமாவையொட்டி போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேபாளத்தின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அதன் அண்டை நாடான இந்தியா கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு