You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தாலிபன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் தவிர்ப்பா?
இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை சந்தித்து பேசினார். பின், வெள்ளிக்கிழமை அமீர் கான் முத்தக்கி புது டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு தாங்கள் அழைக்கப்படவில்லை என பல பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அஹமது தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் செய்தியாளர் சந்திப்பின் படங்களை வெளியிட்டிருந்தார். அந்த படங்கள் ஒரு பெண் பத்திரிகையாளர் கூட அங்கு இல்லை என்பதை காட்டுகிறது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, "நரேந்திர மோதி அவர்களே செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் இடம்பெறாதது குறித்த உங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோதியை விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் பெண் பத்திரிகையாளர்களை ஒதுக்கிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த இந்திய அரசு எப்படி அனுமதிக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஏன் ஆண் பத்திரிகையாளர்கள் அந்த அறையில் இருந்தனர் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், "ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு