தூத்துக்குடி: ஓடும் வண்டியில் பிரசவம் பார்த்த திருநங்கைகள் - மழையில் பூத்த மனிதநேயம்
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பொழிவால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கற்பகவள்ளி, மழை வெள்ளத்தால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார்.
திடீரென பிரசவ வலியில் துடித்த அவரை, திருநங்கைகள் சிலர் சரக்கு வாகனம் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கற்பகவள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அவரை அழைத்து சென்ற நபர்களே வண்டியில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பின்னர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தாய் – சேய் இருவரையும் ரப்பர் படகு மூலம் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



